இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2022) வெள்ளிக்கிழமை காலை 07.00 மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி இடம்பெற்றது.

வலிதெற்கு பிரதேச சபை உபதவிசாளர் இ.பரமேஸ்வரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வி.தர்மலிங்கம் அவர்களின் மகனும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், சமூக செயற்பாட்டாளர் ம.செல்வின்,

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் முக்கியஸ்தர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், கட்சியினுடைய வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று முற்பகல் 10மணியளவில் யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் அமைந்துள்ள அமரர் வி.தர்மலிங்கம் அவர்களது திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நினைவு கூரப்பட்டது.

மேலும், இன்றுமாலை கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் அமைந்துள்ள அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

23 வருடங்கள் மானிப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஸ்வநாதர் தர்மலிங்கம் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதுடன் இதேநாளிலேயே கோப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.ஆலாலசுந்தரமும் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.