Header image alt text

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்-

imagesCAQRB1O0கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் 4,279 நிலையங்களில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 3,70,739 பாடசாலை பரீட்சார்த்திகளும், 2,06,481 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர் இதேவேளை, பரீட்சை நிலையங்கள் மற்றும் இணைப்பு நிலையங்களுக்குள் அனுமதியற்ற எவரும் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தப்படுவதையும், ஊர்வலங்கள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டுக்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராவய பத்திரிகை பிரதம ஆசிரியர்மீது சீ.ஐ.டி விசாரணை-

ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கே.டபிள்யூ ஜனரஞ்சன சீஐடியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நேற்று குறித்த விசாரணை நடத்தப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதியிட்ட ராவய பத்திரிகை நடத்திய பொதுமக்கள் கருத்துக்கணிப்பு தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது. குறித்த தினத்தில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில், அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப்போவது மஹிந்த ராஜபக்சவா? மைத்திரி சிறிசேனவா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதில் மகிந்த ராஜபக்சவுக்கு 41 வீத வாக்குகளும், மைத்திரிக்கு 59 வீத வாக்குகளும் கிடைக்கும் எனக் கணிப்பிடப்பட்டிருந்தது

சோமரத்ன திஸாநாயக்க, ஹிருணிகா பிரேமச்சந்திர மைத்திரிபாலவுக்கு ஆதரவு-

somaratne-dissanayake_CIHirunika_CIஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவரும், பிரபல சிங்கள திரைப்பட இயக்குனருமான சோமரத்ன திஸாநாயக்க பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இன்று முற்பகல் ஊடகத்தனரிடம் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு இரு தடவைகள் தாம் ஆதரவு வழங்கியதாகவும் எனினும் கலைத்துறையை முன்னேற்றுவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுக்கவில்லை என்பதுடன், தற்போதைய ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதாகவும் சோமரத்ன திஸாநாயக்க கூறியுள்ளார். இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலவின் வெற்றிக்காக செயற்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். முன்னாள் அரசியல்வாதி பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர முல்லேரியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக அரசியலுக்கு வந்த ஹிருணிகா கடந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

தேர்தலுக்கு முன் தேசிய அடையாள அட்டை-

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 15ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பப் படிவங்களுக்கு விரைவில் அடையாள அட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் சரத்குமார தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கும் நடமாடும் சேவை எதிர்வரும் 11ம் திகதி தொடக்கம் 21ம் திகதிவரை நடத்தப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

பல்கலை விரிவுரையாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பு-

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கண்டித்து விரிவுரையாளர் சங்கம் இன்று பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தமது செயற்பாடுகளில் அத்துமீறல்களை மேற்கொள்வதாக விரிவரையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த நிலையில் விரிவுரையாளர்களின் போராட்டம் காரணமாக இன்று பல்கலைக்கழங்களின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பித்திருந்தன.

16 வேட்பாளர்கள் சொத்து விபரங்கள் ஒப்படைப்பு-

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 19 பேரில் 16 பேர் இதுவரையில் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. வேட்பு மனுத் தாக்கல் செய்யும் தினமான நேற்றையதினம் 16 பேர் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். ஏனையவர்களுக்கும் அடுத்த சில தினங்களில் இந்த விபரங்களை ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க முன்பள்ளியின் 2014ம் ஆண்டிற்கான கலைவிழாவும் பரிசளிப்பு விழாவும் இன்றுபிற்பகல் 2.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உபதலைவர் திரு. ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இதன்போது முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், இடம்பெற்று பிள்ளைகளுக்குப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது. இணுவில் கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு. உதயகுமாரன் (உதயன்) அவர்கள் நன்றியுரையாற்றினார்.

inuvil (1)inuvil (2)inuvil (3)inuvil (4)inuvil (5)inuvil (6)inuvil (7)inuvil (8)inuvil (9)inuvil (10)inuvil (11)inuvil....

கல்விழான் காந்திஜி சனசமூக நிலைய விளையாட்டுக் கழகத்தினருக்கு உதவி-

kalvilanயாழ். சுழிபுரம் கல்விழான் காந்திஜி சனசமூகநிலைய விளையாட்டுக் கழகத்தினருக்கு நேற்று (07.12.2014) ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்படடுள்ளன. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய மாகாணசபை நிதியொதுக்கீட்டில் இருந்து ரூபாய் 20,000 பெறுமதியான விளையாட்டு உபகரணங்களே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. மேற்படி விளையாட்டு உபகரணங்களை புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கல்விழான் காந்திஸி சனசமூகநிலைய விளையாட்டுக் கழகத்தினருக்கு வழங்கிவைத்தார்கள்.

இளையநட்சத்திர விளையாட்டுக் கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு-

inpachcholai (4)inpachcholai (1)inpachcholai (3)யாழ். வட்டு வடக்கு இளையநட்சத்திர விளையாட்டுக் கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று(07.12.2014) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக 25,000 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களே இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் சார்பாக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இதில் கலந்துகொண்டிருந்ததுடன், புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் மேற்படி விளையாட்டு உபகரணங்களை வட்டு வடக்கு இளையநட்சத்திர விளையாட்டுக் கழகத்தினரிடம் கையளித்தார்கள்.

திசைமழை கண்ணகியம்மன் ஆலய திருப்பணிக்கு சித்தார்த்தன் அவர்கள் உதவி-

kannagai amman kovil (2) kannagai amman kovilயாழ். சுழிபுரம் கிழக்கு திசைமழை கண்ணகியம்மன் கோவில் புனருத்தாபன நிதியாக ஒரு லட்சம் ரூபாய் நேற்று (07.12.2014) ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் மாகாண சபை நிதியொதுக்கீட்டில் இருந்து மேற்படி ஒரு லட்சம் (100,000) ரூபாய் இவ் ஆலயத் திருப்பணிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி நிதிக்குரிய காசோலையினை புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திசைமழை கண்ணகியம்மன் ஆலய அறங்காவலர் சபையினரிடம் நேற்றையதினம் கையளித்துள்ளார். இந்நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும், ஆலய அறங்காவலர் சபையினரும் பங்கேற்றிருந்தனர்.

19 வேட்பு மனுக்களும் ஏற்பு, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிக்கான ஆட்சேபனை நிராகரிப்பு-

mahinda - maithriஜனாதிபதித் தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் ஆட்சேபம் தெரிவிக்கும் காலத்தில் இரண்டு பிரதான வேட்பாளர்களின் வேட்பு மனுக்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேட்புமனுவிற்கு கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நா.அமரகோனும் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். எனினும் 1981ம் ஆண்டு 15ம் இலக்க சரத்தின்படி ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரை தெரிவுசெய்யும் வேட்புமனு விடயங்களில் காணப்படும் அதிகாரத்திற்கு அமைய தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறித்த ஆட்சேபனைகளை நிராகரித்துள்ளார். தேர்தல் சட்டத்திட்டங்களுக்கு புறம்பானதாக அந்த ஆட்சேபனைகள் காணப்பட்டதால் அவற்றை நிராகரிப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார். இதேவேளை, வேட்புமனு தாக்கல் செய்த 19 வேட்பாளர்களும் சரியான முறையில் விண்ணப்பித்துள்ளதால் அவற்றை ஏற்றுக் கொள்வதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன வேட்புமனு தாக்கல்-

maiththiஜனாதிபதித் தேர்தலின் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல்கள் செயலகத்தில் இன்றுகாலை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் 2015 ஜனவரி 8ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மஹிந்த ராஜபக்ஷ இன்றுகாலை 10.30அளவில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ராஜகிரிய தேர்தல்கள் செயலகத்திற்குச் சென்ற ஜனாதிபதி ஐமசுமு பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவுடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இரு தடவை ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் ஒருவர் இரு தடவையே ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற சட்டம் 18ம் திருத்தச் சட்டத்தில் நீக்கப்பட்டு இரு முறைக்கு மேலும் பதவியில் இருக்கமுடியும் என திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதனடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஐ.தே.கட்சி பொதுச்செயலர் திஸ்ஸ அரசுடன் இணைவு, கபீர் ஹாசீம் செயலராக நியமனம்-

kabir hashim UNP secretaryUNP secretary join Govtஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். திஸ்ஸ அத்தநாயக்க இன்றுகாலை ஐதேக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சமர்பித்திருந்ததாக கூறப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கும் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு சுகாதார அமைச்சு உள்ளிட்ட உயர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை திஸ்ஸ அத்திநாயக்க தம்முடன் இணைந்துகொண்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகத்திற்கு அறிவித்துள்ளார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச் செயலராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தில் இணைந்து கொண்டதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் கபீர் ஹாசிம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சித் தாவல்கள் பற்றிய தகவல்களும், ஆதரவு அறிவிப்புக்களும்-

dissa_003சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக கட்சியின் பிரதித் தலைவருமாகிய ஜயந்த கெட்டகொட இன்றுமாலை ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டாரவும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரத்தியேக செயலாளர் பீ.எம்.எ குணதாச அரசுடன் இணைந்துள்ளதாகவும், இது தொடர்பாக ஆளும்கட்சியின் பிரபலங்களுடன் அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஆளும் கட்சியின்  சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிறீலங்கா சுதந்திர கட்சியின் கொலன்ன தொகுதி அமைப்பாளருமாகிய ஜயதிஸ்ஸ ரணவீர எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார். 

ஐ.தே.கட்சியின் அமைப்பாளர்மீது தாக்குதல், மைத்திரி ஆதரவாளர்மீது தாக்குதல்-

குருநாகல் – ஹிரியால ஐக்கிய தேசியக் கட்சி தொகுதி அமைப்பாளர்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹிரியால சந்தியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த ஆசிரி ஹேரத் என்ற அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது ஆசிரியுடன் இருந்த அவரது மகனை சந்தேகநபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டிச் சென்றதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் தமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை நடாத்துவதாக குருநாகல் பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தளம் தங்கொட்டுவையிலுள்ள ஆதரவாளர் ஒருவரின் வீட்டின்மீதே இன்று அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் வீட்டுக்கு பலத்த சேதம் ஏற்றபட்டுள்ள போதிலும் குறித்த ஆதரவாளர் தன்னுடைய மனைவி வீட்டில் இருந்தமையினால் அவருக்கு பாதிப்பில்லையென தெரியவருகிறது.

கே பியிடம் விசாரணை செய்ய இன்டர்போலிடம் உதவி-

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பில் விடுதலை புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் தகவல்களை பெற்றுக்கொள்ள, இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறையின் உதவி கோரப்பட்டுள்ளது. இந்திய மத்திய புலனாய்வு பிரிவு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான வழக்கினை விரைவில் நிறைவு செய்யும் முகமாகவே மத்திய புலனாய்வு பிரிவு இவ்வாறு இன்டர்போலின் உதவியை நாடியுள்ளது. அத்துடன், இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு வலியுத்துமாறு இன்டர்போலிடம் மத்திய புலனாய்வுப்பிரிவு கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இ.தொ.கா மகிந்தவுக்கு ஆதரவு, வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கண்காணிப்பாளர்கள்-

CWC mahinda aatharavuCWC mahinda aatharavu (1)முன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை அலரிமாலிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் ஆதரவை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். இது இவ்விதமிருக்க வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு, தேர்தல் கண்காணிப்பாளர்கள் விஜயம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் இதற்கான அனுமதியை அளித்துள்ளார். வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்குச் செல்ல தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுப்படும் பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது இதுவே முதற்தடவை என பெப்ரல் அமைப்பில் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

20141207_103555யாழ். சுன்னாகம் மேற்கு ஐயன்னா சனசமூக நிலைய முன்பள்ளியின் கலைவிழாவும், மேற்படி முன்பள்ளியில் பயின்று முதலாம் வகுப்புக்கு செல்லும் பிள்ளைகளுக்கான வழியனுப்பு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (07.12.2014) காலை 9மணியளவில் முன்பள்ளியின் தலைவர் திரு பிறேம்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக கலாநிதி சி.குகநேசன் (ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்) அவர்களும் சிறப்பு விருந்தினராக முநவலோகராஜா (உறுப்பினர், வலிதெற்கு பிரதேச சபை) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்த முன்பள்ளியில் ஏறக்குறைய 60 பிள்ளைகள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் 20 பிள்ளைகள் முதலாம் வகுப்பிற்காக வேறு பாடசாலைகளுக்கு செல்கின்றார்கள். இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் புதிதாக முன்பள்ளியில் இணைந்து கொள்ளும் பிள்ளைகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததுடன், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பெருந்தொகையானோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

20141207_09350120141207_094238 (2)20141207_10355520141207_133954

ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலய புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பாராட்டு விழா-

A06யாழ். ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலயத்தில் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா இன்று (07.12.2014) ஞாயிற்றுக்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. சைவ சன்மார்க்க வித்தியாலய அதிபர் திருமதி பிரதா சிறீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாக திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். லண்டனில் வசிக்கும் ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலய பழைய மாணவரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தோழருமான திரு. மணிவண்ணன் அவர்களின் நிதியுதவியில் 35 பிள்ளைகளுக்கான பிரத்தியேக வகுப்புகள் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டு வந்தது. மேற்படி 35 பிள்ளைகளில் 18 பிள்ளைகள் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். ஏழாலைக் கிராமத்தைச் சேர்ந்த இந்த 35 பிள்ளைகளும் பல்வேறு பாடசாலைகளிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பிள்ளைகளாவர். மேலும் தோழர் மணிவண்ணன் அவர்கள் அடுத்தவருட புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய பிரத்தியேக வகுப்புக்கான செலவினையும் செய்வதாக கூறியிருக்கின்றார். அத்துடன் அவரது நிதியுதவியின்கீழ் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு தலா 2000 ரூபாய் வீதம் வங்கியில் பணம் வைப்பிலிட்டு வங்கிப் புத்தகமும் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இன்றைய பாராட்டு விழா மற்றும் புலமைப்பரிசில் வகுப்புக்களுக்கான ஏற்பாடுகளை ஏழாலையை வசிப்பிடமாகக் கொண்ட கிராம சேவையாளர் ஞானசபேசன் அவர்களும், மல்லி ஆசிரியை மற்றும் மணிவண்ணனின் இளைய சகோதரராகிய ஹரிவண்ணன் ஆசிரியர் அவர்களும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

A01A02A04A05A07A08A09A10A12A13

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஏழாலையில் சைவ சன்மார்க்க முன்பள்ளிக்குரிய கட்டிடமொன்றினை அமைப்பதற்காக திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் உதவி

இதேவேளை ஏழாலையில் சொந்தமாக சைவ சன்மார்க்க முன்பள்ளிக்குரிய கட்டிடமொன்றினை அமைப்பதற்காக புளொட்தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் மாகாணசபை நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட 01லட்சம் ரூபா நிதியில் ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலய வளவில் முன்பள்ளிக்கான கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகள் பூர்த்தியாவதற்கு இன்னமும் நிறைய நிதிகள் தேவையாகவிருக்கின்றது. இதை பல நலன்விரும்பிகள் கொடுப்பதற்கு முன்வந்திருக்கிறார்கள். அதேபோல பலர் கொடுத்து உதவுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேற்படி முன்பள்ளிக்கான கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதை புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று பார்வையிட்டார்.

elalai munpalli sontha kattidam (1) elalai munpalli sontha kattidam (2)

வேட்புமனு தாக்கலை முன்னிட்டு கொழும்பில் பலத்த பாதுகாப்பு-

05ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாளை 8ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிவரை ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. வேட்பு மனுக்கள் நாளை ஏற்றுக்கொள்வதால் கொழும்பு நகரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் செயலகமுள்ள ராஜகிரிய பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் தொடர்பாக அதேதினம் 9 மணிமுதல் 11.30 மணிவரை ஆட்சேபனை தெரிவிக்க முடியும். இதேவேளை ராஜகிரிய பிரதேசத்திலுள்ள கட்அவுட்டுகளை உடனடியாக அப்புறப்படுத்தும்படி தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பில் 52 முறைப்பாடுகள் பதிவு-

therthal nadavadikkaiku arasa valankalaiஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 52 முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இவற்றில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 13 முறைப்பாடுகளும், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் 39 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இவற்றுள் அதிகமான முறைப்பாடுகளாக ஏழு முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே பதிவாகியுள்ளன. மேலும் கண்டியில் நான்கு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என தேர்தல்கள் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மூன்று சிறுபான்மையினர் உட்பட 18பேர் கட்டுப்பணம் செலுத்தினர்-

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையில் மூன்று சிறுபான்மையின வேட்பாளர்கள் உட்பட 18 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 16 கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களுமே இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. நவசமசமாஜக்கட்சி சார்பில் மகேந்திரன், ஐக்கிய சமாதான முன்னணி சார்பில் இப்ராஹிம் நிஸ்தார் மொஹமட் மிஹ்லார் மற்றும் சுயேட்சையாக முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஐ.எம்.இல்யாஸ் ஆகியோரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள சிறுபான்மையின வேட்பாளர்களாவர்.

முல்லேரியா பிரதேசசபை தலைவர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு-

mulleria pradeshiya saba thalaivarகோடிகாவத்தை – முல்லேரியா பிரதேசசபை தலைவர் பிரசன்ன சோலங்கஆராச்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளார். இன்றுகாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த காலங்களில் ஏற்பட்ட சில விடயங்களால் தான் அதிருப்தி அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டே மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்கப் போவதாக கூறிய அவர், ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பரந்தன், ஆரையம்பதி விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு-

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்றிரவு 8.30அளவில் மோட்டார் சைக்கிளொன்றை இலக்கத்தகடு அற்ற வாகனம் ஒன்று மோதிவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. விபத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், இலக்கதகடற்ற வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். நொச்சியாகமவைச் சேர்ந்த இளைஞரே இதன்போது பலியானதுடன், சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ளது. கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொள்கின்றனர். இதேவேளை மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இ.போ.ச பஸ் நேற்றுமாலை மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்னொருவர் உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி-

vellaththaal pathikapatta makkalukkumயாழ் மாவட்டத்தில் கடந்தவாரம் பெய்த அடை மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசர உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தினால் இவ்வாறு அவசரகால உதவிகள் வழங்கப்பட்டதாக யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகள் மற்றும் தரப்பால், பாய், பால் மா வகைகள், போர்வைகள் ஆகியன வழங்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏனைய குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் ஒருவார காலத்திற்கு வழங்கப்பட்டன. பௌதீக ரீதியான அனர்த்த தணிப்பு செயற்பாடுகள் அனர்த்த மத்திய நிலையத்தால் இராணுவ உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தொடர்ச்சியான நிவாரண பணிகள் முன்னெடுக்கப்படுவதோடு நிலைமைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுக்க யாழ் மாவட்ட செயலகம் தாயாராகவுள்ளது எனவும் அரச அதிபர் கூறியுள்ளார்.

வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு-

vaakkalarkalin adaiyaalam uruthiஜனாதிபதி வேட்பாளர்களுக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய அனைத்து வேட்பாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியர் தம்மை இன்று சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். வேட்பாளர்களும் தேர்தல் ஆணையாளரும் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். வேட்புமனுத் தாக்கல் செய்வது முதல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையாளர் விளக்கவுள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், தேர்தல் கண்காணிப்பாளர்களின் பங்களிப்பு, வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பின்பற்ற வேண்டிய கட்டாய சட்ட விதிகள் பற்றி தேர்தல் ஆணையாளர் விளக்கமளிப்பார் என தேர்தல் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஐ.தே.கட்சி முழுமையான ஆதரவு-

untitledபொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு பூரண ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடானது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் தலைமையில் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் என இதன் போது அனைத்து கட்சிகள் சார்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மைத்திரிபாலவை பொது வேட்பாளராக ஆதரிப்பதற்கான யோசனையை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா சிங்கள மொழியில் முன்வைக்க நாடாளுமன்ற உறுப்பினர் க.வேலாயுதம் அதனை தமிழ் மொழியில் முன்மொழிந்தாh. இதனைத் அடுத்து கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க, இந்த யோசனைக்கான கட்சியின் அனுமதியை கோரியிருந்தார். இதன்படி கட்சியின் ஏனைய உறுப்பினர், மைத்திரிபால சிறிசேனைவை பொதுவேட்பாளராக ஆதரிக்க அனுமதி வழங்கினர்.

பேர்த்தில் தங்கியிருந்த இலங்கை அகதி குடும்பம் நவுறுவுக்கு மாற்றம்-

imagesஅவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகளின் குடும்பம் ஒன்று மீண்டும் நவுறு தீவிற்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய சென்ற இந்த குடும்பம் நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் குடும்ப உறுப்பினர் ஒருவரின் குழந்தை பிரசவத்துக்காக, அவர்கள் பேர்த் நகருக்கு அழைத்து வந்து தங்க வைக்கப்பட்டிருந்தனர். குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீண்டும் நவுறு தீவுக்கே மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் மற்றும் 25குடும்பங்களைச் சேர்ந்த அகதிகளும் நவுறு தீவுக்கு மாற்றப்படுவதாக கூறப்படுகிறது.

தேர்தல் தொடர்பில் 46 முறைப்பாடுகள் பதிவு-

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 46 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அவற்றில், சிறு சம்பவங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகளும், பாரதூரமான விடயங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகம், அச்சுறுத்தல் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் போன்ற பாரதூரமான சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளில் அதிகமாக ஏழு முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், கமபஹா, கண்டி, குருநாகல், களுத்துறை, புத்தளம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாப்பரசர் வருகையை முன்னிட்டு கைதிகள் சிலருக்கு பொதுமன்னிப்பு-

பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில் நோய்வாய்ப்பட்டவர்கள், நல்லொழுக்கமானவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டிய கைதிகளை தெரிவு செய்யும் நடவடிக்கை சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் வழிகாட்டல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட உள்ளது. பாப்பரசரை கௌரவப்படுத்தும் நோக்கில் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை இராணுவ அதிகாரியை கைது செய்யுமாறு கோரிக்கை-

தென்னாபிரிக்கா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி, இராணுவ உயரதிகாரி ஜெனரல் ஸ்ரீலால் வீரசூரியவை போர்க் குற்றத்துக்காக கைதுசெய்யும்படி, அந்நாட்டில் வாழும் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னாபிரிக்காவில் நடைபெறும் கிறிஸ்துவ இராணுவத்தினருக்கான மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில், 1990-களில் இலங்கை இராணுவ படைப்பிரிவு தளபதியாக இருந்தபோது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அவர்மீது தென்னாபிரிக்க வாழ் தமிழர்கள் கூட்டமைப்பு (எஸ்.ஏ.டி.எஃப்.) குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டுக் குற்றங்களுக்கான தென்னாபிரிக்க சிறப்புப் பிரிவிடம் ஜெனரல் ஸ்ரீலால் வீரசூரியவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளோம். இலங்கையில் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள தமிழர்களுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வரும் தென்னாபிரிக்க அரசு, சர்வதேச சட்டப்படி அவரை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று எஸ்.ஏ.டி.எஃப். அமைப்பு தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி-(புளொட்)

chunnakal flood help 04.12.2014 (23)வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம் பெயர் உறவுகளான சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் நோர்வே நாடுகளிலுள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தோழர்கள் உதவிகளை வழங்கியுள்ளனர். கடந்த 03.12.2014 புதன்கிழமை அன்று மூளாய் தேவாலயம், சுழிபுரம் காட்டுப் புலம், சுழிபுரம் பாண்டுவட்டை, வட்டுக்கோட்டை இன்பச்சோலை, முளாய் வீரவத்ததை தேவாலயம் மற்றும் கந்தரோடை முகாம் பகுதிகளில் தஞ்சம் அடைந்திருந்த சுமார் 1000 பேருக்கு .இரண்டு இலட்சம் ரூபா செலவில் உணவுப் பொதிகள், வெற்றுச் சாக்குகள் பால்மாவகைகள், நுளம்புத் திரிப்பெட்டிகள் மற்றும் மருநது வகைகள் என்பன இதன்போது வழஙகிவைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன், வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், புளொட்டின் நோர்வேகிளை அமைப்பாளர் இராசசிங்கம் சிவராஜா (ராஜன்) மற்றும் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு மக்களுக்கான பொருட்களை வழங்கி வைத்திருந்தனர்.

chunnakal flood help 04.12.2014 (24)chunnakal flood help 04.12.2014 (23)chunnakal flood help 04.12.2014 (22)chunnakal flood help 04.12.2014 (19)chunnakal flood help 04.12.2014 (18)chunnakal flood help 04.12.2014 (17)chunnakal flood help 04.12.2014 (1) chunnakal flood help 04.12.2014 (2) chunnakal flood help 04.12.2014 (3) chunnakal flood help 04.12.2014 (10) chunnakal flood help 04.12.2014 (11) chunnakal flood help 04.12.2014 (12) chunnakal flood help 04.12.2014 (13) chunnakal flood help 04.12.2014 (14) chunnakal flood help 04.12.2014 (15) chunnakal flood help 04.12.2014 (16)