கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த தொல்லியல் அகழ்வு நடவடிக்கை, தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்திரீஸ்வரர் கோவில் வளாகத்தில் அகழ்வுப் பணி மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம், மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்ந்தது.

இந்நிலையில், அங்கு தொல்லியல் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்காக, இன்று (24), தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்திருந்த போது, அப்பகுதியில் ஒன்றுதிரண்ட மக்கள், கோவில் வளாகத்தின் பிரதான வாயிலை மூடி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளவிடாது தடுத்துள்ளனர்.

இதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடனும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அமைதி நிலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைக்கான காரணம் தொடர்பில் இதன்போது பொலிஸாரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு இரு தரப்பினரையும் அழைத்து, சுமூகமான முறையில் தீர்ப்பது தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில், அங்கு கூடியிருந்த பொதுமக்களால் பொலிஸாருக்கு மகஜர் ஒன்றும்  கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்த தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதேவேளை, குறித்த தொல்லியல் அமைவிடப் பகுதியில் எவ்வித மாற்றங்களையும் செய்யக் கூடாதெனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகள் வரை, எவ்வித அகழ்வுப் பணிகளும் இடம்பெறாது எனவும் வாக்குறுதியளித்தனர்.

இதைத் தொடர்ந்து, அவ்விடத்தின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.