Header image alt text

நான்காவது நாளாக தொடரும் தம்பி க.மு தம்பிராசாவின் சத்தியாக்கிரகப் போராட்டம்-

thampi..வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசாவ அவர்களின் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 21.02.2014ஆம் திகதியன்று காலை 6.45மணி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு நான்காவது நாளாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம் இங்கு இணைக்கப்படுகின்றது:-

வலி வடக்கு மற்றும் சம்பூர் மக்களின் தற்போதைய தேவை நிவாரணமும், மீள்குடியேற்றமும், வேலைவாய்ப்புமே. இவற்றைக்கூட நிறைவுசெய்ய முடியாத அரசு எமது மக்களுக்கு எந்த உரிமைகளை எப்படித் தரப்போகின்றது?  Read more

2014 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு; ‘புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து’

 23.02.2014 இன்று சுவிஸ்லாந்து பேர்ன் மாநகரில் கூடிய ‘புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து’ பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பொதுச்சபையில் கலந்து கொண்டவர்களில் இருந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் ஆலோசனை சபையும் தெரிவு செய்யப்பட்டது. Read more

இலங்கையின் தீர்வு கூட்டு மீன்பிடித் தொழில்-அமைச்சர் ராஜித சேனாரத்ன-

rajitha senaratneஇந்திய மீனவர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக இலங்கை- இந்திய மீனவர்கள் இருநாட்டு கடற்பரப்புக்குள் தடையின்றி மீன்பிடிக்கக்கூடிய கூட்டுத் தொழில்முறை ஒன்று பற்றி ஆராய தயாராக இருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்களை வேறு ஆழ்கடல் பிராந்தியத்திற்கு அனுப்புவதில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சனைக்கு இந்த கூட்டுத் தொழில்முறை தீர்வாக அமையும் என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை மீனவர்களை பாதிக்காத விதத்தில் இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து தடையின்றி மீன்பிடித்துச் செல்வதற்கு இதன்மூலம் வழியேற்படும். அதேபோல், இலங்கை மீனவர்களும் இந்திய கடற்பரப்புக்குள் சென்று மீன்பிடித்துவர வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் ராஜித்த குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் ஆயிரக்கணக்கில் படையெடுத்துவந்து இலங்கையின் கடல்வளங்களை சுரண்டிச் செல்வதாக மீனவ அமைப்புகளும் இலங்கை அரசும் நீண்டகாலமாக வாதிட்டு வருகின்றன. இந்நிலையில் இருதரப்பு கூட்டுத் தொழில்முறை இலங்கை மீனவர்களை மேலும் பாதிக்காதா என்று கேட்டதற்கு, அப்படி பாதிப்பு இருக்கின்ற காரணத்தினால் தான் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை கைதுசெய்கிறோம். இப்படியான கூட்டுத் தொழில் முறை ஒன்று உருவாகுமானால் இப்படியான பாதிப்புகள் பற்றியும் இருதரப்பும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் – அரசியல் கட்சிகள் சந்திப்பு-

desapiryaதேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் இன்றைய தினம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான முறைபாடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தேர்தல் முறைபாடுகள் தொடர்பில் ஆராயும் குழுவின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த குழுவில் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், தேர்தல் கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் போக்கு தன்னிச்சையானது-வீ. நாராணயசாமி-

narayanasamy ministerரஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு மேற்கொண்ட தீர்மானமானது தன்னிச்;சையானது என்று, இந்திய பிரதமர் அலுவலக அமைச்சர் வீ நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார். தமிழக முதல்வருக்கு இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக முதல்வரின் இந்த தீர்மானமானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றும் எனவும் நாராயண சாமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் புதைகுழி தோண்டும் பணி தொடர்கிறது-

mannarமன்னார் மனித புதைகுழி இன்று மீண்டும் தோண்டப்படுகின்றது. 31வது தடவையாகவும் இந்த புதைகுழி இன்று தோண்டப்படுகின்றது. இதுவரையில் இப் புதைகுழி 30 தடவைகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் 79 மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேவாலய விடுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு-

dead.bodyஅம்பாறையின், அக்கரைப்பற்று ஆரோக்கியமாதா தேவாலய விடுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் இன்றுகாலை 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. கண்ணகிபுரம் 2ம் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய மகேஸ்வரன் சேமியராஜ் என்பரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று வீட்டில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து தேவாலய விடுதிக்குச் சென்ற நபர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று பொலிஸார் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜிவ் கொலையுடன் தொடர்புடையவர்களை விடுவிப்பதற்கு எதிரான மனு விசாரணை-

Indiaராஜிவ் காந்தி கொலை வழக்கின், 4 குற்றவாளிகளை விடுவிப்பதை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது எதிர்வரும் 27ல் இந்த மனுமீதான விசாரணை இடம்பெறுமென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரொபட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழக அரசின் இம்முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜிவ் கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

பேஸ்புக் தொடர்பில் 250 முறைப்பாடுகள்-

face bookசமூக இணையத்தளமான பேஸ்புக் தொடர்பில் இதுவரையில் 30 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. அவமானப்படுத்தப்பட்டமை தொடர்பிலேயே அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணணிப் பிரிவு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் தொடர்பில் 250 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணணி அவசர அழைப்புப் பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்தரகுப்த தெரிவிக்கின்றார். பேஸ்புக் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் காணப்படும் பட்சத்தில் 0112 691 692 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.