நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சபரகமுவ தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். மேல் சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாத்தளை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.
அத்துடன் புத்தளம் முதல் கொழும்பு காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன் சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதன்படி களுகங்கை கிங் கங்கை நில்வளா கங்கை மஹா ஓயா மற்றும் அத்தனுகளு ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக குறித்த ஆறுகளை அண்டியுள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை நாட்டிலுள்ள 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு களுத்துறை கண்டி கேகாலை இரத்தினபுரி காலி கம்பஹா ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய வலல்லாவிட்ட மற்றும் மத்துகமை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பிரதேச செயலக பிரிவுக்கும் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலக பிரிவுக்கும் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் நாகொட பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த 9 மாவட்டங்களில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.