Header image alt text

விஜித்த ஹேரத் கைதாகி பிணையில் விடுவிப்பு-

vijitha herathமக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் பயணித்த வாகனம் நேற்று இரவு இராஜகிரிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனம் தொலைபேசிக் கம்பம் ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவம் தொடர்பில் வெலிகடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விஜித்த ஹேரத், பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், வாகனம் மோதியதால் தொலைபேசிக் கம்பத்துக்கு ஏற்பட்ட சேதத்தை தானே சரிசெய்வதாக விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புகையிரதக்கடவை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு-

railwayபாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலையிலிருந்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் நாடுமுழுவதிலும் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பணிபுரியும் 2000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை கடக்கும்போது வாகன சாரதிகள் பாதுகாப்பான முறையில் கடக்குமாறு எச்சரிக்கை விடுத்தே குறித்த ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெடிமருந்துடன் பெண் உட்படநால்வர் கைது-

arrest (9)தடை செய்யப்பட்ட ரி.என்.ரி ரக வெடிமருந்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். நீர்வேலி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நால்வரை கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று நபர்கள், கல் உடைப்பதற்காக 2 கிலோகிராம் எடையுடைய ரிஎன்ரி ரக வெடிமருந்தைக் கொண்டு சென்றபோது, அவர்களை கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன்போது, அவர்களுக்கு வெடிமருந்தை விற்பனை செய்த பெண் தொடர்பில் தெரியவந்துள்ளது. அதனையடுத்து, 41 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 13 கிலோகிராம் ரிஎன்ரி ரக வெடிமருந்து மீட்கப்பட்டது. கல் உடைப்பதற்காக இந்த வெடிமருந்தை விற்பனை செய்துவந்ததாக கைதுசெய்யப்பட்ட பெண் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸ் செய்திகளை ஊடகங்களுக்கு வழங்க விஷேட சபை-

policeபொலிஸ் திணைக்களத்தின் அனைத்து செய்திகளும் இனி ஊடகப்பணிப்பாளர் சபையின் மூலமே ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமென பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த ஜயகொடி, அஜித் ரோஹன மற்றும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர் புதிய ஊடகப்பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் செய்திகள் மிகச் சரியாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுவதற்காக குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த சபை உத்தியோகபூர்வமாக அமைக்கப்பட்டதன் பின்னர் மேற்குறிப்பிட்டுள்ள அதிகாரிகளிடம் செய்திகளை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறியுள்ளார்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா நிதியுதவி-

canadaஇலங்கையின் இயற்கை அனர்த்த நிவாரணங்களுக்காக கனேடிய அரசாங்கம் 35 மில்லியன் இலங்கை ஷரூபாய்களை வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரம் இதனை தெரிவித்துள்ளது. இந்த நிதியானது, கனேடிய மனிதாபிமான உதவு நிதியமான சீ.எச்.ஏ.எஃப், அவசர அனர்த்த உதவிநிதியம் மற்றும் குளோபல் எப்ஃபெயர்ஸ் கனடா ஆகிய நிறுவனங்களின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 62 ஆயிரம் பேர் பயன்பெறுவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சர்வதேச புகைத்தல், மது எதிர்ப்பு தின கண்டனப் பேரணி-

arpattamசர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புளியந்தீவு சமுர்த்தி வங்கி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுர சந்தியில் கண்டன பேரணியொன்று இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு பிரதேச செயலாளர் தவராஜவுக்கு புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு கொடியினை வழங்கி ஆரம்பித்த பேரணி காந்தி பூங்கா வரைக்கும் சென்றது. இந்த பேரணியில் புகைத்தல் மற்றும் மது போன்ற வற்றால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு கண்டன பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டனர். இந்த நிகழ்வுக்கு முகாமைத்துவ உதவியாளர் கிரிதரன் நிர்மலா, மகா சங்க முகாமையாளர் வாமதேவன் கலைச் செல்வி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர் தவராஜா மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வெள்ளத்தினால் பாதிப்படைந்த வீடுகள் தொடர்பில் கணக்கெடுப்பு-

dsssdவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பிலான கணக்கெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய வீடு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் செயலாளர் லக்விஜய சாகர பலான்சூரிய தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்தில் இருந்து ஒன்றிணைந்த வீடுகள் அபிவிருத்தி தொடர்பிலான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தை மீளமைப்பது குறித்து கலந்துரையாடல்-

europeanஇலங்கையின் அபிவிருத்தி தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தை மீளமைப்பது குறித்து, அரசாங்கத்துடன் நெருக்கமான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கை ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் செயற்குழு கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. இலங்கை அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்திக்கு உதவுவதற்கு அப்பால், இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகளை நடைமுறைப்படுத்தல், நீதியையும் பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்தல் என்ற அம்சங்களில் புதிய மீளமைப்பு திட்டத்தின்படி ஐரோப்பிய ஒன்றியம், இலங்கைக்கு உதவி செய்யவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய வலயப் பிரதானியால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாண சபையின் அனைவருக்கும் அழைப்பாணை-

courtsவட மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை, அந்த மாகாணத்தின் ஆளுனர் மற்றும் மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதி ஆதித்ய காந்த மத்துமபடபெதிகேவினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்க மற்றும் வடமத்திய மாகாண சபையின் கேள்விப் பத்திர நடைமுறையை மீறி, அரச நிர்மாண ஒப்பந்தங்களை, அரசியல் நண்பர்களுக்கு பெற்றுக்கொடுத்ததன் மூலம், முதலமைச்சரும் அவர் சார்ந்தவர்களும், அரச நிதியினை மோசடி செய்துள்ளனர் எனக் கூறி, மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதிவாதிகளின் மோசடி நடவடிக்கைகளை நிறுத்துமாறு மத்திய அரசாங்கத்தால் சுற்றறிக்கைகள் சில வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. எனினும், சட்டத்தை கவனத்தில் கொள்ளாது அவர்கள் செயற்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கனரக வாகன விபத்தில் ஒருவர் பலி-

accidentகிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்தியில் இன்றுகாலை ஏற்பட்ட வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதநகர் பகுதியை சேர்ந்த, 2 பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகர் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கனரக வாகனம், கரடிபோக்கு பகுதியில் அமைந்துள்ள விகாரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டபோது, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள், கனரக வாகனத்தின் பின்பக்கமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த நபரை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளை செலுத்தியவர், அலைபேசியில் உரையாடியவாறு பயணித்ததாகவும், கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனத்தில் மோதியதாகவும் நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கே.பிக்கு எதிரான மனு ஜுலை 25 இல் விசாரணைக்கு வருகின்றது-

KPகே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஒரு கட்டளையைப் பிறப்பிக்கக் கோரி, ஜே.வி.பியினால் தாக்கல் செய்யப்பட்ட ஆணைகோரும் மனுவை ஜுலை 25 இல் விசாரணைக்கு எடுப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று அறிவித்துள்ளது.

இந்த மனு, நீதியரசர்களான கே. மலல்கொட மற்றும் பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கைத் தொடர வேண்டுமா அல்லது கைவிட வேண்டுமா எனத் தீர்மானிக்குமாறு, மனுதாரருக்கு நீதிமன்றம் பணித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தாயகம் திரும்பினார்-

ranilதென்கொரியாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜியத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பிரதிநிதிகளும் நேற்றிரவு தாயகம் திரும்பியுள்ளனர். ஹொங்கொங் இலிருந்து புறப்பட்ட பசுபிக் விமானச்சேவைக்கு சொந்தமான 611 என்னும் விமானத்தினூடாகவே இவர்கள் நேற்றிரவு 11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். தென் கொரியாவில் நடைபெறவிருந்த 107 வது ரொட்டரி சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவதற்காகவே பிரதமர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரான பான்கி மூன் ஐ சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் தென் கொரிய பிரதமரான ஹவாங் கியோ ஹ வையும் சந்தித்துள்ளார்.

நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கைக்கு விஜயம்-

sedfaநோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொரே ஹெற்ரம், 4 பிரதிநிதிகளுடன் இலங்கைக்கான தனது 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இவர் இன்று காலை 8.47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசியலமைப்பு தொடர்பான மக்களின் யோசனைகள் பிரதமரிடம் கையளிப்பு-

ranilபுதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பது தொடர்பில், பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் அடங்கிய அறிக்கை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், நாளை செவ்வாய்க்கிழமை கையளிக்கப்படவுள்ளதாக, அவ்வறிக்கையைத் தயாரித்த குழு அறிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கான பொதுமக்களின் யோசனைகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழு, கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல், பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றிடமிருந்து யோசனைகளையும் பரிந்துரைகளையும் சேகரித்து வந்தது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்ட அறிக்கையையே, நாளைய தினத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கவுள்ளதாக அக்குழு தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூன் சந்திப்பு-

ranil moonபிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூனை தென்கொரியாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க 107 ஆவது ரொடரி சர்வதேச கழக பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்ட சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனை சந்தித்துப் பேசியுள்ளார். அத்துடன் தென்கொரிய பிரதமரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதேவேளை ரொடரி சர்வதேச கழக பிரதிநிதிகள் மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேருரை நிகழ்த்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு-

lasanthaஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு, இராணுவ புலனாய்வு முகாம்களிலுள்ள அனைத்து தகவல்களையும், ஆவணங்களையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் இராணுவ தளபதிக்கு உத்தரவிட்டுள்ளது. லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் இடம்பெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த கல்கிஸ்ஸ நீதவான் மொஹமட் சஹாப்தீன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு இதற்கு முன்னரும் நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி அத்திடிய மலகலகே ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

யாழ் சுகாதார மருத்துவ தொண்டர்கள் போராட்டம்-

2131தமக்கான நியமனத்தினை வழங்க வேண்டும், அடிப்படை உரிமைகள் பெற்றுத்தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, யாழ் சுகாதார மருத்துவ தொண்டர்கள் இன்று கவனீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வட மாகாண சுகாதார அமைச்சின் முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் சுமார் 125 பேர் கலந்துகொண்டிருந்தனர். பின்னர் அவ்விடத்துக்கு வந்த வடமாகாண சுகாதார அமைச்சரின் செயலாளர் ஆர்.ரவீந்திரன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனால் இரண்டு கிழமைக்குள் இதற்கு பதில் தரப்படும் எனவும், இதற்கான தீர்வினை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியா உமாமகேசுவரன் முன்பள்ளியின் புதுவருட நிகழ்வும், அலுமாரி அன்பளிப்பும்-(படங்கள் இணைப்பு)-

IMG_6987வவுனியா திருநாவற்குளம் உமாமகேசுவரன் முன்பள்ளி சிறார்களின் புதுவருட நிகழ்வுகள் ஆசிரியர் திருமதி மீரா குணசீலன் தலைமையில் 27.05.2016 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதிகளாக வடமாகாண சபை உறுப்பினர் திரு ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். சிறப்பு அதிதிகளாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் திரு முத்தையா கண்ணதாசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத் தலைவரும், திருநாவற்குளம் கிராம அபிவிருதிச் சங்கத்தின் பொருளாளருமான திரு சு.காண்டீபன், தமிழ் தேசிய இளைஞர் கழக பொருளாளர் திரு த.நிகேதன், உறுப்பினர் பி.கேர்சோன் ஆகியோருடன் தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய ஆசிரியை திருமதி சியாமா, முன்பள்ளி ஆசிரியர் செல்வி சபீதா தர்மலிங்கம், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். மேற்படி முன்பள்ளியின் புதுவருட நிகழ்வானது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) லண்டன் கிளை உறுப்பினர் தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் அனுசரணையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் அவரால் அன்பளிப்பு செய்யப்பட்ட அலுமாரியும் பிரதம அதிதிகளால் முன்பள்ளி ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

நோர்வே வெளிவிவகார இராஜாங்க செயலர் விஜயம்-

ewrerererssssssநோர்வேயின் வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் தனது இலங்கைக்கான விஜயத்தின் போது, வட மாகாணத்துக்கும் செல்வார் எனத் தெரியவந்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 01ம் திகதி அவர் யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளதோடு, அங்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுனர் ரெஜினோல் குரே ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

டொரே ஹேடர்ம் எதிர்வரும் 31ம் திகதி தொடக்கம் ஜூன் 2ம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ளார். அவர் அன்றைய தினம் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதோடு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட சிலரை சந்திக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் காணி தொடர்பில் பரிசீலிக்க தயார்-நீதி அமைச்சர்-

wijayadasaபுதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதில் அரசியல்தீர்வை உள்ளடக்கவும் அவ்வாறு உள்ளடக்கப்படும் அரசியல் தீர்வில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் புதிய கோணத்தில் பரிசீலிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக 6 உப குழுக்களும் ஒரு நிறைவேற்றுக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுக்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர். இந்நிலையில் அரசியல் தீர்வுத்திட்டத்தில் கூட்டமைப்பின் கருத்துக்களும் உள்வாங்கப்படும். தேவை ஏற்படின் கூட்டமைப்புடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவும் அரசாங்கம் தயாராக இருக்கின்றது எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசியலமைப்பு மற்றும் அதில் உள்ளடக்கப்படும் அரசியல்தீர்வு திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மண்சரிவு 200 பேர் இடம்பெயர்வு-

landslideமஸ்கெலியா – காட்மோர் கல்கந்த தோட்டப்பகுதியில் நேற்று பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 47 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலகம் குறிப்பிட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தோட்டத்தில் உள்ள வெளிகல உத்தியோகத்தரின் விடுதியிலும் ஆலயங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்றும் பாரிய மண்மேடு ஒன்று அப் பகுதியில் சரிந்து வீழ்ந்துள்ளது. குறித்த தோட்டத்திற்கு இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு காட்மோர் கல்கந்த தோட்டத்தில் மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அந்த மக்கள் காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 03 மாதங்கள் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் தமது இடங்களுக்கு திரும்பிய அவர்கள், தற்போது இவ்வாறானதொரு இன்னலுக்கு முகம்கொடுத்துள்ளனர். எனவே, இம்முறையாவது எங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஊடாக மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென குறித்த மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அம்பகமுவ பிரதேச செயலகம் மற்றும் தோட்ட நிர்வாகம் வழங்கி வருகின்றது.

வளமான எதிர்காலத்திற்கான இளைஞர் சக்தி என்ற தொனிப்பொருளில் இளைஞர் நடைபவனி-(படங்கள் இணைப்பு)-

image-98d0fe067fafb0b9510e52f0827c8b6b372338ed10cfeb55faf2f93da5135379-V2016ஆம் ஆண்டு இளைஞர் தினத்தை முன்னிட்டு வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து வளமான எதிர்காலத்திற்கான இளைஞர் சக்தி என்ற தொனிப்பொருளில் இளைஞர் நடைபவனியொன்றினை கடந்த 24.05.2016 செவ்வாய்க்கிழமை அன்று நடாத்தியது. யாழ் ஆரியகுளம் சந்தியில் ஆரம்பமாகிய நடைபவனி முனியப்பர் கோவிலை சென்றடைந்தது. யாழ். மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் பேரின்பநாயகம் சுதாகர் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விலே ஊர்வலத்தினைத் தொடர்ந்து கூட்டமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வட மாகாணசபை உறுப்பினர் பா.ஜகதீபன், வட மாகாண பணிப்பாளர் சரத் சந்திரசிறி, இளைஞர் சேவை உத்தியோகத்தர்களான யுகராஜ், வினோதினி ஸ்ரீமேனன், மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

Read more

யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளனமும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கமும் கந்தரோடை இளைஞர் கழகமும் இணைந்து வெள்ள நிவாரண உதவி
 
helf 13வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள முரசுமோட்டை விஸ்வமடு சுதந்திரபுரம் தேவிபுரம் வல்லிபுரம் ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு 22.05.2016 ஞாயிற்றுக்கிழமை நிவாரணப்பொதிகள் மற்றும் புதிய ஆடைகள் சிறுவர்களுக்கான பால்மாக்கள் என பத்துலட்சம் ரூபாய்களுக்கு மேற் பெறுமதியான பொருட்களை யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளனமும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கமும் கந்தரோடை இளைஞர் கழகமும் இணைந்து. யாழ் குடாநாட்டு வார்த்தகர்களிடம் சேகரித்து உதவியது.

இவ் நிவாரணப் பொருட்களை அன்பளிப்பு செய்த வர்த்தகர்களுக்கு அம்மக்கள் சார்பாக நன்றிகளையும் இச் சங்கங்கள் தெரிவித்துக் கொள்கின்றன.
Read more

லண்டன் பாலேந்திரன் நிதி உதவி மூலம் விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்புக்கு அடிப்படை பொருட்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

4f8d9cca-4265-4e40-8ceb-bcd3734acfafலண்டனைச் சேர்ந்த திரு.பாலேந்திரன் அவர்களின் நிதி உதவி மூலம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்புக்கு தேவையான அடிப்படை பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த திரு.பாலேந்திரன் அவர்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பின் இல்ல பிள்ளைகளுக்கு சுமார் 32985 ரூபா பெறுமதியான 15 தலையணைகள் 15 துவாய் 15 பெற்சீட் 15 நுளம்பு வலை 30சிறிய வாளி 2பெரிய வாளி 15தலையணை உறை என்பன வழங்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரத்தினபுரம் பிரதேசத்தில் விசேட தேவைக்குரிய மாற்றுவலுவுடைய மற்றும் முற்றிலும் இயங்க முடியாத பிள்ளைகள் என ஆரம்பகட்டமாக 14 பிள்ளைகளுடன் இயங்கி வருகின்றது. இவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி இல்ல பிள்ளைகளை பாரமரிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் Read more

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவ முடிவு-

missingகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, உள்விவகார அமைச்சு கூறுகின்றது. கடந்த காலங்களில் காணாமல் போனதாக கூறப்படும் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள் என கருதப்படும் நபர்கள் பற்றிய தகவல்களை அவர்களது உறவினர்கள் பெற்றுக்கொள்வதே, இதன் நோக்கம் என, குறித்த அமைச்சு கூறியுள்ளது. இலங்கையில் 20,000க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது என, இது தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொள்ளும் அலுவலகம் கூறியுள்ளது. இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவை நிறுவுமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக தேசிய அடையாள அட்டை-

ew3rereநாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் அடையாள அட்டைகள் தொலைந்து அல்லது சேதமடைந்திருப்பின் இலவசமாக அவற்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக, உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இவற்றுக்காக செலவாகும் முழுத் தொகையையும் அமைச்சு பொறுப்பேற்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வஜிர அபேவர்த்தன இக் கருத்தை வெளியிட்டுள்ளார். இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால், சுமார் 3000 பேரை அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

ஹொரோவப்பத்தானை பொறுப்பதிகாரியின் மகள் கொலை-

murderஹொரோவப்பத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மகள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கலேன்பிதுனுவௌ – அக்கரவிஸ்ஸ பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்றுஅதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மனைவி காயமடைந்த நிலையில் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக, உயிரிழந்த பெண்ணின் கணவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும், சந்தேகநபர் அப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இவரைக் கைதுசெய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இதுபற்றிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமை பொறுப்பேற்பு-

wயாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன இன்ஞ தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்றுகாலை 10.00 மணியளவில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. அதன்பின்னர், பௌத்த, இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ மத வழிபாட்டினை தொடர்ந்து பதிவேட்டில் கையொப்பமிட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மாத்தளை பொலிஸ் பிரிவில் சிரேஸட் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய இவர் யாழிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபராக இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டார். தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், சட்டம் மற்றும் நீதிக்கு அமைவாக யாழில் நடைபெறும், குற்றச்செயல்களை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை நீதியின் வழியில் மேற்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

ஜப்பானில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு-

thumb_large_01-Welcome-by-two-Children_sஜீ7 நாடுகளின் மாநாட்டுக்காக ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. நகோயா சர்வதேச விமான நிலையத்தில் ஜப்பான் வெளிவகார அமைச்சர் மற்றும் மாவட்ட ஆளுனர் ஆகியோரடங்கிய குழுவினரால் ஜனாதிபதி வரவேற்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்வொன்றும் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் வியட்நாம் ஜனாதிபதி உள்ளிட்ட சில முக்கியஸ்தர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.

முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் படையினர் பங்கேற்பதில்லை-

aqகிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நசீர் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்விலும் கலந்து கொள்வதில்லை என்று முப்படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் முப்படையினரின் எந்தவொரு முகாமிற்கும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் கடுந்தொனியில் பேசியிருந்தார். இந்நிலையிலேயே படையினரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான அறிக்கை ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்ததாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி நேற்று கூறினார். அத்துடன் கடற்படையினால் வழங்கப்பட்ட எழுத்து மூலமான முறைப்பாட்டையும் ஜனாதிபதியிடம் கையளித்ததாக அவர் கூறினார். எவ்வாறாயினும் இந்தக் கூட்டத்தில் ஆளுநர் மற்றும் அமெரிக்கத் தூதுவர் போன்றவர்களும் அங்கு இருந்ததால் உச்சபட்ச தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக இவ்வாறான ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

500க்கும் மேற்பட்ட அகதிகளுடன் படகு கவிழ்ந்து விபத்து-

qwewஇத்தாலி நோக்கி வந்த படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 562 பேரை இத்தாலி கடற்படையினர் மீட்டனர். இதில் 7 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். அரபு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போரால் அந்த நாட்டு மக்கள் இலட்சக்கணக்கில் இடம்பெயர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இத்தாலி அருகே மத்திய தரைக்கடலில் உள்ள சிசிலி வளைகுடா பகுதியில் 550க்கும் மேற்பட்டோர் ஒரு சிறிய படகில் இத்தாலி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்த படகு திடீரென ஒரு பக்கமாக சாய்து மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. உயிர் பிழைப்பதற்காக பலர் படகில் இருந்து குதித்தனர். அப்போது அந்த வழியாக வந்த இத்தாலி கடற்படை கப்பல் அதை பார்த்து விட்டது. உடனே கப்பலில் இருந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு மிதவைகளை பயணிகளை நோக்கி வீசினார்கள். அதை பிடித்துக்கொண்டு பலர் மிதந்தனர். கப்பலில் இருந்த மீட்பு படகுகளையும் உடனடியாக கீழே இறக்கி அங்கு சென்றனர். அதன்மூலம் அவர்களை ஒவ்வொருவராக மீட்டு கப்பலில் ஏற்றினார்கள். 562 பேர் மீட்கப்பட்டனர். 7 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். பலரை காணவில்லை. மிகச் சிறிய படகில் 500க்கும் மேற்பட்டவர்கள் பயணித்ததால் அதை தாங்க முடியாமல் படகு கவிழ்ந்தது தெரியவந்தது. படகில் வந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.

ஜெயலலிதா, கருணாநிதி எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்பு-

456565666தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகிய நிலையில், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இன்றுகாலை 11மணியளவில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் துவங்கிய நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா, தற்காலிக சபாநாயகர் செம்மலை முன்பாக பேரவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். மேலும், திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக்கொண்டனர். இதேவேளை தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 3ஆம் திதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்வு நடைபெறவுள்ளது. 6வது முறையாக நேற்று முன்தினம் (23.05.2016) ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்றிருந்தார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றிருந்தனர். பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக குழு, பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.