திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்துடன் தொடர்புபட்ட வகையில் நடைபெறுகின்ற தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் பற்றியும், அது தொடர்பில் ஆலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், அந்தணர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆலயத்துடன் தொடர்புபட்ட உறுப்பினர்கள், ஊடகத்தினர், பொதுமக்கள் ஆகியோர்க்கான தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் இன்று (11.09.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவர் தி.துஸ்யந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகழ்வாராய்ச்சி இடத்தில் அத்துமீறி அமைக்கப்பட்டிருக்கும் கடைகள் பற்றியும், அவற்றை அகற்றி வேறு ஒரு பொருத்தமான இடத்தில் அவற்றை அமைக்க வழிசெய்தல் குறித்தும், ஆலய மணிமண்டபம், இராஜகோபுரம் ஆகியவை அமைப்பதற்கான தடைகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சார்பில் உரையாற்றிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் ஆ. சிறீஸ்கந்தராஜா(பீற்றர்), எமது கட்சி இந்நடவடிக்கைகளுக்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்குமென்று குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் எமது கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தோழர் மதியழகனும் கலந்து கொண்டிருந்தார். ஏனைய அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்கள்.