தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன. இதற்கமைய, மும்பையில் இடம்பெற்ற சர்வதேச கடல்சார் மாநாட்டின் போது, துபாய் நிறுவனமொன்றுடன் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் கப்பல் போக்குவரத்திற்காக இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக துறைமுக அதிகாரிகளை மேற்கோள் காட்டி தமிழக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இதன் மூலம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை மையமாகக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் 300 பயணிகள் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கப்பல் இன்னும் 2 மாதங்களில் தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வ.உ.சி துறைமுக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
அதன் பின்னர் உடனடியாக தூத்துக்குடி – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.
தொடர்ந்து, கொழும்பு – ராமேஸ்வரம் – தூத்துக்குடி – கன்னியாகுமாரிக்கு இடையே கப்பல் சேவை முன்னெடுக்கப்படும் எனவும் தமிழக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.