முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டத்தை சீர்த்திருத்த உடனடியாக நடிவடிக்கை எடுக்குமாறு, சுமார் 190இற்கும் மேற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், 30ற்கும் மேற்பட்ட பொது அமைப்புகளும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கங்கள் இந்த சட்டத்தினை சீர்திருத்தத் தவறியமையானது மிகவும் நீண்ட காலப் பிரச்சினையாகக் காணப்படுவதுடன் முஸ்லிம் சமூகத்தின் மீதும் குறிப்பாக, பெண்கள், சிறுவர்கள் மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அவர்கள் இணைந்து அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இச்செயல்முறையினை முன்னோக்கி எடுத்துச் செல்வதன் மூலம், இலங்கை அரசினால் இறுதியாக இந்நாட்டு முஸ்லிம் பிரஜைகளுக்கான அதிக பாதுகாப்பு, சமத்துவத்தினை உறுதிப்படுத்த முடியும். தற்போது காணப்படுகின்ற முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள், குறிப்பாக திருமணம் முடிக்கக்கூடிய வயது, திருமணம், விவாகரத்தின் பரஸ்பர ஒப்புதலிலுள்ள பற்றாக்குறை மற்றும் தற்போது இருக்கின்ற காழி நீதிமன்ற அமைப்பில் காணப்படுகின்ற தீவிர வரம்புகள் போன்றன காணப்படுகின்றன.

இப்பிரச்சினைகளை அணுக தவறுகின்றமையானது பெண்களை பாதிக்கப்படக்கூடிய இடத்தில் வைப்பதுடன் இலங்கையின் அரசமைப்பால் உறுதி செய்யப்பட்ட சமத்துவ உரிமையினைப் பலவீனப்படுத்துகின்றது. குறைந்தது முப்பது வருடங்களாகவாவது, முஸ்லிம் பெண் அமைப்புகள் மற்றும் கல்வியலாளர்கள் பகுதி மற்றும் முழுமையான சீர்திருத்த்துக்காக வாதிட்டுள்ளனர். அடுத்தடுத்த அரசாங்கங்கள் குறைந்தது 5 குழுக்களையாவது நியமித்தும், அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில் தோல்வியுற்றுள்ளது.

மீண்டும் மீண்டும் முஸ்லிம் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறிய இலங்கை நாட்டின் தவறினை அரசாங்கம் உடனடியாக அனுக நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தினிடையே மார்க்கத் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் உள்ளடங்களாக பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்ற போதிலும் நாட்டினது மூலபொறுப்பான அதன் அனைத்து பிரஜைகளையும் சமமாக பாதுகாத்தல் மேலோங்க வேண்டும்.

அரசாங்கம் உறுதியாக நடந்து கொள்வது முக்கியமாக இருப்பதுடன் உடனடியாக பெண்களை ஆண்களிலிருந்து வேற்றுமைப்படுத்துகின்ற சட்டங்களை சீர்திருத்த வேண்டும். முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்ட சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகளை முன்னிலைப் படுத்துவதனால் இந்நாட்டு மக்களுக்கு இவ்வரசாங்கம் மற்றும் நாடாளுமன்றத்தினால் அதிக சமத்துவம் மற்றும் நீதியினை உறுதிப்படுத்த வேண்டும்.’ என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.