நாட்டை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6′ மேற்கொள்ளும் ஆய்வுகளில் இன்று தமது ஆய்வுக் குழு இணையவுள்ளதாக நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுகளில் தமது நிறுவனத்தின் நான்கு அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன் இந்த ஆய்வுகளில் இரண்டு கடற்படை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷி யான் 6 என்ற சீன ஆய்வுக் கப்பல் கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பல் இலங்கையை வந்தடைந்தபோது ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. அதன்பின்னரே வெளிவிவகார அமைச்சுஇ கடல் ஆய்வுகளுக்காக இரண்டு நாட்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் நாட்டின் மேற்கு கடற்பரப்பில் சீன கப்பலுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்போது கடல் நீரின் உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலை குறித்து சோதனைகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகள் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தும் நடத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் இந்த ஆய்வுகள் நடத்தப்படுவது இதுவே முதல் தடவையென குறிப்பிடப்பட்டுள்ளது.