இலங்கையில் கொவிட் தடுப்பு மருந்தின் இரண்டாவது கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கூடுதலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

இந்தத் திட்டம் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

அடுத்த கட்ட தடுப்பூசிகள் கிடைத்த பின்னர் சுற்றுலாத் துறை சார்ந்தோருக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும்.

இதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, இருசாராருக்கும் இம்மாதத்திற்கு தடுப்பூசி ஏற்ற முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுற்றுலாத் துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த நிலையில், சுற்றுலாத் துறை சார்ந்த 20 ஆயிரம் பேரின் பெயர் பட்டியல் சுகாதார அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  நாட்டில் உள்ள ஆயிரத்து 700ற்கு மேற்பட்ட தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு விரைவில் தடுப்பூசி ஏற்றப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.