மணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்விளான் கிராமத்தில் இருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல முற்பட்ட வேளையில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகி உள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இன்று நண்பகல் வேளையில் குறித்த பாலி ஆற்றில் மணல் ஏற்றுவதற்காக சென்ற நபர் சுமார் 2 மணி அளவில் ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு உழவு இயந்திரத்தை ஆற்றில் இருந்து மேலே செலுத்த முற்பட்ட வேளையில் உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் குறித்த உழவு இயந்திரத்தை செலுத்திச் சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே உழவு இயந்திரத்தில் சிக்குண்டு பலியாகியுள்ளார்.

குறித்த விபத்தில் பலியாகியவர் மூன்றாம் திட்டம், கல்விளான், துணுக்காய் எனும் முகவரியை கொண்ட தம்பிமுத்து சுரேஷ்குமார் என்ற 3 பிள்ளைகளின் தந்தையாவார்.

சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்ற மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.