கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிதக்கின்றன.

 இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும்  ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இராஜாங்க அமைச்சர்களான ஜயந்த சமரவீர மற்றும் திலும் அமுனுகம மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோருக்கு, நேற்றும் நேற்று முன்தினமும் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

இதேவேளை, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் நாலக பண்டார கொட்டகொட ஆகியோர் கடந்த 22ஆம் திகதி தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கடந்த 24ஆம் திகதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தன 23ஆம் திகதியும் தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

அவர்களைத் தவிர, பொது பாதுகாப்பு அமைச்சரும் கட்சியின் உறுப்பினருமான ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகரவுக்கும் கடந்தவாரம் தொற்று கண்டறியப்பட்டிருந்தது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சியின் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பிக்கு கடந்தவாரம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.