மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று (செங்கலடி), கோறளைப்பற்று தெற்கு (கிரான்) ஆகிய இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் மேய்வதற்குரிய மேய்ச்சல் தரையாக சுமார் இருபத்தைந்தாயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் கால்நடைப் பண்ணையாளர்களால் வழமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் தலைமையில் நீர்ப்பாசனம், விவசாயம், கால்நடை, வனவிலங்கு, வனஇலாகா போன்ற
திணைக்களங்களின் பங்குபற்றுதலுடன் அரசாங்கத்தின் சுற்று நிருபத்திற்கு அமைவாக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய பொது அமைப்புக்களின் கருத்துக்களையும் உள்வாங்கி வருடம்தோறும் பல கூட்டங்கள் நடாத்தப்பட்டு அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கு இணங்க மேய்ச்சல் இடங்களும் தீர்மானிக்கப்பட்டு வேளாண்மைக் காலத்தில் உரிய இடங்களுக்கு கால்நடைகள் கொண்டு செல்லப்படுவது வழக்கமாகும்.
தீர்மானிக்கப்பட்ட இடங்களான, ஏறாவூர்பற்று (செங்கலடி) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரலக்குளம்-201A கிராமசேவகர் பிரிவின் வெள்ளைக்கல், மேசைக்கல், புலூட்டுமானோடை மற்றும் கித்துள்வெவ -185B கிராமசேவகர் பிரிவின் புலியடிப்பொத்தாணை மற்றும் கோப்பாவெளி-146யு கிராமசேவகர் பிரிவின் கிடாரம்போட்டமடு, கொட்டான்கச்சி ஆகிய இடங்களும், கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை-209D கிராமசேவகர் பிரிவின் மாதவணை, மயிலத்தமடு, அம்புமுனை, ஆமிமடு அலியாரோடை,முருங்கையடிபட்டி, அத்தினக்கல்வெட்டை, குமாரவேல் வெட்டை நெலிகல், எழுவாரோடை மற்றும் வடமுனை-210A கிராமசேவகர் பிரிவின் மீராண்டாவில் ஆகிய இடங்களும் மேய்ச்சல் தரைகளாக இனம் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட பல இடங்களில் குறிப்பாக மாதவணை மயிலத்தமடு ஆகிய இடங்களில் குறிப்பிட்ட ஏக்கர் காணிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சாராத பெரும்பான்மை சகோதர சிங்கள இனத்தவர்கள் அடாத்தாக காணிகளை துப்பரவு செய்து தற்காலிக கூடாரங்களை அமைத்து விவசாயச் செய்கைகளில் ஈடுபடுவதோடு, பண்ணையாளர்களின் கால்நடைகளை சுடுவதும், கால்நடைகளுக்கு சுருக்கு வைப்பதும், கால்நடைப் பண்ணையாளர்களை அச்சுறுத்துவதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டு வாரங்களைத் தாண்டும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறும் தளத்திற்குச் செல்லும் மக்கள் பிரதிநிதிகள், மகாவலிக்குரிய காணிகள் சிங்கள இனத்தவர்களால் அடாத்தாக பிடிக்கப்படுவதை நிறுத்துவோம் என உறுதி கூற முடியாத நிலையில் உள்ளனர்.
ஐந்நூறு வரையிலான கால்நடைப்பண்ணையாளர்களில், சுமார் 50 பேருக்கு மேற்பட்டவர்கள் தினந்தோறும் சுழற்சி முறையில், தங்களது வேலைப்பழுக்களை பாராமல் இரவு பகலாக மழையிலும், வெயிலிலும் தெருவோரங்களில் போராடி வருகின்றனர். இன்று போராட்டக்காரர்களுடன் இணைந்து புளொட் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், புளொட் உபதலைவர் பொன். செல்லத்துரை, புளொட் மாவட்ட அமைப்பாளர் ம. நிஸ்கானந்தராசா (சூட்டி) உள்ளிட்ட குழுவினர் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
கடந்த காலத்தைய, சமீபத்தைய நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி பௌத்த பிக்குகளின் வலுவான பங்களிப்புடன் அங்கு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப் பிரச்சினையை தீர்க்கக் கூடிய வலு அரசதரப்புக்கே உரியது. இவ்வளவு நாளாக இப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதென்பது அரசினதும் கபட நோக்கத்தினையும் ஆளும் தரப்பு தமிழ்ப் பிரதிநிதிகளின் இயலாமையையுமே வெளிக்காட்டுகின்றது.

