தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை  வௌியிட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று(19) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, அப்போதைய மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் எழ வேண்டும் என கருத்து வௌியிட்டதாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த கூற்றானது, அரசியலமைப்பின் 06 ஆவது பிரிவின் திருத்தம், 1978 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டம், தண்டனைச் சட்டக் கோவையின் 120 ஆம் பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் குற்றமாகும் என குறிப்பிடப்பட்டு, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முதல் அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர்.

வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக பெண்கள் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள் குறித்த அச்சம் மற்றும் ஆத்திரத்தினால் அவர் கருத்து வௌியிட்டதாகவும் LTTE காலத்தில் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றால் அதற்கு பாரதூரமான தண்டனைகள் வழங்கப்பட்டதாகவும் நாட்டின் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க அவ்வாறான நிர்வாகமொன்று தற்போது ஏற்படுத்தப்பட வேண்டுமெனும் பொருளிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்ததாக அவர் சார்பில் ஆஜரான  ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்திருந்தார்.

அத்துடன், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையிலும் அவர் கருத்து வௌியிடவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனையடுத்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 08 ஆம் திகதி ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், குறித்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று(19) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் கீழ், விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தேசிக்கவில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் தமக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, விஜயகலா மகேஸ்வரனை விடுதலை செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

குறித்த வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.