இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கக் கோரி தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் விடுவிக்கக்கோரி, மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் இராமேஸ்வரம் மீனவர்கள் இராமேஸ்வரம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 15 ஆம் திகதியிலிருந்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அரசுடைமையாக்கப்பட்டுள்ள படகுகளையும் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள விசைப்படகுகளையும் மத்திய மாநில அரசுகள் மீட்டுக்கொடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, நாகையில் இருந்து மீன் பிடிக்கச்சென்ற 9 மீனவர்கள் மீது வேதாரண்யம் அருகே இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மீனவர்கள் வசமிருந்த 5 இலட்சம் ரூபா மதிப்புள்ள மீன்பிடி வலைகள், GPS கருவிகள் ஆகியவற்றை அவர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த சில ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் K.S.அழகிரி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கை அரசின் தமிழக மீனவர்களுக்கு எதிரான போக்கை கண்டித்து தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை அரசின் தூதரக அலுவலகத்தின் முன்பு விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே , இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களது அத்துமீறலை தடுத்து நிறுத்தும் வகையில், யாழ். மாவட்ட மீனவ அமைப்புகள் சில இந்தியா செல்ல தீர்மானித்துள்ளன.
இந்த பயணத்திற்கு தேவையான பணத்தை உண்டியல் குலுக்கி திரட்டும் நடவடிக்கை இன்று யாழ். பருத்தித்துறை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.