கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த 17 பேரில் ஐவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.  காயமடைந்த ஏனையோருக்கு அவசர விபத்துப்பிரிவில் சிகிச்சையளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தெனியாயவிலிருந்து கொழும்பு வந்து கொழும்பிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் மத்துகம நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று பயணிகள் பேருந்து மீது முறிந்து வீழ்ந்து விபத்தை ஏற்படுத்திய மரம் 40வருடங்கள் பழமையானது என கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ரானி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

40 வருடங்கள் பழமை வாய்ந்த ரொபரோஸியா வகையான மரம் ஒன்றே பேருந்தில் முறிந்து வீழ்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து அரச பேருந்து மீது மரம் முறிந்து விழுந்து விபத்திற்குள்ளானபோது பேருந்தில் மொத்தம் 36 பேர் வரை இருந்தனர் என அந்த பேருந்தின் நடத்துனர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மொத்தமாக ஐவர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் நட்ட ஈடு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.