Header image alt text

சிறீலங்கன் எயார் லைன்ஸ் விமானி பணி இடைநீக்கம்-

sri lankan airlines (2)சிறீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL554 என்ற விமானத்தினுடைய விமானி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனில் இருந்து கடந்த 19ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்தது. எனினும், அந்த விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதமடைந்ததோடு, நேற்று இரவு 07.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதனையடுத்து ஏற்பட்ட தாமதம் காரணமாகவே சம்பந்தப்பட்ட விமானத்தின் விமானி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது அவர் மதுபோதையில் இருந்தாரா என மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர் தோல்வியடைந்துள்ளமையை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவு முன்னாள் பணிப்பாளரிடம் விசாரணை-

investigateஅரச புலனாய்வு சேவை மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஆகியவற்றின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் சந்திரா வாகிஷ்ட சம்பந்தமாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பயங்கரவாத விசாரணைப் பிரிவின் வழக்கு பொருளாக இருந்த லொறி ஒன்றை, அப்போதைய பொலிஸ் மா அதிபரின் அனுமதியின்றி மற்றுமொரு தரப்புக்கு வழங்கிய சம்பவம் தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு நிமல் சந்திரா வாகிஷ்டவிடம் சுமார் மூன்று மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக பந்துல குணவர்த்தன அறிவிப்பு-

bandula gunawardenaகூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்டளஸ் அழகப்பெருமவைத் தொடர்ந்து பந்துல குணவர்தனவும்,சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கொழும்பு, ஹோமகமவில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 13 பேரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி நீக்கியதுடன் புதியவர்களை நியமித்தார். இதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் டளஸ் அழகப்பெரும, அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். குருணாகலில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழா மாநாட்டுக்கு பின்னர், கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பலர் அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், தாம் விலக்கப்படுவதற்கு முன்னதாக பந்துல குணவர்தனவும், டளஸ் அழகப்பெருமவும் அமைப்பாளர் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர்கள் கைது-

arrestஇனியபாரதியின் முன்னாள் சாரதி உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மூவரை திருக்கோவில் பிரதேசத்தில் இன்று அம்பாறை குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக கைது செய்துள்ளனர். இத்தகவலை திருக்கோவில் பொலிஸார் அறிவித்துள்ளனர். திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், தமது உறவுகள் காணாமல் போனமை தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னாள் சாட்சியமளித்ததுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்திருந்தனர். இது தொடர்பாக விசாரணை செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு, அம்பாறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கட்டளை வழங்கியது. இதனையடுத்து முன்னாள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்களான திருக்கோவில் தம்பிலுவில் முனையக்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த மனோகரன், தம்பிலுவில் வீ.சி. வீதியைச் சேர்ந்த க.கமலநாதன் (மதி) மற்றும் இனியபாரதியின் முன்னாள் வாகன சாரதியான தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த ஆ.யுவராஜ் ஆகியோரை இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். இதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இப்பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த ஹரன், யூட் ஆகிய இருவரை விசாரணைக்காக அம்பாறை குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்து அழைத்துச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

ரயில் மீது கல்லெறிந்தால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ள நடவடிக்கை-

trainபயணித்துக் கொண்டிருக்கும் போது ரயிலுக்கு கல் எறிபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக வேண்டி ஒரு தொகைத் துப்பாக்கிகள் ரயில்வே பாதுகாப்புப் பிரிவுக்கு பெற்றுக் கொண்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு இராணுவத்தின் அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கியினால் சுமார் 15 மீற்றர் தூரத்தில் உள்ள ஒருவருக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முடியும். வெலிசர கடற்படை முகாமிலிருந்து 25 துப்பாக்கிகள் இவ்வாறு பெறப்பட்டுள்ளன. ஏற்கனவே, ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் குறுந்தூர இலக்கு கொண்ட துப்பாக்கிகளையே பயன்படுத்துகின்றனர். இவ்வகையான துப்பாக்கிகள் 192 தற்பொழுது திணைக்களத்தில் உள்ளன. புதிதாக பெற்றுக்கொண்டுள்ள துப்பாக்கிகள் ரயில்வே திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மைய காலப்பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கும் ரயில்மீது கல் எறிந்து தாக்குதல் நடாத்தும் பன்னிரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

19 வருடகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள 3000 முறைப்பாடுகள்-

human rightsஇலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் சுமார் 3000 முறைப்பாடுகள் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சிங்கள வார இதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த முறைப்பாடுகள் சுமார் 19 வருட காலமாக விசாரிக்கப்படாமல் இவ்வாறு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்கு போதியளவான அதிகாரிகள் நியமிக்கப்படாமையே இதற்கு காரணமென குறிப்பிடப்படுகின்றது. இதனால் முறைப்பாட்டாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், விரைவில் ஒப்பந்த அடிப்படையிலான அதிகாரிகளையாவது நியமித்து தேங்கிக் கிடக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு சென்ற 600 இலங்கையர்கள் கடந்த வருடத்தில் மரணம்-

dead.bodyஇலங்கையிலிருந்து கடந்த வருடத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களில் 600 இற்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளிலேயே மரணித்துள்ளதாக வெளி விவகார அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் 428 பேர் ஆண்கள், 180 பேர் பெண்கள் ஆவர். இவர்களில் சுமார் 100 பேர் திடீர் மரணமடைந்துள்ளனர். 367 பேர் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். 9 பேர் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளனர். 28 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். மேலும் 109 பேரின் மரணத்துக்கு இதுவரை காரணம் அறியப்படாது மர்மநிலையில் உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, மரணித்தவர்களுக்காக இந்த நாட்டிலுள்ள உறவினர்களுக்கு கடந்த வருடத்தில் மாத்திரம் கிடைக்கப் பெற்ற நஷ்ட ஈட்டுத் தொகை 20 கோடியே 96 லட்சம் ரூபாவாகும். இதன் மூலம் 148 குடும்பங்கள் நலன் பெற்றுள்ளன. இதனிடையே வெளிநாட்டவர்களுக்காக பல்வேறு அறிக்கைகள், கடிதங்கள், சான்றிதழ்கள் என்பனவற்றுக்காக வெளிவிவகார அமைச்சின் கொன்சியுலர் பிரிவு கடந்த வருடத்தில் மாத்திரம் 12 கோடியே 47 லட்சம் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளதாகவும் அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இலங்கை விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதமானது-

Srilankan-Airlines-626x380விமானத்தின் தாமதத்தினால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கேட்பதாக இலங்கை விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான UL554 என்ற விமானம் நேற்றுமாலை ஜேர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்க இருந்தது. எனினும் விமானத்தில் பணியாற்றும் பணியாளர்களில் ஒருவர் வருகை தராமையின் காரணமாக குறித்த விமானம் புறப்படுவதற்கு தாமதமாகியுள்ளது. சுமார் 15 மணித்தியாலங்கள் இந்த விமானம் தாமதமாக புறப்பட்டதாக கூறப்படுகிறது. ஜேர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர் அந்த நாட்டு நேரப்படி இன்றுஅதிகாலை 4.00 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகளுக்கு தேவையான உணவுகள் மற்றும் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டப்படி பயணிகளுக்கு நட்டஈடு வழங்கப்படும் என்றும் இலங்கை விமான நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகளின் சோதனை நடவடிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு-

americaபுலி முன்னாள் போராளிகளை சோதனைகளுக்கு உட்படுத்த அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கு விஷ ஊசி செலுத்தப்பட்ட விடயம் தொடர்பில் வடக்கு மாகாண சபையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அண்மையில் அமெரிக்க தூதுவரிடம் விடுதலைப் புலி முன்னாள் போராளிகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சரால் உதவி கோரப்பட்டிருந்தது. அமெரிக்க தூதுவர் அதுல் கேசப் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்தாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை பரிசேதனைக்கு உட்படுத்துவதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், தற்போது இலங்கை வந்துள்ள அமெரிக்க வான்படை மருத்துவ அதிகாரிகளிடம் மருத்துவ பரிசோதனைகளுக்கான வசதிகள் இல்லாத நிலையிலேயே இந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-

southeast universityதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்கக் கோரி பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக இன்றுகாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடம் என்பவற்றுக்கான அடிக்கல்லினை நட்டி வைப்பதற்காகவும் மாணவர்களுக்கான விடுதியைத் திறந்து வைப்பதற்காகவும் இன்றுகாலை, உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வருகை தரவிருந்தார். பல்கலைக்கழகத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக அமைச்சர் உறுதியளித்தால் மாத்திரமே அமைச்சரை பல்கலைக்கழகத்துக்குள் செல்லவிடுவது எனத் தெரிவித்து மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமையால் பிற்பகல் 02 மணிவரை அமைச்சரின் வருகை இடம்பெறவில்லை. பொறியியல் பீடம், வணிகம் மற்றும் முகாமைத்துவ பீடம் உள்ளிட்ட ஐந்து பீடங்களின் மாணவர்கள் ஒன்றிணைந்து இவ்வார்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். பல்கலைக்கழகம் சுதந்திரமாக இயங்குவதற்குத் தடையாகவுள்ள பொலிஸ் காவலரனை உடன் அகற்ற வேண்டும், அரசியல் நாடகத்தை பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றப்படுவதை உடன் நிறுத்து, விடுதியில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மீள் குடியேற்ற செய்பாடுகள் இவ்வருடத்துக்குள் நிறைவு-

housing scheme (2)வடக்கில் இந்த வருட இறுதிக்குள் மீள்குடியேற்ற செயற்பாடுகள் நிறைவுறுத்தப்படும் என மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் காணியற்ற 936 குடும்பங்கள் உள்ளன. இதில் 971 குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்க அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கீரிமலைக்கு அருகில் உள்ள காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் உதவியுடன் வீடுகள் அமைக்கபடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 104 வீடுகள், பலாலி வடக்கு பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, அதன் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் ஒக்டோபரில் நிறைவுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, காணியற்ற குடும்பங்களை குடியேற்றுவதற்காக 250 காணித்துண்டுகளை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதற்கிடையில் காங்கேசனத்துறை, பளை, வலிகாமம் வடக்கு மற்றும் தையிட்டி ஆகிய இடங்களில் 450 ஏக்கர் நிலத்தை விடுவிக்க பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிப்பு-

touristஇலங்கையில் உல்லாசப் பயணிகளின் வருகை கடந்த மாதம் (யூலை) உச்ச நிலையை எட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் இலங்கை வந்துள்ள உல்லாசப் பயணிகளின் தொகை 209,351என காணப்படுகின்றது. கடந்த வருடம் யூலை மாத முடிவில் கணக்கெடுக்கப்பட்ட உல்லாசப் பயணிகளின் தொகையை விட 19.1 வீத அதிகரிப்பை இது காட்டுகின்றது. 60 களில் பதிவுகள் ஆரம்பித்த பின் ஒரு மாதத்தில் மிக அதிகமான பயணிகளைக் கண்டது கடந்த மாதத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. வழமையாக அதிக பயணிகளைக் காணும் இலங்கை உல்லாசப் பயணத்துறை இந்த வருடத்தில் யூலை மாதத்தில் அதிகளவான உல்லாசப் பயணிகளைக் கண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கப்பல் பணியாளர்கள் ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகளால் கைது-

arrestஇலங்கை கப்பல் பணியாளர்கள் 8 பேரை ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் கைதுசெய்துள்ளதுடன், அவர்களின் கப்பலையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கப்பல் மூலம் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மூன்றாம் தரப்பொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் ஐக்கிய அரபு இராச்சிய கடல் பாதுகாப்பு பிரிவினரால் கப்பல் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பணியாளர்களைக் கொண்ட அல் கலீதியா என்ற கப்பல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஃபுஃபேரா பிராந்தியத்தை அண்மித்த கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்தினால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கப்பல் பணியாளர்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக இலங்கையின் கொன்சியூலர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மெடிட்ரேனியன் கடலிலிருந்து 534 அகதிகள் மீட்பு, ஐவர் உயிரிழப்பு-

refugeesமெடிட்ரேனியன் கடலிலிருந்து 534 அகதிகள் இத்தாலிய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பெரிய படகுகள், 9 சிறிய படகுகளில் மேற்படி அகதிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். 534 அகதிகள் மீட்கப்பட்ட போதிலும் ஐந்து அகதிகள் மரணித்துள்ளதாக தெரிய வருகிறது. இருப்பினும் இம்மரணங்கள் சம்பவித்தது தொடர்பான எந்த ஒரு தகவல்களும் இதுவரை கிடக்கப்ப்ர்ரவில்லை என ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாலிய, ஜேர்மன் கடற்படையினர் கூட்டாக இணைந்து இந்த மீட்பு பணியை மேற்கொண்டுள்ளார்கள். எனினும் குறித்த நாட்டு அகதிகள் எந்த நாட்டவர் என்பது குறித்து எதுவித தகவல்களும் வெளியாகவில்லை. அகதிகளுக்கான அகில உலக ரீதியான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இதுவரையில் 100,244 அகதிகள் படகுகள் மூலம் இத்தாலியை வந்தடைந்துள்ளனர் என்றும் இவர்களில் பலர் லிபியா நோக்கி தொடர்ந்து பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்புக்கு PATH TO THE FUTURE வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் ஊடாக சுமார் 326,815 ரூபா பெறுமதியில் உதவி-(படங்கள் இணைப்பு)

b7கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரத்தினபுரம் பிரதேசத்தில் விசேட தேவைக்குரிய மாற்றுவலுவுடைய மற்றும் முற்றிலும் இயங்க முடியாத பிள்ளைகள் என ஆரம்பகட்டமாக 14 பிள்ளைகளுடன் இயங்கி வருகின்றது. இவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி இல்ல பிள்ளைகளை பாரமரிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தமக்கான சில அடிப்படை உதவிகளை செய்து தருமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இதனை எமது புலம்பெயர் அமைப்பான PATH TO THE FUTURE இன் கவனத்தித்திற்கு கொண்டு சென்றதையிட்டு அவர்களின் இல்லத்திற்குத் தேவையான அடிப்படை பொருட்கள் இயன்மருத்துவ பிரிவிற்கான கட்டிடம் ஒரு மாதத்திற்கு தேவையான பிள்ளைகளுக்கான பம்பஸ் மற்றும் நிர்வாக ஊழியார்களுக்கான யூலை மாதக் கொடுப்பனவு என சுமார் ரூபா 326,815 எமது சங்கத்தின் ஊடாக அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. Read more

சிறுவர் கொடுமை தொடர்பாக 10ஆயிரத்து 732 முறைப்பாடுகள்-

child protection authorityகடந்த வருடம் மாத்திரம் சிறுவர் கொடுமை தொடர்பாக 10732 முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த சம்பவங்கள் தொடர்பான சந்தேநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதும் குற்றவாளிகளுக்கு சட்டரீதியான தண்டனைகள்பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் 1929 என்ற சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தொலைபேசி இலக்கத்தினூடாகவும், கடிதம் மூலமாக 6889 முறைப்பாடுகள் கிடைத்த போதும் அதில் 14 முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸ் விசேட விசாரணைப்பிரிவினர் நேரடி விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 2000 முறைப்பாடுகளின் விசாரணை அறிக்கையானது நீதிமன்றில் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த முறைப்பாடுகளை துரிதமாக விசாரிப்பதற்காக பொலிஸ்மா அதிபர், சிறுவர் மற்றும் பெண்கள் நடவடிக்கைக்கு பொறுப்பான அலுவலகத்தின் பணிப்பாளர் ஊடாக சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கும் படியும் ஏற்கனவே விசாரணை செய்யப்பட்ட அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெயகுமாரியின் விசாரணை ஒத்திவைப்பு-

jeyakumary (1)தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு துணைபோனதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயகுமாரியின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மீண்டும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில், இன்று காலை விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாலேந்திரன் ஜெயகுமாரியின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். ஜெயகுமாரியின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என குறித்த சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

15 ஆயிரத்திற்கும் குறைவானவர்களையே மீள்குடியேற்ற வேண்டியுள்ளது-வடக்கு ஆளுநர்-

reginoldஒரு இலட்சத்து 60 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் 15 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். மேலும், யாழ்ப்பாணத்திலேயே அதிகமானோர் மீள்குடியேற்றப்படாமல் இருப்பதாகவும் இடப்பற்றாக்குறையே அதற்குக் காரணம் எனவும் வட மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், தற்காலிக முகாம்களில் வசிக்கும் 50 வீதமானவர்களிடம் காணிகளுக்கான உரிமம் இல்லை. காணியற்றவர்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மீள்குடியேற்றத்தின் பின்னரான பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய ரெஜினோல்ட் குரே, ஜீவனோபாய பிரச்சினையே அதில் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே வட மாகாண ஆளுநர் இவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

பூநகரியில் கிணற்றில் தவறி வீழ்ந்து குழந்தை மரணம்-

child dead (2)கிளிநொச்சி மாவட்டம் பூநகரி ஆலங்கேணிப் பகுதியில் நேற்றையதினம் கிணற்றில் தவறி வீழ்ந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இச் சம்பவத்தில் வசந்தராசா திசானன், வயது 2 என்னும் பாலகனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஆசிரியராக தொழில் புரியும் தந்தை கடமை நிமித்தம் வெளியில் சென்றிருந்த சமயம் சிறுவன் வீட்டு முற்றத்தில் விளையாடிய வேளையில் கிணற்றினுள் தவறி வீழ்ந்துள்ளான். இதனையடுத்து உடனடியாகவே உறவுகள் சிறுவனை கிணற்றிலிருந்து தூக்கி பூநகரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். சிறுவனின் உடல்நிலை மோசமாக இருந்தமையினால் உடன் ஆரம்ப சிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டான். எனினும் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கக்பட்ட சமயம் சிறுவனின் உயிர் பிரிந்திருந்தது. குறித்த சிறுவனின் மரணம் தொடர்பில் பூநகரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் காணாமல் போனோர் அலுவலகம் வேண்டாமென ஆர்ப்பாட்டம்-

missingகாணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகத்தை கொழும்பில் அமைப்பதன் மூலம் மக்களுக்கு நன்மையில்லை என்று கூறி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நாட்டில் அதிகமானவர்கள் காணமால் போயிருப்பது யுத்தத்தின் காரணமாகவே எனவும், அதன் காரணமாக குறித்த அலுவலகம் கொழும்பில் அமைக்கப்பட்டால், தமது தேவைகளை முன்வைப்பதற்காக அதிக செலவு செய்து கொழும்புக்கு வரவேண்டி ஏற்படுவதாகவும் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் இதுவரை எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

டலஸ் அழகப்பெரும அமைப்பாளர் பதவியிலிருந்து விலகல்-

dalasமாத்தறை மாவட்ட சிறீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் பதவியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற, ஒன்றிணைந்த எதிரணியினரின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். நேற்று முன்தினம், சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரபல அமைப்பாளர்கள் சிலரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கிய நிலையிலேயே, டலஸ் அழகப்பெரும தானாக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். மைத்திரியால் நீக்கப்பட்ட அனைவரும் மஹிந்த ஆதரவு அணியினர் என்பதுடன், டலஸ_ம் மஹிந்தவுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருபவர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

வெள்ளவத்தைப் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு-

granadeகொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்திலுள்ள காணியொன்றில் இருந்து இரண்டு கைக்குண்டுகள் நேற்றுமாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைக்குண்டுகள் இரண்டையும் மீட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், அதனை செயழிலக்கச் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சந்திப்பு-

chandrika japan former prime ministerஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ புக்கூடோவிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலுள்ள பலமான பிணைப்பு மற்றும் நட்புறவு தொடர்பில் இந்த சந்திப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து ஜப்பானின் முன்னாள் பிரதமரிடம், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எடுத்துரைத்துள்ளார். சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி இலங்கை நகர்ந்து வருகின்றமை குறித்து புக்கூடா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு புக்கூடா அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் ஜப்பானின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் புக்கூடாவிற்கு சந்திரிக்கா அழைப்பு விடுத்துள்ளார். ஜப்பான் இலங்கை நட்புறவு சங்கம் மற்றும் ஆசியாவிற்கான போவாவோ மன்றம் ஆகியவற்றின் தற்போதைய தலைவராகவும் யசுவோ புக்கூடோ செயற்பட்டுவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வாக்காளர் இடாப்பில் பெயர்களைப் பதிவுசெய்வதற்கு 26ஆம் திகதிவரை கால அவகாசம்-

voters list2016ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பெயர்பட்டியல் படிவத்தை பூரணப்படுத்தி ஒப்படைக்க முடியாது போனவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி வரை காலம் வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலுக்காக வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. எனினும் பெயர்ப் பட்டியல் படிவத்தை ஒப்படைக்கத் தவறியவர்களுக்காக மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திற்கு சென்று குறித்த படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. அதனைப் பூரணப்படுத்தி கிராம சேவகரின் உறுதியுடன் மாவட்ட செயலக காரியாலயத்தில் அல்லது தேர்தல்கள் ஆணையக செயலக காரியாலயத்தில் ஒப்படைக்க முடியும். ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி வரை இதற்கான காலம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் 2016ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பெயர் பட்டியல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

யாழில் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை-

swordயாழ். சங்குவேலி வடக்கு மானிப்பாய் பகுதியில் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சிவகுமார் பிரணவன் (வயது 30) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார். வாள்கள் மற்றும் பொல்லுகள் சகிதம் மேற்படி இளைஞனின் வீட்டுக்கு அதிகாலை 1:30க்கு வந்த இளைஞர்கள் குழு இவ் வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளனர். படுகாயங்களுக்குள்ளான இளைஞன், சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பழைய பிரச்சினை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இந்த வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக எம்.ஆர். லதீப் நியமனம்-

stf commanderசிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப்புக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதிக்கான நியமனக்கடிதம் இன்றையதினம் பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஆணைக்குழு எம்.ஆர். லத்தீப்புக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியாக கடந்த 9ஆம் திகதி நியமித்திருந்த நிலையில் இன்று அவருக்கான நியமனக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. எம்.ஆர். லத்தீப் 1979ஆம் ஆண்டு இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டிருந்தார். ஏற்கனவே பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக ஜே.கே ரஞ்சித் பெரேரா பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1983ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவில் தற்போது எண்ணாயிரம் பேர் அங்கம் வகிக்கின்றனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைப்பு-

australiaசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்டபோது நாடு கடத்தப்பட்ட ஆறு இலங்கையர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்றையதினம் கைது செய்யப்பட்ட குறித்த ஆறு பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் வாழைச்சேனையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு முயன்றதாக அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் பீட்டர் டுட்டன் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமானநிலைய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் மனுஸ்தீவு முகாம் மூடப்படுகின்றது-

australiaஅவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டு வரும் மனுஸ்தீவு முகாம் மூடப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது. இலங்கை, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான் மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அவுஸ்ரேலியாவின் தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் ஒன்று மனுஸ்தீவு தடுப்பு முகாம். பப்புவா நியூகினி தீவுகளில் உள்ளது இந்த மனுஸ்தீவு முகாம். இந்த முகாமை மூடுவது தொடர்பாக அவுஸ்திரேலிய அமைச்சர் பீட்டர் டட்டனுக்கும் பப்புவா நியூகினியின் அமைச்சர் பீட்டர் ஓ நீல்-க்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மனுஸ்தீவு முகாம் மூடப்படும் என்றும் அதேநேரத்தில் இந்த முகாமிலிருக்கும் யாரும் அவுஸ்ரேலியாவில் குடியமர்த்தப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மனுஸ்தீவு முகாமில் தற்போது 854பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் வேறு முகாம்களுக்கு மாற்றப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வீதிகளை புனரமைத்துத் தருமாறு பூம்புகார் மக்கள் கோரிக்கை-

poompukarயாழ்ப்பாணம் பூம்புகார் பகுதியின் வீதிகளை புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தெடர்பாக அவர்கள் தெரிவிக்கையில், யாழ் அரியாலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள குக் கிராமமான பூம்புகார் பகுதியின் 13ஆம் 14ஆம் 15ஆம் குறுக்குத் தெருக்கள் நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் மணல் நிறைந்தகாக காணப்படுகிறது. இந் நிலையில் போக்குவரத்து செய்வதில் பெரும் இடர்பாடுளை சந்திக்கும் இக் கிராம மக்கள் மழை காலங்களில் குறித்த வீதிகளில் போக்குவரத்து செய்வது மிகவும் கடினமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆகவே குறித்த விதிகளை மிக விரைவில் புனரமைப்பு செய்து தரும்படி அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.

திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு-

bombதிருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் யுத்த ஆயுதங்கள் சில இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது,

இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். மோட்டார் குண்டுகள், கைக்குண்டுகள் மற்றும் மிதிவெடிகள் என்பனவே கைப்பற்றப்பட்டுள்ளன.

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக ஊழல் வழக்கு-

courtsமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினரால் இன்று வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான 5 வருடங்கள் தனது சொத்து விபரங்களை வெளியிடாமை தொடர்பில் அவருக்கு எதிராக குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலன்சூரியவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

வட்டு இந்து வாலிபர் சங்கம் ஊடாக 50,000 ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவி-(படங்கள் இணைப்பு)

a1வட்டுக்கோட்டை டச்சு றோட் சித்தங்கோணியைச் சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பமான சிவகணேசன் அம்பிகாதேவி என்பவருக்கு அவரின் சுயதொழில் முயற்சிக்காக சுமார் 50000 ரூபா பெறுமதியான துணிவகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அன்பளிப்பினை எமது புலம்பெயர் உறவான இத்தாலியைச் சேர்ந்த ஜெயரஞ்சன் தியோடர் அவர்கள் எமது சங்கத்தினுடாக வழங்கியுள்ளர்ர். கடந்த கால யுத்தநிலைமைகளின் விளைவினால் அம்பிகாதேவி அவர்களின் கணவரான சிவகணேசன் 2007ம் ஆண்டு சித்திரை 10ம் நாள் இனந்தெரியதோரல் கடத்தப்பட்டு சுட்டு படுகொலைசெய்யப்பட்டார். இதன் காரணமாக அம்பிகாதேவியும் அவராது மூன்று பிள்ளைகளும் நிர்க்கதியாக்கப்பட்ட நிலையில் பல இன்னல்களுடன் வாழ்ந்து வந்த நிலையில். தெல்லிப்பளைவீதி சித்தங்கேணியில் தற்காலிகமாக தையல் கடை ஒன்றை நாடத்தி வருகின்றார். Read more

சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து பலர் நீக்கம்-

slfp (5)ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர், சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் 40 பேர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. புதிய தொகுதி அமைப்பாளர்கள் 16 பேரும், மாவட்ட அமைப்பாளர்கள் 24 பேருமே ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் அமைச்சர் லக்ஷமன் யாபா அபேவர்தன ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சம்மந்தனின் உறுதிமொழியையடுத்து பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம் நிறுத்தம்-

dsfdssஇராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக மேற்கொண்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியுடன் இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதாகவும் இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்த நிலையில், இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. பரவிப்பாஞ்சான் பகுதி மக்கள் தமது காணிகளைத் தம்மிடமே வழங்குமாறு கோரி கடந்த ஐந்து நாட்களாகப் அவர்களது வாழ்விடங்களிலுள்ள இராணுவ முகாம்களுக்கு முன்னால் இரவு பகலாகத் தங்கியிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இதனை அறிந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர் குழுவினரும், பிரதிநிதிகளும் இன்றுபகல் பரவிப்பாஞ்சான் பகுதிக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதனைத் தொடர்ந்தே மேற்படி தொடர் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் அலுவலகத்தை எந்தவொரு படைவீரரும் எதிர்க்க வேண்டியதில்லை-அமைச்சர் பொன்சேகா-

fonsekaகொழும்பு நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, காணாமற்போனோர் காரியாலயம் தொடர்பான சட்டமூலம் பாரளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கருத்து தெரிவித்துள்ளார். இதன்போது அவர், காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்திற்கு எந்தவொரு படைவீரரும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியதில்லை. படையினர் சட்டத்தை மீறவில்லை. படையினர் மீதான ஆதரவுக்காக பேசவில்லை. எம்மீது சேறு பூசி, சிறையிலைடைத்னர். இராணுவத்திலிருந்து நீக்கி, ஓய்வூதியமும் செலுத்தாமிலிருந்தபோது எவரும் துன்பப்படவில்லை. தற்போது சிலர் முதலைக்கண்ணீர் வடித்தாலும், உண்மை நிலையை ஜனாதிபதி அறிவார் என்றார்.

கொழும்பு – தலைமன்னார் அதிவிரைவு ரயிலில் மோதி நான்கு யானைகள் மரணம்-

aAவடக்கு ரயில் பாதையின் மடு மற்றும் செட்டிக்குளத்துக்கு இடையிலான பகுதியில் கொழும்பு -தலைமன்னார் அதிவிரைவு (எக்ஸ்பிரஸ்) ரயிலில் மோதி நான்கு யானைகள் உயிரிழந்துள்ளன. தலைமன்னாரில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவுநேர ரயிலில் மோதியே இவை பலியாகியுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி தலைமன்னாரில் இருந்து இரவு 10.30 மணியளவில் புறப்பட்ட ரயில், இரவு 11.45 மணியளவில் செட்டிக்குளம் மெனிக்பாம் ரயில் பாதையில் கூட்டமாக நின்ற யானைளுடன் மோதியுள்ளது. சம்பவத்தில் யானைக் குட்டியொன்றும் மரணித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்க ரயில்வே திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், இந்த விபத்தால் குறித்த ரயில் அரை மணி நேரம் வரை தாமதமடைய நேரிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முன்னாள் போராளிகளை அமெரிக்க வைத்தியர்கள் மூலம் பரிசோதிக்க முடிவு-

NPC (4)முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதா என்பதை அறிய அமெரிக்காவின் விமானப்படை மருத்துவர்கள் ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்னும் யோசனைக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் ஒப்புதல் வழங்கியுள்ளார். வடமாகாண சபையின் 58வது அமர்வு நேற்று நடைபெற்றது. இங்கு பேசிய மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக சர்வதேச மருத்துவர்களை கேட்கும் நாம், தற்போது யாழ். குடாநாட்டில் மருத்துவ முகாம்களை நடத்த வந்திருக்கும் அமெரிக்க விமான படை மருத்துவர்கள் ஊடாக முன்னாள் போராளிகளை பரிசோதித்தால் என்ன? என சிவாஜிலிங்கம் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மருத்துவ உதவி பொருட்களுடன் வந்த அமெரிக்க விமான படையினருடன் யாழ். வந்தபோது அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அடுல் கேஷாப்பிடம் இந்த விடயத்தை நான் கேட்டிருக்கின்றேன். அதற்கு அவர் இணக்கம் தெரிவித்தார். முன்னாள் போராளிகள் சிலரை தெரிவு செய்தால் பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பௌத்த விகாரை தொடர்பில் எவரும் தீர்மானம் எடுக்க முடியாது-அமைச்சர் ராஜித-

sadsகொக்கிளாய், நாயாறு கிராமங்களில் சிங்கள மக்கள் பரம்பரையாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு பௌத்த விகாரை தேவையென்றால் கட்டிக் கொடுக்கத் தயாராகவுள்ளோம். அம்மக்கள் தொடர்பில் எவரும் தீர்மானம் எடுக்க முடியாது எனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன, வடக்கில் கண்டகண்ட இடங்களில் அரசமரம் வைத்தும் புத்தர் சிலை அமைத்தமையும் “தவறான” செயல் என்றும் குறை கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்திப்பு-

TNA met americanதமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு மற்றும் அடிப்படை பிரச்சினைகள் விடயத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும் என அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப்பிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப் தலமையிலான குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துள்ளனர். நேற்று யாழ். மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டபோதே, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. Read more

vavuniyaகிராமிய பொருளாதார அமைச்சின் கீழ் வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார அபிவிருத்தி மையத்தை, வவுனியா தாண்டிக்குளத்தில் அமைப்பதா அல்லது ஓமந்தை நகரில் அமைப்பதா என்று இழுபறியில் இருந்து வந்த பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்த கிராமிய பொருளாதார அமைச்சர் பி.ஹரிசன் மற்றும் கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் வடமாகாண முதலமைச்சரின் பிரதிநிகளாக வருகை தந்திருந்த அதிகாரிகள் சகிதம் வவுனியா பொருளாதார அபிவிருத்தி மையத்தை வவுனியா புறநகர்ப்பகுதியில் உள்ள மதகுவைத்த குளம் மற்றும் வவுனியாவுக்கு வடக்கே மாங்குளம் நகரம் ஆகிய இரண்டு இடங்களில் அமைப்பதற்கான தீர்மானத்தை உறுதிப்படுத்தியுள்ளார்கள். Read more

பரவிப்பாஞ்சான் நிலங்களை வழங்குமாறு கோரி தொடர் போராட்டம்-

paravipanchanகிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியிலுள்ள இராணுவ முகாம் எல்லைக்குள் இருக்கும் தமது இடங்களை வழங்குமாறு கோரி, அப் பகுதி மக்கள் இன்று தொடர்ந்தும் நான்காவது நாளாக போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் கடந்த 13ம்திகதி முகாமுக்கு முன்னால் தமது ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் தமது நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மக்கள், குறித்த முகாமை அகற்றி தமது நிலங்களை பெற்றுக் கொடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை தாம் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அம் மக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வெலிக்கடை சிறையை ஹொரணையில் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி கோரல்-

welikada jailகொழும்பு தெமட்டகொடையில் அமைந்துள்ள வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணை பகுதியில் அமைப்பது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் அதற்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை சொரணவத்தை பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதேவேளை புதுக்கடை நீதிமன்றத்திற்கு அண்மையில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிகமாக கைதிகளை தடுத்து வைப்பதற்கு தடுப்பு நிலையம் ஒன்று அமைக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ரயில் மீது கல் வீசுவோர் தொடர்பில் தகவல் வழங்குமாறு கோரிக்கை-

stoningரயில் மீது கல் வீசுவோர் மற்றும் கல்வீச திட்டமிடுவோர் தொடர்பில் ரயில் திணைக்களத்துக்கு தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மூன்றாம் திகதி கொழும்பு-கோட்டையிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ரயில் மீது ஒருகொடவத்தை பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொண்ட நபரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று ரயில் பாதுகாப்பு பிரிவின் கண்காணிப்பாளர் அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் காரணமாக ரயிலில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரை அடையாளம் காணவும் இதுபோன்ற சம்பவங்களை மோற்கொள்வோர் தொடர்பிலும் தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 0714 405 720 எனும் இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸிக்கு படகில் சென்றவர்கள் விமானத்தில் திருப்பி அனுப்பிவைப்பு-

boatமட்டக்களப்பில் இருந்து கடல் வழியாக படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற 6பேர், இன்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டவர்கள் தற்போது குடிவரவு – குடியகள்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 6 கடற்தொழிலாளர்கள் கடந்த ஜூலை 21ஆம் திகதி, வாழைச்சேனை கடல்வழியாக படகு ஒன்றின் மூலம் அவுஸ்ரேலியாவுக்கு பயணித்துள்ளனர். தொடர்ந்து 12 நாட்கள் படகில் பிரயாணித்த இவர்கள், அவுஸ்ரேலியா கடற்பரப்புக்குள் செல்லும்போது, படகு பழுதடைந்து 4 நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து, அவுஸ்ரேலியா கடற்படையினர் இவர்களை மீட்டு கைது செய்ததுடன், அவர்கள் பயணித்த படகையும் மீட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், அவர்கள் அங்கிருந்து உடனடியாக விசேட விமானம் மூலமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு இன்று காலை 8.15 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர். இதையடுத்து இவர்களை கைது செய்த விமான நிலையப் பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள்-

maithripala3அடுத்த ஆண்டு மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் நடாத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அடுத்தவருட ஆரம்பத்தில் நடாத்தப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். அத்துடன், கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைவதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கே நன்மை ஏற்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக இங்கு குறிப்பிடப்படுகின்றது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 இலங்கையர்கள் கைது-

australia refugeesகுடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறி அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 இலங்கையர்களை கடற்படையினர் இன்றையதினம் மட்டக்களப்பு மேற்க கடற்பரப்பில் வைத்து கைதுசெய்துள்ளனர். குறித்த இலங்கையர்கள் வாழைச்சேனை பகுதியிலிருந்து படகொன்றின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்டுள்ளனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபர்களை கடற்படையினர் திருகோணமலை துறைமுகத்துக்கு அழைத்துவந்துள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவு திணைக்களத்தின் கடல்சார் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்திலிருந்து புறப்பட்ட குறித்த நபர்கள், நீண்ட நாட்களாகப் படகில் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல்-

namal rajapakseபொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது நாமல் ராஜபக்ஸவை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப் நாமல் ராஜபக்ஸவுடன் கைது செய்யப்பட்ட சுதர்ஷன பண்டார கனேகொடவும் பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து பொலிஸ் நிதிக்குக்குற்ற விசாரணைப் பிரிவினரால் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்களுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு-

human rightsஇலங்கை கடல் எல்லை மீறல்களில் ஈடுபடும் இந்திய மீனவர்களினால் வடக்கு மீனவர்களின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து அனைத்து இலங்கை மீன்பிடி கூட்டமைப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாட்டு மனுவொன்றை தாக்கல் செய்தது.

குறித்த மனுவை தாக்கல் செய்ததினை தொடர்ந்து கருத்து தெரிவித்த அதன் தேசிய அமைப்பொன்றின், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரத்ன கமகே, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தற்போதைய நிலையில் தோல்வியுற்றுள்ளது என தெரிவித்திருந்தார்.