Header image alt text

DTயாழ். குடாநாட்டிலுள்ள பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், ஆலயங்கள், விளையாட்டுக் கழகங்கள், முன்பள்ளிகள் உட்பட 52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்கியுள்ள புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்து உதவும் வகையில் சுழற்சிமுறைக் கடன் வழங்குவதற்கும் நிதியுதவி வழங்கியுள்ளார். வட மாகாணசபையின் 2014ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியிலிருந்து தனக்கு வழங்கப்பட்ட 40 லட்சம் ரூபாவை பரவலாக குடாநாட்டிலுள்ள அரசாங்கப் பாடசாலைகள் உட்பட பொது அமைப்புக்களின் அபிவிருத்திக்காக அவர் வழங்கியுள்ளார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு ஏழு பாடசாலைகளுக்கு கட்டிடம், கணணி, வாத்தியக்கருவிகள் போன்றவற்றிற்காக 6லட்சத்து 90ஆயிரம் ரூபாவையும், நான்கு ஆலயங்களின் கட்டிடப் புனரமைப்புக்கு 4லட்சம் ரூபாவையும், 19 சனசமூக நிலையங்களுக்கு கட்டிடம், குடிநீர்த் தாங்கி, குழாய்க்கிணறு, தளபாடங்கள் போன்றவற்றிற்கு 13லட்சத்து 25ஆயிரம் ரூபாவையும், ஏழு விளையாட்டுக் கழகங்களின் உபகரணங்கள், மைதானம் திருத்தல் என்பவற்றிற்காக 4லட்சத்து 25ஆயிரம் ரூபாவையும், ஏழு கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு தளபாடம், கட்டிடம் புனரமைப்பு, நீர் இறைக்கும் இயந்திரம், குழாய்க்கிணறு அமைத்தல் ஆகியவற்றிற்காக 5லட்சத்து 50ஆயிரம் ரூபாவையும் மூன்று முன்பள்ளிகளின் அபிவிருத்திக்கு 1லட்சத்து 90ஆயிரம் ரூபாவையும் அவர் வழங்கியுள்ளார். இதேவேளை முதியோர் சங்கத்திற்கு 25ஆயிரம் ரூபாவும், சுகாதார வைத்தியப் பணிமனைக்கு 50ஆயிரம் ரூபாவையும், பிரதேச சபைக்கு 50ஆயிரம் ரூபாவையும், விவசாய சம்மேளனத்திற்கு 75ஆயிரம் ரூபாவையும், சிக்கன கூட்டுறவுச் சங்கத்திற்கு 50ஆயிரம் ரூபாவையும் வழங்கியுள்ள வட மாகாணசபை உறுப்பினர் திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் சுழற்சிமுறைக் கடன் வழங்குவதற்கு 1 லட்சம் ரூபாவையும் வழங்கியுள்ளார். இதேவேளை மாகாண சபைக்கூடான தனது சம்பளத்தையும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக அவர் தொடர்ந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருக்கோவில் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இருவர் கைது-

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரம் இடம்பெறவிருக்கும் மைதானத்தில் நேற்றிரவு சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இருவரை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆளும்கட்சி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புஸ்பகுமாரின் (இனியபாரதி) ஏற்பாட்டில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நாளை தேர்தல் பிரசாரம் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் 22, 23 வயதுகளையுடைய திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களாவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சியில் எலும்புக்கூடு மீட்பு-

யாழ். வடமராட்சி முள்ளிப் பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் எலும்புக்கூடு நேற்று மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் புல் வெட்டிக்கொண்டிருந்த இராணுவத்தினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், அவ்விடத்துக்கு பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலனுடன் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். தேங்காய் மட்டைகளுக்குள் வைத்து எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இந்த எலும்புக்கூடானது, கடந்த சில நாட்களுக்கு முன்னரே எரியூட்டப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர். எலும்புக்கூட்டுடன் பெண்கள் அணியும் ஆடைகளின் பாகங்களும் மீட்கப்பட்டன. நீதவானின் உத்தரவுக்கமைய பரிசோதனைக்காக எலும்புக்கூடு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பில விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டயகமவில் வீடமைப்புத் திட்டப் பணிகள்; ஆரம்பம்-

டயகம பிரதேசத்தில் அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. மலையகத்தில் 50,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தின் ஊடாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அத்தோடு டயகம வெளர்லி தோட்டப்பகுதியில் வீடுகள் அற்றநிலையில் உள்ளவர்களுக்காக 75 வீடுகள் அமைக்கப்படவுள்ளதோடு மொத்தம் இப்பிரதேசத்தில் 100 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

மீனவர்கள் தொடர்பில் இலங்கை இந்தியா இடைபே பேச்சு-

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான அனைத்துகட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ராஜ்யசபாவில் அறிக்கை ஒன்றை முன்வைத்து இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் இலங்கை அதிகரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இலங்கை – இந்திய கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை காண்பது குறித்து இந்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

m1நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளியேன் என பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனமான 100 நாட்களில் புதிய நாடு, கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் இன்றுபகல் வெளியிட்டு வைக்கப்பட்டது. விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும்போது விஹாரமஹாதேவி பூங்காவில் மின்தடையும் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன,

தன்னிச்சையான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு பதிலாக நாடாளுமன்றம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட நிறைவேற்று அதிகாரத்துடன் கூடிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும். அதில் ஜனாதிபதியும் நாட்டின் ஏனைய பிரஜைகளை போல் சட்டத்திற்கு முன் சாதாரண பிரஜையாக கருதப்படும். புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் படி சட்டரீதியான விசேட சிறப்புரிமைகள் ஜனாதிபதிக்கு கிடைக்காது. சகல திருத்தங்களிலும் நாட்டின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, இறையாண்மை என்பன பாதுகாக்கப்படும். இவற்று பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டு அமைச்சரவை மற்றும் அதன் துறைகள் தீர்மானிக்கப்படும். அமைச்சுக்களின் செயற்பாடுகளுக்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு முறை வலுப்படுத்தப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இதனை தவிர மக்கள் பிரதிநிதிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறி கோவை சட்டமாக்கப்படும். தற்போதைய மக்கள் பிரதிநிதிகள் மேற்கொண்டு வரும் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக நிறுத்தும் நோக்கத்தில் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்படும். மக்களை துன்பத்திற்கு உள்ளாக்குவதுஇ அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதுஇ இலஞ்சம் பெறுவது, பாலியல் துஷ்பிரயோகம், கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடக்காத சமூகத்தை உருவாக்க இது உதவும். Read more

sangariநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கை சரித்திரத்தில் நடைபெறும் மிக இக்கட்டான தேர்தலாகையால் தமிழ் மக்கள் தமதுதெரிவில் மிககவனத்துடன் செயற்படவேண்டும். கடந்த தேர்தல்களில் குறிப்பாக இரண்டு ஜனாதிபதித் தேர்தலில் நடந்தவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும் போதுதமிழ் தேசிய கூட்டமைப்பு இத் தேர்தலில் தலையிடாது ஒதுங்கி இருந்துகொண்டுதமிழ் மக்களைஅவர்களின் இஸ்டப்படி செயற்பட்டு யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க அவர்களை விட்டுவிடவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர்விடுதலைக் கூட்டணி வலியுறுத்துகிறது.

 கடந்த இரு ஜனாதிபதி தேர்தல்களில் நடந்த தவறுகளின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கும் தகுதியைகூட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இழந்துவிட்டனர். இதன் காரணமாகவோ என்னவோ அவர்கள் இப்போது மாகாணசபை, பிரதேச சபை உறுப்பினர்களுடன் பேசுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இரண்டொருநபரே இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும் ஏனையவர்கள் வெறும் ஆமாம் போடுபவர்களே என்பதையும் அனைவரும் அறிவர். Read more

28ஆம் திகதி வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினம்-

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக எதிர்வரும் 28ஆம் திகதியை பிகரடனப்படுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 வாக்குச் சீட்டுகளை எதிர்வரும் 20ஆம் திகதி தபாலில் சேர்க்கவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாச தெரிவிக்கின்றார் மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் ஊடாக வாக்களார் அட்டைகள் தபாலில் சேர்க்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் பின்னர் தபால் திணைக்களத்தினால் 25 மாவட்டங்களிலும் எதிர்வரும் 28ஆம் திகதி வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. வாக்காளர் அட்டை விநியோகம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக இந்த திகதியின் பின்னர் தபால் திணைக்களத்தினால் வீடுவீடாக வாக்காளர் அட்டை விநியோகம் முன்னெடுக்கப்படமாட்டாது என்றும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆளும்கட்சி கூட்டத்தில் குழப்பம் விளைவிப்பு, ஐவர் காயம்-

இரத்னபுரி எஹலியகொட பகுதி ஹோட்டல் ஒன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரின் கூட்டம் ஒன்றில் நுழைந்த ஐ.தே.கட்சியின் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் சிறிபால கிரிஎல மற்றும் அவரது ஆதரவாளர்கள் குழப்பம் விளைவித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது. இதன்போது இரு குழுக்களுக்கு இடையிலும் ஏற்பட்ட மோதலால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட, சிறிபால கிரிஎல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பெண்களும் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கெபே அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த கூட்டத்தில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய உதவியாளர்களுடன் அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குறித்த கூட்டம் தேர்தல் சட்டங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் செயலகத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

தேசிய தொழிற்சங்க ஒன்றியம் மைத்திரிக்கு ஆதரவு, நிட்டம்புவவில் கிளைமோர் மீட்பு-

ஜனாதிபதித் தேர்தலில் 50ற்கும் மேற்பட்ட தேசிய தொழிற்சங்கங்களின் ஒன்றியம், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க இணக்கம் தெரிவித்துள்ளன. மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு வழங்குவதுடன், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றியத்தின் இணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை கம்பஹா மாவட்டம் நிட்டம்புவ பிரதேசத்திலிருந்து இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நிட்டம்புவ பிரNதேச சுடுகாடு ஒன்றிலிருந்து 10 கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன. பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் குறிப்பிட்ட பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

காணாமற்போனோர் தொடர்பில் வவுனியாவில் சாட்சிப் பதிவுகள் நிறைவு-

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வவுனியா மாவட்டத்திற்கான பகிரங்க சாட்சிப் பதிவுகள் நேற்றுடன் நிறைவடைந்தன. கடந்த 14ஆம் திகதி முதல் செட்டிக்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலகப் பிரிவுகளில் நான்கு நாட்களாக சாட்சி விசாரணைகள் இடம்பெற்றன. ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக நேற்று 60 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும், 33 பேர் மாத்திரமே சமூகமளித்திருந்ததாகவும், அவர்களிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்று புதிதாக 118 பேரின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார். இதன் பிரகாரம் கடந்த நான்கு நாட்களாக வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகளில் மொத்தம் 169 பேரிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அத்துடன் புதிதாக 331 பேரிடமிருந்து ஆணைக்குழு முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளது.

மகேஷ் மடவல மைத்திரிபாலவுக்கு ஆதரவு-

அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் அக்மீமன தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி மகேஷ் மடவல எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இன்றையதினம் ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேNவுளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளையதினம் வெளியிடப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 100 நாட்களுக்கான வேலைத்திட்டம், குறித்த விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி தொடர்பில் மைத்திரிபால கேள்வி-

2010ம் ஆண்டுக்குப் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச பொருட்களை வீணடித்து சர்வாதிகார ஊழல் மிக்க ஆட்சியை ஆரம்பித்ததாக எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியால் நாட்டில் நல்லாட்சி நடப்பதாக கூறுகின்றார்கள், ஆனால் தேர்தல்கள் ஆணையாளரின் உத்தரவின்றி வீதிகளில் கட்டவுட்களை வைப்பது நல்லாட்சியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று எல்பிடியவில் இடம்பெற்ற மக்கள் பேரணியின்போதே மைத்திரிபால இதனைக் கூறியுள்ளார். சிறுவர் குற்றங்கள், பெண்கள் துஷ்பிரயோகம், தாக்குதல்கள், நாளுக்கு நாள் நடக்கின்றன. இவை நல்லாட்சி, ஜனநாயகமா என அவர் கேள்வி எழுப்பியதுடன், நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் தொடர்பில் ஜனவரி மாத ஆரம்பத்தில் விவாதிக்க வருமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மீரியபெத்த மக்களின் குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு-

பதுளை கொஸ்லாந்த மீரியபெத்தையில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட 75 குடியிருப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் இன்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் அங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இவ் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை – பூனாகலை – மல்லவவத்த பகுதியிலேயே இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் செயலகத்துக்கு முன்பாக எதிரணியினர் ஆர்ப்பாட்டம்-

தேர்தல் சட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என்றும் தேர்தல் சட்டங்களை முறையாக முன்னெடுக்குமாறு வலியுறுத்தியும் எதிரணியினர், தேர்தல்கள் செயலகத்துக்கு முன்பாக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ராஜகிரிய பகுதியில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டிருந்தன. ஐக்கிய தேசியக்கட்சி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜனநாயக கட்சி உள்ளிட்ட சிவில் அமைப்புகள் இணைந்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களில் ஒரு இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லையென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்க விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இருவர் காயம்-

கிளிநொச்சி, கரடிப்போக்கு ரயில் கடவையில் கெப் வாகனமொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்றுமாலை இடம்பெற்றதாக கிளிநொச்சி ரயில் நிலைய பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். ரயில் கடவையில் பாதுகாப்பு மணி ஒலிக்கச் செய்யப்பட்ட போதிலும், கெப் வாகனம் ரயில் கடவையைத் தாண்டி பயணிக்க முற்பட்டபோது ரயில் எஞ்சினுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் கெப் வாகனத்தில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், கரடிப்போக்கு ரயில் கடவை பாதுகாப்பற்ற முறையில் காணப்படுவதாகவும், அந்த இடத்தில் ரயில் விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான காணி மீள் ஒப்படைப்பு-

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த திருகோணமலை, கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான காணி வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் இன்று மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டிலிருந்து இந்த காணி இராணுவத்தின் தேவை கருதி நிர்வகிக்கப்பட்டு வந்ததாக இராணுவ ஊடகப் பணிப்பாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான சுமார் 80 பேர்ச் காணி இராணுவத்தின் 22 ஆவது படையணியால் நிர்வகிக்கப்பட்டு வந்ததாகவும் ஊடகப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த காணியை மீள ஒப்படைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றிருந்தது.

மைத்திரிபால வகித்த பதவி திஸ்ஸ அத்தநாயக்க பொறுப்பேற்பு-

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று சுகாதார அமைச்சராக பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளார். இன்றுகாலை சுகாதார அமைச்சில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் திஸ்ஸ அத்தநாயக்க கடந்த 8ம் திகதி இணைந்துகொண்டார். முன்னதாக சுகாதார அமைச்சர் பதவியை வகித்து வந்த மைத்திரிபால சிறிசேன தேர்தலில் எதிரணி பொது வேட்பாளராக களமிறங்கியதை அடுத்து அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மண்சரிவு ஏற்படலாம் என சந்தேகிக்கப்படும் 3500 இடங்கள்-

நாட்டில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என சந்தேகிக்கப்படும் 3500 இடங்கள் வரை பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இந்த இடங்கள் பற்றி மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண் சரிவுகள் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதோடு, நுவரெலியா, கேகாலை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் இவ்வாறான இடங்கள் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அணைத்து இடங்கள் தொடர்பிலும் பரிசோதனை செய்ய தேவையான ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆர்.எம்.எஸ்.பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது பொது சொத்துகளின் பயன்பாடு அதிகரிப்பு-

tiஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொது சொத்துக்களை பயன்படுத்துகின்றமை வெகுவாக அதிகரித்துள்ளதாக இலங்கை ட்ரான்ஸ்பேரன்ஸி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நிறுவனங்களில் கடமையாற்றும் உயர்நிலை அதிகாரிகள் இந்நடவடிக்கைகளுக்காக தமது நேரடி பங்களிப்பை வழங்குவதாக இலங்கை ட்ரான்ஸ்பேரன்ஸி நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் சட்டத்தரணி எஸ்.ரணுன்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேர்தல்கள் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளர்இ இவ்வாறான செயற்பாடுகளினால் அரச நிறுவனங்களுக்கு பாரியளவு நஸ்டம் ஏற்படுகின்றது. இதனை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை அரச சொத்துக்கள் மற்றும் அரச அதிகாரிகளை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் 76 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்திற்கு பதிவாகியுள்ளன. அரச அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் 29 முறைப்பாடுகளும், பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் தொடர்பில் 32 முறைப்பாடுகளும் இதில் அடங்குவதாக தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்கும் பிரிவு அறிவித்துள்ளது.

வடபகுதி மக்கள் மகிந்த ஆட்சியில் அதிகாரப்பகிர்வை எதிர்பார்க்க முடியாது-ராஜித-

xமகிந்த ஆட்சியில் இருக்கும்வரை வடபகுதி மக்கள் அதிகாரப்பகிர்வை எதிர்பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனரட்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு ஒருபோதும் எதையும் வழங்க விரும்பவில்லை தரகுப்பணத்தை பெறவே வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இவ் அபிவிருத்தி மூலம் மக்களுக்கு நன்மை கிட்டவில்லை, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை, அத்துடன் அரசியல் சீர்திருத்தம், நிறைவேற்று அதிகாரமுறை ஒழிப்பு, தமிழ்மக்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு உட்பட பல விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் பலதடவை கேட்டும் அவர் அவற்றை நிறைவேற்றவில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவை எவற்றிற்கும் தயாராக இல்லை என தெரிந்தபின்பு தான் அரசிலிருந்து வெளியேறினேன் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவில் காணாமற்போனோர் தொடர்பான சாட்சிப் பதிவுகள்-

anaiகாணாமல் போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தமது சாட்சி பதிவுகளை வவுனியாவில் மேற்கொண்டு வருகின்றது. இதன்படி, நேற்று மூன்றாம் நாளாகவும் வவுனியாவில் சாட்சி பதிவுகள் இடம்பெற்றன. நேற்றை மூன்றாம் நாள் நிறைவில் வவுனியா மாவட்டத்தில் இருந்து 219 புதிய முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வவுனியா பிரதேச செலயகத்தில் நேற்றுக்காலை 9 மணிக்கு ஆரம்பமான ஆணைக்குழு விசாரணைகளுக்கு 61 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை மூன்றாம் நாளாக வவுனியாவில் இடம்பெற்றுவரும் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நேற்றுவரையில் 135பேர் சாட்சியமளித்துள்ளதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணம் கண்டிக்கிடையில் விசேட ரயில் சேவை-

vadakkukkaana thapaal railயாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையில் விசேட ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வார இறுதி நாட்களில் இந்த விசேட ரயில் சேவை நடத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய சனிக்கிழமைகளில் அதிகாலை 3.55க்கு கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் புறப்படவுள்ளது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கண்டியை நோக்கி புறப்படவுள்ளதாகவும் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

புங்குடுதீவு ஒன்றியம் வழங்கிய பொருட்கள், புங்குடுதீவு வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.

pungpung1சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றியத்தின் ஆலோசனை சபை உறுப்பினர்களுள் ஒருவரான திரு.கைலாசநாதன் (குழந்தை) அவர்கள், விடுத்த வேண்டுகோளுக்கமைய பேர்ன் நகரிலுள்ள சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினால் திரு. கைலாசநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்ட வைத்தியசாலை தேவைக்கான ஒரு தொகை பொருட்கள், புங்குடுதீவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு தற்போது புங்குடுதீவு வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. வைத்தியர்கள் பயன்படுத்தும் உடைகள், சத்திர சிகிச்சைக்குப் பயன்படும் உடைகள், மற்றும் நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய உடைகள் (சிறுதொகை) என்பனவே சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக சபையின் ஊடாக புங்குடுதீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு தேவையான ஒரு தொகை பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு, மேலதிகமாக இருந்த வைத்தியர்கள், பணியாளர்கள் பயன்படுத்தும் உடைகள், சத்திர சிகிச்சைக்குப் பயன்படும் உடைகள் என்பன வேலணை சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக, யாழ். வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐ.தே.கட்சி கூட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது தாக்குதல்-

1அநுராதபுரம் கல்நேவ பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்று நிறைவுபெற்றதன் பின்னர் அங்கு வந்த சிலர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர். நேற்றிரவு 8.45அளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். இதனால் நான்கு மோட்டார் சைக்கிள்களுக்கும் ட்ரக் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்துவதற்காக வந்தவர்கள் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஏழு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

எதிரணி பொது வேட்பாளருக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை சேதம்-

காலி – வதுரப பகுதியில் இன்றுமாலை 4மணிக்கு இடம்பெறவிருந்த, எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பேரணிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை சிலரால் சேதமாக்கப்பட்டுள்ளது. இரண்டு டிபேன்டர்களில் வந்த குழுவினரே இன்று அதிகாலை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இவர்கள் அலங்காரங்களுக்கு தீ வைத்தமையால் வாகனம் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை கல்நெவ – கலங்குடிய மவாத்தகம பிரசேத்தில் ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சில மோட்டார் சைக்கிள்களுக்கு இதன்போது சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் புத்தளம், மதுரங்குளி நகரிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அலுவலகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் உருவப் படங்கள் இரண்டிற்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது என பொலீஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மீரியபெத்த பிரதேசம் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்-

பதுளை, கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவுப் பிரதேசம் பாதுகாப்பு வலயமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இம்மண் சரிவுப் பிரதேசத்தில் மரக்கன்றுகளை நாட்டுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் இப்பகுதியில் மண்சரிவில் இறந்தவர்களுக்கான நினைவுத் தூபியொன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது. கடந்த அக்டோபர் 29ல் இடம்பெற்ற மண்சரிவில் 37 பேர் பலியானதுடன் 13 பேரின் சடலங்கள் மட்டுமே தோண்டி எடுக்கப்பட்டன. இறந்தவர்களின் உறவினர்களினது வேண்டுகோளுக்கிணங்க சடலங்கள் தோண்டி எடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது. மேற்படி மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் மேற்கொள்ளப்படுமென்றும் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண கீர்த்தி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நோர்வே விஜேந்திரனின் கவிதை நூல் மற்றும் இறுவெட்டு வவுனியாவில் வெளியீடு-

வுனியா தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் கடந்த 14.12.2014 ஞாயிற்றுக்கிழமை அன்றுகாலை 9மணியளவில் ஆதி விநாயகர் பாலாம்பிகை கலாசார மண்டபத்தில் நோர்வே விஜேந்திரனின் கவிதை நூல் மற்றும் இறுவெட்டு வவுனியாவில் வெளியீட்டு நிகழ்வு தமிழருவி சிவகுமார் ஆசிரியர் தலைமையில் ஆரம்பமானது. தமிழருவி சிவகுமார் ஆசிரியர் “நாவலர்” பட்டம் பெற்ற பின்னரான முதலாவது நிகழ்வு இதுவாகும். வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனும் தற்போது நோர்வேயில் வசிப்பவருமான விஜேந்திரனின் கவிதை நூல் மற்றும் இறுவெட்டு வெளியீடு வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வவுனியா தமிழ் சங்கத் தலைவரும் முன்னாள் வவுனியா நகர பிதாவுமான திரு எஸ்.என்.ஜி.நாதன், புளொட் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியாவின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), துணுக்காய் உதவி பிரதேச செயலர் குணபாலன், சட்டத்தரணி தயாபரன், லயன் பாலேந்திரன், கிளிநொச்சி பண்டிதர் பரந்தாமன் கவின் கலைக்கல்லூரி இயக்குனர், செந்தணல் வெளியீட்டக நிர்வாகிகள், சமய ஆர்வலர் தேவராஜா, வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சின் இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன் சமூக ஆர்வலர் செந்தில், ஊடகவியலாளர் சந்திரபத்மன் பாபு, வெகுஜென அமைப்பாளர் பிரதீபன் என பல சமூக ஆர்வலர்கள், நலன்விரும்பிகள் என பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vavuniya 1vavuniya 2vavuniya 3vavuniya4vavuniya 5

 

1இனப்பிரச்சினைக்கும் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வை முன்வைக்கக்கூடிய வேட்பாளருக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும். இவ்விடயம் தொடர்பில் கூட்டமைப்பானது ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் நாடு திரும்பும்வரை இதற்காக காத்திருக்கின்றோம் என புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் தமது பரப்புரைகளின்போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான கருத்துக்களை கூறவில்லை. மாறாக, எதிர்மறையான கருத்துக்களையே தெரவித்து வருகின்றனர். சிங்கள பெரும்பான்மையின மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே இவ்வாறு எதிர்மறையான கருத்துக்களை இருபெரும் வேட்பாளர்களும் தெரிவித்து வருவதாகவே தெரிகின்றது. இவ்வாறான கருத்துக்களைக் கேட்டு சிங்கள மக்கள் வாக்குகளை வழங்குகின்றபோது இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு சிங்கள பெரும்பான்மையின மக்கள் ஆதரவு வழங்காத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். எதிர்மறையான கருத்துக்களை கேட்கும் சிங்கள மக்கள் தீர்வுக்கு இணங்கமாட்டார்கள். கடந்தகாலங்களில் இத்தகைய அனுபவங்களை நாம் பெற்றுள்ளோம். இந்த நிலையில் தீர்க்கமாக ஆராய்ந்தே தமிழ் தேசியக்கூட்டமைப்பு முடிவு எடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கும், அவர்களது நடைமுறைப் பிரச்சினைகளுக்கும் ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கக் கூடியவருக்கே கூட்டமைப்பு ஆதரவை வழங்க முடியும். திட்டமிட்ட குடியேற்றங்களை தடுக்கும் வகையிலும், மீள் குடியேற்றத்தினை மேற்கொள்ளும் வகையிலும், செயற்படக் கூடியவருக்கே ஆதரவு அளிக்க முடியும். இத்தகைய பிரச்சினைக்கான தீர்வினை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பவருக்கே ஆதரவு வழங்கும் சூழல் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்கள் நாடு திரும்பியதும் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் ஒன்றுக்கு கூட்டமைப்பு வரும் என்று தெரிவித்தார்.

newsயாழ். மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஆரம்பமானது. இன்று இடம்பெற்ற மேற்படி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின்போது பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன், இதன்போது ஏற்பட்ட கலவரத்தினால் சிலர் காயமடைந்ததுடன், கூட்டமும் பின்போடப்பட்டது..

மேற்படி அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் முதலில் உரையாற்றிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள், தேர்தல் காலத்திலே நடைபெறுகின்ற இவ்வாறான கூட்டங்களிலே அரசியல் ரீதியாக அதாவது, ஒரு கட்சியை விமர்சித்தோ அல்லது ஒரு கட்சிக்கு சார்பாகவோ பேச வேண்டாமென்று தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கின்றார் என்று கூறினார். பின்பு உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள், இப்போது இருக்கின்ற கட்டுப்பாடுகள் காரணமாக நான் அதிகம் பேசவில்லை. மிகச் சுருக்கமாக இதைச் சொல்லிவிட்டு எனது பேச்சை நிறுத்துகின்றேன். அதாவது, மாகாண சபையை கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கைகள் உள்ளன. அவை தளர்த்தப்பட வேண்டும். அரசியல் மாற்றங்கள் வருமா இல்லையா என்பது பற்றி தெரியவில்லை அதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றுகூறி தனதுரையை நிறைவு செய்தார். 

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மாகாண சபை தெரிவு செய்யப்பட்டதையும், கூட்டமைப்பு மக்களை உசுப்பேற்றியே தேர்தலில் பெரும்பான்மையாக வென்றது என்றும் தெரிவித்ததுடன், கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை என்றும், ஒதுக்கப்பட்ட நிதிகள் முழுவதையும் செலவுசெய்யாது பெருமளவு நிதி திரும்பிச் செல்கின்ற ஒரு நிலைமை இருக்கிறது என்றும் கூறினார். அத்தோடு நீங்கள் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) மாகாண சபையை நேர்மையாக நடத்துறதுக்காக கொண்டுவரவில்லை. அதைக் குழப்புவதற்காகத்தான் அதை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் மாகாண சபையையும் மிகவும் காட்டமாக தாக்கிப் பேசினார். 

இதன்போது பல தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் எழுந்து அதற்குப் பதிலளிக்க முற்பட்டபோது, ஒரு குழப்பகரமான நிலைமை உருவானது. அதாவது, அவர்களை பேசவிட மாட்டேன் என்று கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இப்போது பேச அனுமதி தரமுடியாது. நான் பேசியபின் நீங்கள் பேசுங்கள் என்று கூறினார். இதன்போது ஒரு குழப்பகரமான நிலைமை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நிகழ்வின் இணைத்தலைவர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் கூட்டமைப்பினரைக் கட்டுப்படுத்தினார். இருந்தபோதிலும் தொடர்ந்தும் குழப்பகரமான நிலைமையே காணப்பட்டது. வாதப்பிரதிவாதங்களும், ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டும் இருந்தார்கள்.

வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள், ஒலிவாங்கியை எடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க முற்பட்டுக் கொண்டிருந்தபோது உடனடியாக அந்த ஒலிவாங்கியை பிடுங்குவதற்காக ஈ.பி.டி.பியைச் சார்ந்தவர்கள் முயற்சித்தபோது அதில் ஏற்பட்ட கலவரம் தொடர்ந்து தண்ணீர் போத்தல்களால் எறிந்து, கைகலப்பாக மாறி, கையில் அகப்பட்டவற்றால் எறிகின்ற நிலைமைகள் உருவானபோது சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன. இதில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்கள் சர்வேஸ்வரன், விந்தன் கனகரட்ணம், சிவயோகன் ஆகியோர்க்கு காயமேற்பட்டதாக வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் கூறியிருக்கின்றார்.

அதேவேளை தமது தரப்பில் ஐவருக்குக் காயமேற்பட்டதாக ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூறியிருக்கின்றார். இதன்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் ராஜ்குமார், வடமராட்சி இணைப்பாளரும், பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான சிறிரங்கேஸ்வரன் உள்ளிட்ட ஐவரே ஈபிடிபி தரப்பில் காயமடைந்ததக கூறப்படுகிறது. இந்த கலவரத்தைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த அங்கத்தவர்கள் கூட்டத்தைவிட்டு வெளியேற கூட்டம் பின்போடப்பட்டது.

jaffna0jaffna1jaffna3jaffna4jaffna5

பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் 80 மாணவர்கள் உள்ளிட்ட 100 பேர் பலி-

defaultபாகிஸ்தான் இராணுவ பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 80 மாணவர்கள் உள்ளடங்குவதாக சந்தேகிக்கப்படுகிறது. பெஷாவரில் இராணுவப் பாடசாலையில் மாணவர்களை சிறைப்பிடித்து தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இராணுவ உடையுடன் நுழைந்த தெஹ்ரி-இ-தலிபான் இயக்கத்தினர் தாக்குதலை நடத்தியுள்ளனர். சீருடை அணிந்த 6 அல்லது 7 தீவிரவாதிகள் பாடசாலைக்குள் நுழைந்ததாகவும் உள்ளே துப்பாக்கிச்சூட்டு சத்தம் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு வசிரிஸ்தான் மற்றும் கய்பர் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிட்னி சம்பவம் தொடர்பில் விசேட காவல்துறை விசாரணை-

aus-hotel-03அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் பொது மக்களை பணய கைதியாக வைத்திருந்த சம்பவம் தொடர்பில் விசேட காவல்துறையின் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. நேற்று காலை முதல் 16 மணி நேரம் பொதுமக்களை பணய கைதியாக வைத்திருந்த ஈரானிய தீவிரவாதி குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சிட்னி நகரத்தில் இடம்பெற்ற சம்பவம் பயங்கரவாதம் தொடர்பில் அவுஸ்ரேலியாவுக்கு பாடம் கற்றுக்கொடுத்துள்ளதாக ஆஸி பிரதமர் டோனி அபோர்ட் தெரிவித்துள்ளார். 16 மணி நேரத்திற்கும் அதிகமாக பணய கைதியாக வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை அந்நாட்டு பாதுகாப்பு துறையினர் அதிரடி தாக்குதல் மேற்கொண்டு மீட்டனர். இதன்போது ஈரானிய அகதியான ஹெரோன் மொனிஸ் என்ற தீவிரவாதி கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் பலியாகினர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர் டோனி அபோர்ட், இதனை வார்த்தையில் வர்ணிக்க முடியாது என்றார். சம்பவத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிவ் சவுத்வேல்ஸில் தேசியகொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருவர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியதிகாரத்தின் கீழுள்ள இரண்டு பிரதேச சபைகளில் அங்கம் வகிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் மேலும் இருவர், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி பாலசிறிசேனவுக்கு ஆதரவளிக்கபோவதாக அறிவித்துள்ளனர். அத்தனகல பிரதேச சபையின் உறுப்பினர் இந்திக்க ராஜபக்ஷ மற்றும் மீரிகம பிரதேச சபையின் உறுப்பினர் சோமரத்ன ஜெயநீத்தி ஆகியோரே இவ்வாறு அறிவித்துள்ளனர்.

அரசுடனான முஸ்லிம் காங்கிரசின் பேச்சு இணக்கமின்றி நிறைவு-

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது ஆளுங் கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுப்பட்டு வருகின்றது. இதன்பொருட்டு நேற்று சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இன்றும் சந்திப்பு இடம்பெற்றபோதிலும் அது இணக்கமின்றி நிறைவுக்கு வந்ததாக முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார்.

தபால்மூல வாக்குகளை 30ஆம் திகதியும் அளிக்க முடியும்-

எதிர்வரும் 23, 24ஆம் திகதிகள் தபால்மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்காக வேறொரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. அவ்வாறான வேட்பாளர்கள் எதிர்வரும் 30ஆம் திகதி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வாக்களிக்க முடியுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ சுட்டிக்காட்டியுள்ளார். அன்றைய தினம் வாக்களிக்கத் தவறும் பட்சத்தில் வேறொரு தினம் வழங்கப்படாதென அவர் கூறியுள்ளார்.

unnamedunnamed1வவுனியா மதீனாநகரில் இன்றுகாலை (16.12.2014) மக்கள் சந்திப்பு ஒன்று அக்கிராம சங்கத் தலைவரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புளொட்டின் மத்தியகுழு உறுப்பினர்களான முன்னாள் வவுனியா நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினரான திரு. சு.ஜெகதீஸ்வரன் (சிவம்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் தனதுரையில், இப்பகுதி மக்களின் குறைகளை நான் நன்கறிவேன் இங்குள்ள மக்கள் இன மதங்களுக்கு அப்பால் சகோதரர்களாக வாழ்ந்து வருவதை நீண்ட காலமாக அவதானித்துள்ளேன் இம் மக்களுக்கு சேவை செய்வது எனது கடமையாகும். இம் மக்களுக்கு எனது வட மாகாண சபை உறுப்பினர்களுக்கான 2015ஆம் ஆண்டு நிதியில் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கான நிதியினை மிகவும் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களுக்கு வழங்குவேன் எனத் தெரிவித்தார் தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் மக்களின் குடும்ப நிலையினை தனித்தனியே கேட்டறிந்தார்