வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாய்வுக் கூட்டம்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பிரதிநிதிகளின் கருத்தறிதல் கூட்டமொன்று இன்றுமுற்பகல் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. வடகிழக்கு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற கருத்திறயும் கூட்டத்தின் தொடர்ச்சியாகவே வவுனியா மாவட்டத்தில் இன்று இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உட்பட மாகாணசபை உறுப்பினர்களும், பிரதேசசபைத் தலைவர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவிருக்கும் தீர்மானம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டு அவர்களின் கருத்துக்களும் அறியப்பட்டது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும்கூடி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஒரு முடிவினை எடுப்பது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி(இடது), புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் ஸ்தாபகரும், தலைவருமான அமரர் தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களின் 25ஆம் ஆண்டு சிரார்த்த தினத்தை முன்னிட்டு வெளியான லெனின் மதிவாணன் அவர்களின் சமூக இலக்கியத் தளங்களில் படைப்புக்களும், செயற்பாட்டாளர்களும் என்ற நூல் விமர்சன நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது. பேராசிரியர் தை.தனராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு ஆர் சங்கரமணிவண்ணன், மல்லிகைப்பூ சந்தி திலகர், எம். வாமதேவன், கலாநிதி ந.ரவீந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள். இந்நிகழ்வின் பிரதம அதிதியாக திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
