தான் தெரிவு செய்த பிரதிநிதியிடமிருந்து ஒரு நற்சான்றுக் கையெழுத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையில் ஒரு சமூகம் வாழுதென்றால் அது திருமலை மாவட்ட தமிழர் சமூகமாகத்தான் இருக்க முடியும். அந்த மக்களின் நன்மை தீமைகளில் பங்கெடுக்க ஆளில்லை. நலன்களை சென்று பார்க்க ஆளில்லை. அவர்களுக்காக பேசவும் ஆளில்லை.
தமிழாலும் சைவத்தாலும் சிறப்புப் பெற்று தமிழர்களின் தாயகமாக திகழ்ந்த திருகோணமலை, பௌத்த சிங்கள மேலாதிக்கச் செயற்பாடுகளால் அவர்களின் கைகளில் இருந்து இன்று நழுவிச் சென்று விட்டது என்றே சொல்லலாம்.
திருமலையை தமது கைகளில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த பல நூற்றுக் கணக்கான இளைஞர்களினதும் தேசியவாதிகளினதும் கனவுகளை, திருமலையை தமிழர்களிடமிருந்து தட்டிப்பறித்திட வேண்டுமென்று செயற்பட்டவர்கள் தோற்கடித்து விட்டார்கள். கால சூழல் மாற்றத்திற்கு ஏற்ப திட்டமிட்ட வகையில், வலுப்படுத்தப்பட்ட அரசியல் இராணுவ கட்டமைப்புகளின் பாதுகாப்புடன் யாவும் நடந்தேறியுள்ளது.
ஆனால் தமிழ் மக்களோ, மாற்றங்களை உள்வாங்கி முன்னோக்கிச் செல்ல எக் கணத்திலும் முயற்சிக்கவில்லை. பிரதிநிதித்துவ இழப்புக் குறித்த அச்சம் அந்த மக்களை கடந்த காலங்களில் கேள்விக்கிடமின்றி ஒரு கட்சிக்குப் பின்னால் மட்டும் அணி திரளச் செய்தது.
இதனை தமிழரசுக் கட்சி தவறாக விளங்கிக் கொண்டமையால்தான், தமிழ் மக்களுக்கு செயல் திறன் உள்ள பிரதிநிதித்துவம் தேவை என்பதை உணர அக் கட்சி மறுக்கிறது. அந்தக் கட்சியின் பிரதிநிதியும்கூட சொல்லிழந்து, செயலிழந்து, தளர்ந்து முடங்கிப் போயிருக்கிற நிலையில் கூட பதவியை கைமாற்ற மறுத்து அடம்பிடிக்கிறார்.
இந்த விடயங்கள் திருமலை வாழ் மக்கள் அறியாததொன்றல்ல. அவர்களின் தவறே, தேவையானபோது தேவையான விடயத்தை தேவையான இடத்தில் பேசத் தவறியதுதான். தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற ஒரே காரணத்துக்காக எண்பத்தேழு வயதென்று தெரிந்தும் பொருத்தமான முறையில் செயற்பட முடியாத ஒருவரை தமது பிரதிநிதியாக தெரிவு செய்த பாவத்திற்குத்தான் இன்று பலனை அனுபவிக்கிறார்கள்.
திருமலையில் எங்கும் தமிழர்களுக்கான குரல் ஒலிப்பதில்லை. அரச தரப்புக் கூட்டம் எதிலும் தமிழர் பிரச்சினை பேசப்படுவதில்லை. இவ்வாறான நிலையை ஏனைய சமூகங்கள் உள்ளூர வரவேற்கிறார்கள். தமிழ்ச் சமூகத்தை இந்தளவுக்கு பலவீனப்படுத்தி விட்டு அந்த மக்கள் தமது தேவைகளுக்காக மாற்றுக் கட்சிகளிடம், மாற்று சமூகத்தினரிடம் சோரம் போகிறார்கள் எனக் கூக்குரல் இடுவதில் என்ன நியாயம்?
மக்கள்தான் ஏதோ சில காரணங்களுக்காக தமது பிரதிநிதித்துவ வெற்றிடம் பற்றி ஆர்ப்பாட்டம் பண்ணாமல் இருந்து விட்டார்கள். கண்டித்து எதிர்ப்பு நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாது இருந்து விட்டார்கள். அதற்காக ஒரு மனிதர் மனச்சாட்சியே இல்லாமல், மக்களின் வரிப்பணத்தில் வாழ்ந்துகொண்டும் சேவை செய்ய முடியாத முடக்க நிலையில் இருந்து கொண்டும் பிரதிநிதித்துவத்தை கைவிடேன் என்று அடம் பிடிப்பதை, அராஜகம் பண்ணுவதை எண்ணி அவர் வெட்கப்பட வேண்டாமா? அல்லது அவரது விசுவாசிகளாவது வெட்கப்பட மாட்டார்களா?
இவையெல்லாம் இதுவரை நடைபெறவில்லை, இனியும் நடைபெறாது என்பதால்தான் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவருமான எம். ஏ. சுமந்திரன் அவர்கள், கட்சி அரசியலுக்குள்ளும் நாடாளுமன்றத்திற்குள்ளும் தன்னை அழைத்து வந்த சம்பந்தர் ஐயாவை நோக்கி பகிரங்கமாகவே பதவி விலகல் கோரிக்கையை விடுத்துள்ளார். கட்சி உறுப்பினர்களின் மனநிலை தெரியாமல் எழுந்தமானமாக சுமந்திரன் அவர்கள் சம்பந்தர் ஐயாவின் விடயத்தில் கோரிக்கை விட்டிருக்க மாட்டார். விடயங்கள் அனைத்தையும் நன்கு அறிந்தே பூனைக்கு மணியை கட்டியுள்ளார்.
எம். ஏ. சுமந்திரன் மீதான அரசியல் விமர்சனங்களுக்கு என்றும் தட்டுப்பாடு இருக்கவில்லை. ஆனாலும் அவ்ர் தனது இலக்கு(?) நோக்கிய பயணத்தில் சோர்ந்து போனதுமில்லை. தனது பலம் பலவீனம், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பலம் பலவீனம், கட்சி உறுப்பினர்களின் விருப்பங்கள் தேவைகள் என அனைத்தும் நன்கு அறிந்து வைத்துள்ளார். குடாநாட்டிலும், வன்னியிலும், கிழக்கிலும் யாரை எப்படி கையாள வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் மாத்திரமின்றி, தமிழரசுக் கட்சியின் தலைமை மாற்றமும் விரைவாக எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில், தனக்குப் பாதகமில்லாத சூழ்நிலையில், கட்சிக்கும் மக்களுக்கும் சாதகமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சம்பந்தர் ஐயாவுடன் இணைந்து சுமந்திரன் அவர்கள் செயற்பட்ட விதமே கூட்டமைப்புக்குள் ஜனநாயகப் பண்புகளை இல்லாததாக்கியதோடு, கட்சிகள் படிப்படியாக வெளியேறவும், இறுதியில் கூட்டமைப்பு இரண்டாக உடைவதற்கும் வழி செய்தது.
திருமலை மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் பலவீனமடைவதை ஏனைய தரப்புகள் சுட்டிக் காட்டியபோது அது தமது உட்கட்சி விடயம் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனால் இன்று சுமந்திரன் அவர்களே விடயத்தை பொதுவெளிக்கு கொண்டு வந்துள்ளார். தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவராக சம்பந்தன் ஐயா தொடர்வது பற்றி வெளித் தரப்பு யாருக்கும் அக்கறை இருக்காது என நம்பலாம். உண்மையில் அது கட்சியின் உள்ளக விடயம்தான்.
ஆனால் அவர் நாடாளுமன்றக் குழுத் தலைவராக, திருமலை மக்களின் பிரதிநிதியாக செயற்படுவது என்பது மக்கள் சார்ந்த விடயம். அதனால், காலம் பிந்தியதாயினும் அவரிடம் முன்வைத்துள்ள பதவி விலகல் கோரிக்கை மிக மிக அவசியமானது. வெறும் கோரிக்கையுடன் இவ்விடயம் முற்றுப் பெறக்கூடாது. இது குறித்த முறையான நிர்வாகச் செயற்பாடுகள் கட்சிக்குள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அதனால் திருமலை மாவட்ட மக்களுக்கு விமோசனமும் கிடைக்க வேண்டும்.
பதவி விலகல் கோரிக்கையால் எரிச்சலடைபவர்களை எண்ணி நாம் வருந்தத் தேவையில்ல. ஏனெனில், சம்பந்தர் ஐயா தற்போது பெற்றுக் கொள்ளுகின்ற அனைத்து வரப்பிரசாதங்களுமே மக்களின் வரிப் பணத்தின் மூலமானவை. தக்க வைத்துக் கொண்டுள்ள பதவியும் திருமலை மாவட்டத்தின் தமிழ் மக்கள் வழங்கியதே.
கே.என்.ஆர்
27.10.2023.