சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிபாலவுக்கு ஆதரவு-
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அந்தக் கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தை அறிவித்திருப்பதோடு நீதி அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றத்தையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர்-மைத்திரிபால-
நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்நிலையில் தாம் நல்லாட்சி ஒன்றை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படவிருப்பதாக, அவர் கூறியுள்ளார். மொரவக்க – நாயாமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் போல தேர்தல் சட்டங்களை மீறிய அரச தலைவர் யாரும் இல்லை. எதிர்கட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மேடைகளுக்கு தீ வைக்கப்படுகிறது. சுவரொட்டிகளை ஒட்டுகின்றவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுகிறது. இதுதான் தற்போதைய ஜனநாயகம் என்று மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தர பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்கள்-
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகின. இதில் அகில இலங்கை ரீதியாக விஞ்ஞான பிரிவில் மாத்தறை சுஜாதா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எச்.ஜீ.ஹிருணி உதாரா முதலாம் இடத்தைப் பிடித்துள்ளதோடு, மூன்றாம் இடத்தை திருகோணமலையைச் சேர்ந்த சிவகுமார் இந்துஜன் பெற்றுக் கொண்டுள்ளார். மேலும் கணிதப் பிரிவில் யாழ் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பாகியராஜ் தருகீசன் முதலிடத்தை வசப்படுத்தியுள்ளார். வர்த்தகப் பிரிவில் காலி சவுத்லண்ட் வித்தியாலயத்தின் பியூமி தனஞ்சனா முதலிடத்தைப் பெற்றுள்ளார். மேலும் கலைப்பிரிவில் கொழும்பு விஷாகா பாலிகா மகா வித்தியாலயத்தின் நெத்சலா பதிரண முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கைது-
பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரைக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவரை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வந்துரம்ப பகுதியில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் மேடையை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில், நிஷாந்த முத்துஹெட்டிகமவைக் கைதுசெய்யுமாறு, அண்மையில் பத்தேகம நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் கடந்த 26ம் திகதி வெளிநாட்டுக்கு சென்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
155 பேருடன் பயணிகள் விமானம் மாயம்-
இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற எயார் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது. இந்த விமானத்தில் 155 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. QZ 8501 என்ற இலக்கத்தை கொண்ட விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது. இந்த விமானத்தில் 7 விமானப்பணியார்களும் 155 பயணிகளும் இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
அசாதாரண காலநிலை காரணமாக 21 பேர் உயிரிழப்பு-
17 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அசாதாரண காலநிலையின் காரணமாக இதுவரையில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 15 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 10 லட்சம் பேர் வரையில் அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 4 ஆயிரத்து 200க்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. பதுளை – ரில்பொலவில் ஏற்பட்ட மண்சரிவின் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. நேற்று 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதன்படி அங்கு 8பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை ஹப்புத்தளை தோட்டத்திலும், தம்பபேத்தனை தோட்டம் உள்ளிட்ட சில பகுதிகளிலும் காணப்படும் தோட்ட குடியிருப்பு சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
யாழ்தேவி காங்கேசன்துறையை அடைந்தது
யாழ்ப்பாணம் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறையை நோக்கி யாழ்தேவி, இன்று தனது பரீட்சார்த்த சேவையை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தையும் ஊடறுத்து யாழ்தேவி புகையிரதம் காங்கேசன்துறையை அடைந்துள்ளது. இந்த பரீட்சார்த்த சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்து, காங்கேசன்துறைவரை புகையிரதத்தில் பயணம் செய்துள்ளார். எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி ஜனாதிபதியினால் யாழ்தேவி புகையிரதசேவை காங்கேசன்துறைவரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.