வவுனியா நீலியாமோட்டை சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்விகற்கும் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள 17 மாணவர்களுக்கு 07.10.2023 சனிக்கிழமை வவுனியாவைச் சேர்ந்த தற்போது கனடா டொரன்ரோவில் வசித்து வருகின்ற திரு. சார்ள்ஸ் ஜோசெப் (ஆரத்தி சுப்பர் சென்டர் உரிமையாளர்) குடும்பத்தினரின் ரூபா 56,500/-நிதியுதவியில் தைத்த பாடசாலைச் சீருடைகளும், மழைக் கவசங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் வவுனியா கோவில் குளம் ரொக்கெட் விளையாட்டு கழகம் தீபாவளி தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டியின் ஆரம்பநிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்த போது
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே நாளை மறுதினம் (10) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சேவையில் ஈடுபடவுள்ள செரியாபாணி(Cheriyapani) கப்பல், இன்றும் நாளையும் சோதனை ஓட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 25 கோடி இந்திய ரூபா செலவில் கொச்சினில் தயாரிக்கப்பட்ட செரியாபாணி கப்பல் மணித்தியாலத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது.
மலேசிய வௌிவிவகார அமைச்சர் சம்ப்ரி அப்துல் காதிர் (Zambry Abdul Kadir) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார். எதிர்வரும் 09 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் சம்ப்ரி அப்துல் காதிர் கலந்துகொள்ளவுள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சபரகமுவ தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். மேல் சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாத்தளை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து 7 தமிழ் தேசிய கட்சிகள் நேற்றைய தினம் (06) ஒன்றுகூடி ஆராய்ந்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியினர் அடுத்த வாரம் வடக்கு கிழக்கு சார்ந்த வகையில் நிர்வாக முடக்க போராட்டத்திற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்தனர்.
வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸ் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையில் 03.10.2023 சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது ஆளுநர் வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்து தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றி தௌிவுபடுத்தினார்.
கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த 17 பேரில் ஐவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ஏனையோருக்கு அவசர விபத்துப்பிரிவில் சிகிச்சையளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தெனியாயவிலிருந்து கொழும்பு வந்து கொழும்பிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் மத்துகம நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் இன்று 4 ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு நீதவான் பதவி விலகிய விவகாரத்தில் நீதி வழங்குமாறு கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, முல்லைத்தீவு நீதவான் T. சரவணராஜாவின் பதவி விலகலுக்கு நீதி கோரியும் ஜனநாயகத்தில் கை வைக்க வேண்டாம் என வலியுறுத்தியும் கொழும்பில் சட்டத்தரணிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான படகு சேவையை ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்க முடியும் என இந்திய உயர்ஸ்தானிகர் தன்னிடம் அறிவித்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் படகு சேவை தொடர்பில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனை கூறினார்.