இந்தியப்பிரதமர் மோடி – தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா சந்திப்பு

jaya_modiசுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இச் சந்திப்பின்போது, தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள், நிதி ஆதாரங்கள், மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக, 96 பக்க அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தார் முதல்வர்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்றும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் கமிட்டியையும் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார்.அதே நேரத்தில், மேகேதாடு அருகே கர்நாடக அரசு, இரண்டு அணைகளைக் கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு ஏதுவாக, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகங்களின் அனுமதியை விரைந்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
நாட்டின் நீர்வளத்தை அனைத்துத் தரப்பினரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாநிலங்களுக்கிடையிலான ஆறுகளை தேசியமயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, மேற்கு மாவட்டங்களின் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்த அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கை வைத்தார்.
பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இலங்கைக் கடற்படை அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்க, 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.
 
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலாயத்தை புனரமைக்கும் முன்னதாக, தமிழக மீனவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும், இரு நாடுகளும் இணைந்து அப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவை விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திய முதலமைச்சர், தமிழக மின் திட்டங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மத்திய வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்குக் கிடைக்கும் பங்கில் தமிழகத்தின் பங்கு மிகக்கடுமையாக்க் குறைக்கப்பட்டிருப்பதாக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறப்பான நிதி மேலாண்மைத் திட்டத்துக்காக தமிழகம் தனிமைப்படுத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள முதல்வர், அதை ஈடுகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், 13-வது நிதிக் குழு அளித்த பரிந்துரையின்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.