ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் இருநாடுகளும் கூட்டறிக்கையொன்றை வௌியிட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீன ஜனாதிபதி மற்றும் துணை பிரதமரைச் சந்தித்து விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன – இலங்கை பாரம்பரிய நட்புறவு, பரஸ்பர ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இந்த விஜயத்தின் போது பொதுவான புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாய்வான் சீன நிலத்திலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதி என ஏற்றுக்கொண்டு, ஒரே சீனா கொள்கைக்கான தனது அர்ப்பணிப்பை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நிலப்பரப்பிற்குள் சீனாவிற்கு எதிரான பிரிவினைவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் இருநாடுகளும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.