பொருளாதார மீட்சிக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் அடுத்த படிகள் தொடர்பில், அனைத்து வெளி கடனாளிகளுக்கும் செப்டெம்பர் 23ஆம் திகதியன்று, இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்கவுள்ளது.

இந்த தெளிவூட்டல் ஒன்லைன் மூலம் இடம்பெறவுள்ளதாக கடன் மறுசீரமைப்பு ஆலோசகர் நிறுவனமான கிளிஃபோர்ட் சான்ஸ், சனிக்கிழமை (17) வெளியிட்ட  அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மைய பொருளாதார முன்னேற்றங்கள், நாணய நிதிய பொதியின் நோக்கங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் அடுத்த படிகள் குறித்து கடன் வழங்குநர்களுக்கு இலங்கை நிதியமைச்சு விளக்கமளிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சுமார் 2.9 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 48 மாத ஏற்பாட்டுடன் இலங்கையின் பொருளாதார கொள்கைகளை ஆதரிப்பதற்கான பணியாளர் மட்ட உடன்பாடு, கடந்த 1ஆம் திகதி எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.