 இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள், பெண்களின் உரிமை மீறல்களைக் கண்டறிந்து, பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை(Gender Equity and Equality) உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்குமாறு அனைத்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே தலைமையிலான பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
உத்தேச பாராளுமன்றக் குழுவும் அதன் தவிசாளரும் சபாநாயகரால் நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன் அதன் அங்கத்தவர்கள் 25 உறுப்பினர்களைக் கொண்டமைதல் வேண்டும் எனப் பிரேரிக்கப்பட்டுள்ளது.
குழு அதன் முதல் கூட்டத்திலிருந்து ஒரு வருட காலத்துக்குள் குழுவின் அறிக்கையைப் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தல் வேண்டும் என்பதுடன் அது சமர்ப்பிக்கப்பட்டு 08 வாரங்களில் குறித்த அறிக்கை தொடர்பாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களின் அவதானிப்புகளையும் அது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளையும் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் என, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.
பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை விருத்தி செய்து, அதை மதித்தல், இலங்கையில் அனைத்து பெண்களையும் சிறுமிகளையும் வலுப்படுத்துவதை உறுதி செய்தல், பால்நிலை அடிப்படையில் பாகுபாடுகளுக்கு உட்பட்டவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற விடயங்களுக்காக இந்தப் பாராளுமன்றக் குழு பிரேரிக்கப்பட்டுள்ளது.
தொழில் வாய்ப்பு, பதவி உயர்வு வாய்ப்புகள், பணியிடங்களில் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்து வித பால்நிலை அடிப்படையிலான பாரபட்சங்கள் பற்றிய பெண்களின் குறைகளைக் கேட்டல், அனைத்துத் துறைகளிலும் அனைத்து மட்டங்களிலும் போதியளவான உள்ளூர் வளங்களின் ஒதுக்கீடு மற்றும் இலங்கையில் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான அணுகல் ஆகியவற்றைப் பரிசீலித்தல், அதற்காக முன்னிற்றல் உள்ளிட்ட 10 யோசனைகள் இந்தப் பாராளுமன்றக் குழுவால் நடைபெறவேண்டும் என, பெண் உறுப்பினர்கள் திட்டம் வகுத்துள்ளனர்.