இருபத்திரண்டு மாவட்டங்களில் வெற்றி உறுதி-மைத்திரிபால சிறிசேன-

m125 மாவட்டங்களில் 22 மாவட்டங்களின் வெற்றி உறுதி என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்து கொண்டிருந்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றி பெறப்போவது ஆய்வறிக்கைகளில் இருந்து தெளிவாகின்றது. எங்களுக்கு தற்போது கிடைத்துள்ள உண்மையான தகவல்களின்படி, 25 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் பொது வேட்பாளரின் அன்னப்பறவை சின்னம் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் தோல்வியை எதிர்நோக்கியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்வுகளில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

அதிவேக வீதியில் விபத்தில் எட்டுப்பேர் காயம்-

தெற்கு அதிவேக வீதியின் கெலனிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து கெலனிகம நோக்கி பயணித்த வேன் ஒன்று பின்னால் வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வேனில் பயணித்த எட்டுப் பேர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.  சம்பவத்துடன் தொடர்புடைய கார் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மைத்திரியின் மேடை மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பில் இருவர் கைது-

கொழும்பு வெல்லம்பிடிய – உமகிலிய விளையாட்டரங்களில் அமைக்கப்பட்டிருந்த எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் மேடை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிரிஹான தேர்தல் விஷேட பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது, நேற்று இரவு இவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. அத்தோடு, இரு டிபென்டர் வாகனங்களில் வந்த குழுவினரே துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இ.தொ.காவின் இரு முக்கிய பிரமுகர்கள் மைத்திரிபாலவுக்கு ஆதரவு-

Cwc1_CIஇலங்கை தொழிலாளர் கங்கிரசின் முக்கிய பிரமுகர்கள் இருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். அக் கட்சியின் உபதலைவர் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினரான உதயகுமார் மற்றும் நுவரெலிய பிரதேசசபை உறுப்பினர் நாகராஜன் ஆகிய இருவருமே இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்துள்ளனர். இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளனர். மேலும் தற்போது எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இருவரும் கலந்துகொண்டு உரையாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்திவெளியில் மைத்திரியின் அலுவலகம் மீது தாக்குதல்-

office attack_மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் அமைக்கப்பட்டிருந்த  எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அலுவலகம் எரியூட்டப்பட்டுள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 20ற்கும்  மேற்பட்டோரைக் கொண்ட ஆயுதம் தாங்கிய  கும்பல் இந்த அலுவலகத்துக்கு இன்றுஅதிகாலை வந்ததாகவும் அவர்கள்  அலுவலகத்துக்கு  பெற்றோல் குண்டு வீசியதுடன் அங்கிருந்தவற்றை அடித்து உடைத்ததாகவும் அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இந்தச் சம்பவத்தின்போது, அலுவலகத்திலிருந்த 11 பேரும் தப்பியோடியிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூகங்களை அரவணைக்கும் ஜனாதிபதி வேண்டும்-மன்னார் ஆயர்-

நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்;களை சேர்த்து அரவணைத்துக்கொண்டு செல்லக்கூடிய ஜனாதிபதி நாட்டுக்குத் தேவையெனவும், போர் முடிவுற்றும் மக்களுக்கு சுதந்திரம், சமாதானம் கிடைக்கவில்லையெனவும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை தெரிவித்துள்ளார். நத்தார்தின (கிறிஸ்து பிறப்பு) நள்ளிரவு திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தின் இன்று அதிகாலை, மன்னார் ஆயர் அருட்கலாநிதி இராயேப்பு ஜோசேப்பு தலைமையில் நடைபெற்றது. நள்ளிரவுத் திருப்பலியை தொடர்ந்து ஆயர் கருத்துக் கூறுகையில், அன்பும், அமைதியும் இலங்கைக்கு மட்டுமல்ல உலகுக்கும் தேவைப்படுகின்றது என்பதை இன்றைய கிறிஸ்து பிறப்பு எமக்கு தெரிவிக்கின்றது. இலங்கையில் போர் முடிவுற்று ஐந்து ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் நாட்டுக்கும் எமது மக்களுக்கும் இன்னும் சுதந்திரம், சமாதானம் கிடைத்ததாக இல்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதொரு தலைமைத்துவம் இன்று தேவைப்படுகின்றது. இதற்காக நாம் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்றார்.

 

வெள்ளத்தால் 7 இலட்சம் பேர் பாதிப்பு-

8216FLOOD7கிழக்கு உட்பட பல மாகாணங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 4 பேர் உயிரிழந்தள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பேரும் அம்பாறை மாவட்டத்தில் ஒருவரும் என 4 பேர் மரணமடைந்துள்ள அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் ஒருவர் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இதன் காரணமாக சுமார் ஏழு இலட்சம் மக்கள் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டமே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் அரசாங்க அதிபர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். வடக்கே மன்னார் மாவட்டமும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், இதன் காரணமாக அங்கு போக்குவரத்து சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளனர். கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அதன் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவும், படுக்கை விரிப்புகளும் அரசின் நிவாரண அமைப்புகளால் அளிக்கப்பட்டுள்ளன. எனினும் இது போதுமானதாக இல்லை என்று மக்கள் கூறுகின்றனர். அடை மழை காரணமாகவும், அனுராதபுரத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வழிந்தோடும் மழை நீர் அங்கிருந்து அருவியாற்றின் ஊடாக மன்னார் மாவட்டத்தை வந்தடைவதனாலும், மன்னார் மாவட்டத்தின் பெருநிலப்பரப்பு வெள்ளக்காடாக மாறியிருக்கின்றது. அருவியாற்றின் நீர் மட்டம் உயர்ந்து, வெள்ளநீர் கரைபுரண்டோடுவதனால் மடு ரோட் பகுதியில் இருந்து முருங்கன் நகரை அண்டிய பகுதி வரை கிராமங்களும் வயல் நிலங்களும் காட்டுப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.