Header image alt text

கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

kandaiya school 26.06.2015 (1)முன்னைநாள் யாழ். மாநகர முதல்வர் எஸ்.எஸ்.நவரட்னம் அவர்களின் ஞாபகார்த்தமாக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (26.06.2015) பிற்பகல் 1மணியளவில் யாழ். கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலை மண்டபத்தில் நடைபெற்றது. முன்னைநாள் யாழ். மாநகர முதல்வர் எஸ்.எஸ் நவரட்னம் அவர்களது ஞாபகார்த்தமாக வெளிநாட்டில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினர் நிதியுதவி வழங்கி வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் சப்பாத்துக்கள் என்பவற்றை வருடாவருடம் வழங்கி வருகின்றனர். இந்தவகையில் பன்னிரண்டாவது தடவையாக நேற்றையதினம் மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நவரட்னம் அவர்களது குடும்பத்தினர் சார்பாக திரு. இ.சுத்தானந்தன் (சிறி) அவர்கள் இதற்கான முழு ஒழுங்கினையும் செய்திருந்தார்.

கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையின் அதிபர் திரு. சி.சிவராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திருமதி. பேரின்பநாதன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம், கல்வி வலயம்), திரு. சா.தேவமனோகரன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், திட்டமிடல், வலிகாமம், கல்வி வலயம்), திருமதி அன்ரீன் வலன்ரீனா (கிராம சேவையாளர், கந்தரோடைப் பிரிவு), உபஅதிபர் திருமதி. த.நடேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வின்போது வறுமைக்கோட்டின்கீழ் உள்ள 100ற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும், சப்பாத்து தேவையுடைய பிள்ளைகளுக்கான சப்பாத்துக்களும் வழங்கிவைக்கப்பட்டன. 

Read more

தேர்தல் 2014ம் ஆண்டு வாக்காளர் பெயர்பட்டியலின் கீழ் நடைபெறும்-

mahindaஎதிர்வரும் பொதுத் தேர்தல் 2014ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலின் அடிப்படையில் நடைபெறவுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை வினவி, சகல பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த கட்சிகள் தனித்தோ, அல்லது கூட்டாகவோ தேர்தலில் போட்டியிடும் முறை குறித்து தேர்தல் திணைக்களத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று ஆணையாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஜூலை 3 முதல் ஜூலை 14 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான மாற்றப்பட்ட கால அட்டவணை வெளியீடு-

examகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையில் பரீட்சைகள் திணைக்களம் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 4ஆம் திகதி ஆரம்பமாகி 13ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. இதனிடையே பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளதால், மீண்டும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி மீள ஆரம்பமாகி செப்டம்பர் 8 ஆம் திகதி நிறைவடையவுள்ளன. இதேவேளை, 5 ஆம் தரத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிட்டவாறு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இதேவேளை நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம்திகதி நடைபெறவுள்ளதால், உயர்தரப் பரீட்சையை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.