பதுளை – பசறை, 13 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளதாக பசறை வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி கே.எம்.சமரபந்து தெரிவித்தார்.

9 ஆண்களும் 5 பெண்களுமே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

உயிரிழந்தவர்களில் பஸ்ஸின் சாரதியும் அடங்குவதாக அவர் கூறினார்.

காயமடைந்தவர்களில் 30 பேர் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக பதுளை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அவர்களில் 16 பேர் பெண்களாவர். காயமடைந்த 14 ஆண்களும் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் 03 சிறார்களும் அடங்குகின்றனர்.

பலத்த காயமடைந்த இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார். 7 பேர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

லுணுகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்று பசறை 13 ஆம் கட்டை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.

பொதுப்போக்குவரத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 7.15 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்வதற்காக 08 அம்பியூலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக விசேட வைத்திய குழுக்களும் சுகாதார பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.