தென்னாபிரிக்காவின் அழைப்பு வரவில்லை-இரா.சம்பந்தன்-

sampanthanஅரசாங்கத்தின் குழுவொன்று தென்னாபிரிக்கா சென்றுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரைவில் தென்னாபிரிக்காவுக்கு வருகை தரும் என அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் தெரிவித்திருந்த நிலையில், அவ்வாறான எந்த அழைப்புக்களும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.. கடந்த வருடம் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றியிருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து பேசியிருந்தார். இச் சந்திப்பின்போது இருதரப்பும் தென்னாபிரிக்கா சென்று அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள விரும்பினர் என்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் கூறியுள்ளார். இதனடிப்படையிலேயே, அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா தலைமையிலான குழுவினர் கடந்த புதன்கிழமை தென்னாபிரிக்கா சென்றுள்ளதாகவும், அதுபோலவே கூட்டமைப்பும் விரைவில் தென்னாபிரிக்கா வரவுள்ளதாகவும் தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் குறிப்பிட்டிருந்தார்.

நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை- முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்-

vikiவடமாகாணத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பீ.பீ.சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்த பல இராணுவ காவலரண்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்க வேண்டிய விடயம். ஆனாலும் காவலரண்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் பாதுகாப்பு தரப்பினர் சைக்கிள்களில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அந்த பகுதிகள் பயங்கரவாதப் பிரதேசம் என்று கருதுகின்ற மனநிலையே காரணம். ஆனால் வடக்கு மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் இல்லை என முதலமைச்சர் கூறியுள்ளார். அதேநேரம் கடந்த காலங்களை மறந்து விடுமாறு யாராலும் சாதாரணமாக கோர முடியும். மறப்பதற்கு தமிழ் மக்கள் சந்தித்த கடந்தகாலம் சாதாரணமானதாக இருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கரம்பன் தென்கிழக்கில் சட்டவிரோத நடவடிக்கை தடுக்கப்பட்டது-

palmeraயாழ். தீவகம் வடக்கு ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரம்பன் தென்கிழக்கு பகுதியில் கடந்த 19.02.2014 அன்று சட்டவிரோதமாக பனைமரங்கள் தறிக்கப்பட்டன. இதன்போது பிரதேசவாசிகள் பிரதேச செயலர் திருமதி. எழிலரசி அன்டன் யோகநாதனுக்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்து பிரதேச செயலாளர் திருமதி. எழிலரசி அன்டன் யோகநாயகம் தலைமையில் உடனடியாக சம்பவம் இடம்பெற்றுவந்த பற்றைக்காட்டுப் பகுதிக்கு ஊர்காவற்துறை பிரதேச செயலக அலுவலர்களுடன் சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரின் பணிப்பின் பேரில் ஊர்காவற்துறை பொலிசாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர் இதன்போது அவ்விடயத்தில் தறிக்கப்பட்ட பனை மரங்களுடன் நால்வர் கைதாகினர். அவர்களிடமிருந்து பெறுமதி மிக்க ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதன்போது ஊர்காவற்துறை நீதிமன்றில் கைதானவர்களை ஆஜர்படுத்துவதாக போலிஸ் அதிகாரி கூறினார். மேற்படி சம்பவத்தில் பிரதேச செயலாளரின் துணிச்சலை அப்பிரதேச மக்கள் பாராட்டியுள்ளனர்.

இலங்கையர்களை நாடு கடத்துமாறு காங்கிரஸ் வலியுறுத்தல்-

unnamed0இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கை தமிழர்களும் நாடுகடத்தப்பட வேண்டும் என இந்திய காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில தலைமை கோரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் வீ.வைத்தியலிங்கம் இதனை கோரியுள்ளார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலைசெய்ய தமிழக அரசு மேற்கொண்டுள்ள தீர்மானம், எதிர்வரும் லோக்சபா தேர்தல்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாகும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரம் இந்தியாவில் உள்ள சகல இலங்கை தமிழர்களையும் நாடுகடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தமிழகம் ஜனாதிபதிக்கு ஆட்சிக்குள் வரவேண்டும்-சுப்பிரமணியம் சுவாமி-

subramaniam swamyராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் சட்ட விரோதமானது என ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்தை இரத்து செய்ய ஜெயலலிதா ஜெயராம் முன்வராத பட்சத்தில், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுலாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் ஜெயலிலதாவின் தீர்மானத்தை ரத்து செய்வதற்கான உத்தரவை, இந்திய அரசியல் அமைப்பின் 256 சரத்தின்படி, மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு ஜெயலலிதா அடிபணியாமல் இருப்பாராக இருந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுலாக்குவதை விட வேறு வழி இல்லை என்றும் ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பூண்டுலோயா தீ விபத்தில் 31 கடைகள் நாசம்-

imagesCAYGW205நுவரெலியா, பூண்டுலோயா நகரில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவம் காரணமாக நகரின் 31 கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. சில்லறைக் கடை ஒன்றில் முதலில் ஏற்பட்ட தீ பின்னர் அந்த கடைத் தொகுதியில் தொடர்ந்து பரவியுள்ளது. நுவரெலியா தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றபோதும், அதனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் பெக்கோ இயந்திரதைத் கொண்டு குறித்த கடைத் தொகுதி இடிக்கப்பட்டு, தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சிராணி தொடர்பான தீர்ப்பு, உயர்நீதிமன்றம் நிராகரிப்பு-

shirani-bandaranayake-626x380-626x380முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீது சுமத்தப்பட்ட குற்றவியல் பிரேரணையை விசாரணை செய்ய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது நாடாளுமன்றத்துக்கு இந்த அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பை ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்தது இந்நிலையில் இதற்கு எதிராக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்திருந்தார் இந்த விசாரணை இன்று இடம்பெற்றபோது தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், உயர் சட்டவாக்க சபை என்ற அடிப்படையில் நாடாளுமன்றுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது

உதயன் நிறுவன வளாகத்திலிருந்து குண்டு மீட்பு-

udayanயாழ். கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை நிறுவன வளாகத்திலிருந்து பழைய ‘பாம்’ குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பத்திரிகை வாளாகத்தினை துப்புரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பாம் குண்டு ஒன்று இருப்பதனை அவதானித்த ஊழியர்கள் இது குறித்து தகவல் வழங்கியதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதுபற்றி இராணுவத்தின் குண்டு செயலிழக்கும் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குண்டு மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அபிவிருத்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி-

untitled eவடக்கு கிழக்கில் மாகாணங்களில் வாழும் போரில் துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்கும் என அதன் ஆசிய பிராந்திய தூதுவர் டேவிட் டாலி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, கரடியனாறு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தானிய களஞ்சியத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த களஞ்சியத்தை நிர்மாணிக்க 44 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த களஞ்சியத்தில் 500 மெற்றி தொன் தானியங்களை சேமித்து வைக்க முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியா தனி தீர்மானம்-திமுக-

untitledஇலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக ஐ.நா மனித உரிமை ஆணையத்திடம் இந்தியா தனி தீர்மானம் அளித்திட வேண்டும் என மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க பாராளுமன்ற குழு உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துள்ளனர். இதன்போது, இலங்கையில் 2008-2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற போரின்போது போர்க் குற்றம் புரிந்தது. தொடர்பாக ஐக்கிய நாடுகள் தலைமையிலான தன்னிச்சையான மற்றும் சர்வதேச விசாரணை நடத்த ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுள்ளனர். மேலும், 2008 டிசம்பர் மாதம் முதல் 2009-ஆம் ஆண்டு மே மாதம் வரை இலங்கை இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா-வின் கீழ் இயங்கும் தன்னிச்சையான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும். இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறிப்பாக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்க ஐ.நா சபை நடைமுறை அமைக்க வேண்டும் என்ற இரு பரிந்துரைகளை எடுத்துரைத்துள்ளனர். மார்ச் 3-ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா முன்நின்று தனி தீர்மானம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துவதாக திமுக எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.