Posted by plotenewseditor on 19 December 2014
Posted in செய்திகள்
திருக்கோவில் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இருவர் கைது-
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரம் இடம்பெறவிருக்கும் மைதானத்தில் நேற்றிரவு சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இருவரை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆளும்கட்சி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புஸ்பகுமாரின் (இனியபாரதி) ஏற்பாட்டில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நாளை தேர்தல் பிரசாரம் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் 22, 23 வயதுகளையுடைய திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களாவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சியில் எலும்புக்கூடு மீட்பு-
யாழ். வடமராட்சி முள்ளிப் பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் எலும்புக்கூடு நேற்று மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் புல் வெட்டிக்கொண்டிருந்த இராணுவத்தினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், அவ்விடத்துக்கு பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலனுடன் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். தேங்காய் மட்டைகளுக்குள் வைத்து எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இந்த எலும்புக்கூடானது, கடந்த சில நாட்களுக்கு முன்னரே எரியூட்டப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர். எலும்புக்கூட்டுடன் பெண்கள் அணியும் ஆடைகளின் பாகங்களும் மீட்கப்பட்டன. நீதவானின் உத்தரவுக்கமைய பரிசோதனைக்காக எலும்புக்கூடு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பில விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டயகமவில் வீடமைப்புத் திட்டப் பணிகள்; ஆரம்பம்-
டயகம பிரதேசத்தில் அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. மலையகத்தில் 50,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தின் ஊடாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அத்தோடு டயகம வெளர்லி தோட்டப்பகுதியில் வீடுகள் அற்றநிலையில் உள்ளவர்களுக்காக 75 வீடுகள் அமைக்கப்படவுள்ளதோடு மொத்தம் இப்பிரதேசத்தில் 100 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
மீனவர்கள் தொடர்பில் இலங்கை இந்தியா இடைபே பேச்சு-
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான அனைத்துகட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ராஜ்யசபாவில் அறிக்கை ஒன்றை முன்வைத்து இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் இலங்கை அதிகரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இலங்கை – இந்திய கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை காண்பது குறித்து இந்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். Read more