கொட்டாஞ்சேனை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்த 11 இளைஞர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரனாகொடவுக்கு எதிராக வழக்கை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் காரணங்களை அறிவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு எதிராக அவரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில் மேலும் காரணங்களை ஆராய்வதாக, மேலதிக சொலிசிட்டர் நாயகம் அயேசா ஜினசேன நேற்று(4) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

கொழும்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதிவாதியாக தன்னை பெயரிடுவதற்கு எதிராக ரிட் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரியே மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தான் உள்ளிட்ட 14 அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில், சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை வலுவற்றதாகும் ரிட் கட்டளையைப் பிறப்பிக்குமாறு அம்மனுவில் கோரப்பட்டுள்ளது,

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர (தலைவர்) மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமால் மனு ஆராயப்பட்டபோதே பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகியிருந்த  மேலதிக சொலிசிட்டர் நாயகம அயேசா ஜினசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ரிட் மனுவை மே மாதம் 17ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.