இனப்பிரச்சினைக்கும் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வை முன்வைக்கக்கூடிய வேட்பாளருக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும். இவ்விடயம் தொடர்பில் கூட்டமைப்பானது ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் நாடு திரும்பும்வரை இதற்காக காத்திருக்கின்றோம் என புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் தமது பரப்புரைகளின்போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான கருத்துக்களை கூறவில்லை. மாறாக, எதிர்மறையான கருத்துக்களையே தெரவித்து வருகின்றனர். சிங்கள பெரும்பான்மையின மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே இவ்வாறு எதிர்மறையான கருத்துக்களை இருபெரும் வேட்பாளர்களும் தெரிவித்து வருவதாகவே தெரிகின்றது. இவ்வாறான கருத்துக்களைக் கேட்டு சிங்கள மக்கள் வாக்குகளை வழங்குகின்றபோது இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு சிங்கள பெரும்பான்மையின மக்கள் ஆதரவு வழங்காத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். எதிர்மறையான கருத்துக்களை கேட்கும் சிங்கள மக்கள் தீர்வுக்கு இணங்கமாட்டார்கள். கடந்தகாலங்களில் இத்தகைய அனுபவங்களை நாம் பெற்றுள்ளோம். இந்த நிலையில் தீர்க்கமாக ஆராய்ந்தே தமிழ் தேசியக்கூட்டமைப்பு முடிவு எடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கும், அவர்களது நடைமுறைப் பிரச்சினைகளுக்கும் ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கக் கூடியவருக்கே கூட்டமைப்பு ஆதரவை வழங்க முடியும். திட்டமிட்ட குடியேற்றங்களை தடுக்கும் வகையிலும், மீள் குடியேற்றத்தினை மேற்கொள்ளும் வகையிலும், செயற்படக் கூடியவருக்கே ஆதரவு அளிக்க முடியும். இத்தகைய பிரச்சினைக்கான தீர்வினை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பவருக்கே ஆதரவு வழங்கும் சூழல் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்கள் நாடு திரும்பியதும் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் ஒன்றுக்கு கூட்டமைப்பு வரும் என்று தெரிவித்தார்.
யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஆரம்பமானது. இன்று இடம்பெற்ற மேற்படி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின்போது பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன், இதன்போது ஏற்பட்ட கலவரத்தினால் சிலர் காயமடைந்ததுடன், கூட்டமும் பின்போடப்பட்டது..




பாகிஸ்தான் இராணுவ பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 80 மாணவர்கள் உள்ளடங்குவதாக சந்தேகிக்கப்படுகிறது. பெஷாவரில் இராணுவப் பாடசாலையில் மாணவர்களை சிறைப்பிடித்து தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இராணுவ உடையுடன் நுழைந்த தெஹ்ரி-இ-தலிபான் இயக்கத்தினர் தாக்குதலை நடத்தியுள்ளனர். சீருடை அணிந்த 6 அல்லது 7 தீவிரவாதிகள் பாடசாலைக்குள் நுழைந்ததாகவும் உள்ளே துப்பாக்கிச்சூட்டு சத்தம் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு வசிரிஸ்தான் மற்றும் கய்பர் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் பொது மக்களை பணய கைதியாக வைத்திருந்த சம்பவம் தொடர்பில் விசேட காவல்துறையின் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. நேற்று காலை முதல் 16 மணி நேரம் பொதுமக்களை பணய கைதியாக வைத்திருந்த ஈரானிய தீவிரவாதி குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சிட்னி நகரத்தில் இடம்பெற்ற சம்பவம் பயங்கரவாதம் தொடர்பில் அவுஸ்ரேலியாவுக்கு பாடம் கற்றுக்கொடுத்துள்ளதாக ஆஸி பிரதமர் டோனி அபோர்ட் தெரிவித்துள்ளார். 16 மணி நேரத்திற்கும் அதிகமாக பணய கைதியாக வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை அந்நாட்டு பாதுகாப்பு துறையினர் அதிரடி தாக்குதல் மேற்கொண்டு மீட்டனர். இதன்போது ஈரானிய அகதியான ஹெரோன் மொனிஸ் என்ற தீவிரவாதி கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் பலியாகினர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர் டோனி அபோர்ட், இதனை வார்த்தையில் வர்ணிக்க முடியாது என்றார். சம்பவத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிவ் சவுத்வேல்ஸில் தேசியகொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
வவுனியா மதீனாநகரில் இன்றுகாலை (16.12.2014) மக்கள் சந்திப்பு ஒன்று அக்கிராம சங்கத் தலைவரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புளொட்டின் மத்தியகுழு உறுப்பினர்களான முன்னாள் வவுனியா நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினரான திரு. சு.ஜெகதீஸ்வரன் (சிவம்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் தனதுரையில், இப்பகுதி மக்களின் குறைகளை நான் நன்கறிவேன் இங்குள்ள மக்கள் இன மதங்களுக்கு அப்பால் சகோதரர்களாக வாழ்ந்து வருவதை நீண்ட காலமாக அவதானித்துள்ளேன் இம் மக்களுக்கு சேவை செய்வது எனது கடமையாகும். இம் மக்களுக்கு எனது வட மாகாண சபை உறுப்பினர்களுக்கான 2015ஆம் ஆண்டு நிதியில் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கான நிதியினை மிகவும் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களுக்கு வழங்குவேன் எனத் தெரிவித்தார் தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் மக்களின் குடும்ப நிலையினை தனித்தனியே கேட்டறிந்தார்