எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, மட்டக்களப்பு தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைகள் அபகரிக்கப்படுகின்றமை, தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அங்கு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் அழைப்பில் வடக்கு கிழக்கு முழுவதும் எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை பூரண கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி வவுனியாவில் இன்று துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்), இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திரு. கருணாநிதி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மயூரன் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

