மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் “உலக அறிக்கை 2022” ஆனது நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையின் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தேவையற்ற எதிர்மறையான படத்தை சித்தரிப்பதாக இலங்கை சாடியுள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட சர்வதேச சமூகத்துடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டைக் கொண்ட கொள்கையை இலங்கை பின்பற்றுவதாகவும் வெளிவிவகார அமைச்சு, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், சவாலான உலகளாவிய பொருளாதார மற்றும் சமூக சூழலில் பரபரப்பான மற்றும் பக்கச்சார்பான அறிக்கையிடல் உள்நாட்டு முரண்பாட்டைத் தூண்டும் மற்றும் மோசமாக்கும் அபாயம் உள்ளது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பொறுப்பான, சமநிலையான மற்றும் பாரபட்சமற்ற அறிக்கையிடலின் முக்கியத்துவத்தை நாங்கள் முன்னிலைப்படுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறையின் மூலம் நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எமது சொந்த அரசியலமைப்பு மற்றும் எமது சர்வதேச கடமைகளுக்கு இணங்க மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் இலங்கை தனது நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தின் 9 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பிக்கும் போது ஜனாதிபதியினால் அண்மையில் இந்தச் செய்தி மீண்டும் வலியுறுத்தப்பட்டது என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.