Header image alt text

அமரர் விக்டர் அலோசியஸ் மரியதாஸ் அவர்களின் இறுதி நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)

IMG_4192கடந்த 25.06.2016 அன்று பூநகரியில் இடம்பெற்ற விபத்தில் அகால மரணமான அமரர் விக்டர் அலோசியஸ் மரியதாஸ் அவர்களின் இறுதிக் கிரியைகள் நேற்று 29.06.2016 யாழ். கந்தரோடை சுன்னாகத்தில் இடம்பெற்றது. அன்னாரின் பூதவுடல் புனித அந்தோனியார் வீதி, கந்தரோடை சுன்னாகம் என்ற முகவரியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. நேற்று அன்னாரின் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகளும், அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன. தொடர்ந்து முற்பகல் 11 மணியளவில் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டு விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன. அங்கிருந்து கொட்டியாவத்தை சேமக்காலைப் பகுதிக்கு 12.30அளவில் அன்னாரின் பூதவுடல் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டபோது அங்கு பொலிஸாரின் மரியாதைகள் மற்றும் அணிவகுப்புகள் இடம்பெற்றன. தொடர்ந்து Read more

கறுப்பு ஜுலையில் வீரமக்கள் தின அழைப்பு-

veeramதமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய கழகக் கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களை நெஞ்சில் நிறுத்தி கறுப்பு ஜூலையில் 27ம் வீரமக்கள் தினம் நடைபெறவுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) மற்றும் ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியக் கிளையினரால் லண்டன் ஈஸ்ட்காம் நகர மண்டபத்தில் இந்த நினைவஞ்சலி நிகழ்வினை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. Read more

யாழ் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு சார்புறுப்புக்கள அன்பளிப்பு (படங்கள் இணைப்பு)

jaipur00திருமதி. நாகரஞ்சினி ஜங்கரன் அவர்களின் ஏற்பாட்டில் யாழ் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு அன்பளிப்பாக அனுப்பிவைக்கப்பட்ட ஒரு தொகுதி சார்புறுப்புக்கள் மற்றும் உபகரணங்களை கௌரவ பா.ம.உறுப்பினரும் த.ம.வி.கழகத் தலைவருமான திரு.த. சித்தார்த்தன் அவர்கள் நேரில் சென்று கையளித்தார்.

அதற்கு நன்றி தெரிவித்து நிறுவனத்தின் முகாமைத்துவ  குழுவின் சார்பாக நன்றிக் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டதுடன் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர். அது தொடர்பான மேலதிக விபரங்களை கீழ் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில் பார்க்கவும். Read more

சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினத்தையொட்டி பேரணிகள்-

qwewசர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினத்தையொட்டி இன்று நாடளாவிய ரீதியில் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி இன்றுகாலை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பகுதியில் இடம்பெற்றது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்த இப்பேரணி ஆணைக்குழுவின் மாவட்ட இணைப்பாளர் ஏ சீ ஏ அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது. கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திற்கு முன்னால் ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி வழியாக வந்து கல்லடி பாலத்தின் அருகில் நிறைவடைந்தது. இதேவேளை ´சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி´ எனும் தொனிப்பொருளிலான பேரணி இன்று யாழ். நகரில் முன்னெடுக்கப்பட்டது. இப்பேரணி கன்னியம்மடம் வீதி வழியாக வேம்படி சந்தி ஊடாக யாழ். மணிக்கூடு வீதியை வந்தடைந்தது. அங்கிருந்து, யாழ்.பொலிஸ் நிலையத்தினை கடந்து, யாழ். ஆஸ்பத்திரிவீதி வழியாக காங்கேசன்துறை வீதியை சென்றடைந்து அங்கிருந்து, முற்றவெளியில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் சித்திரவதையினை ஓழிப்போம் என்ற வாசகங்கள் பொறித்த சுலோகங்களை தாங்கியவாறு மதத்தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பொலிஸார், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றிருந்தனர்.

தலைக்கவசமின்றி சென்ற இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு-

accident (12)மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு – கொழும்பு பிராதான வீதியில் ஜயந்தியாய எனும் இடத்தில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று இளைஞர்கள் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஜயந்தியாய ஜும்மா பள்ளிவாயலுக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இவ் விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் இரண்டு பேர் பாடசாலை மாணவர்களாவர். ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி பயிலும் கரீம் கஸ்மீர் (வயது15), ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் தரம் 11ல் கல்வி பயிலும் சனூஸ் இம்தாத் (வயது16), நிஸ்தார் இஸ்பாக் (வயது19) என்ற மூன்று பேர் மரணமடைந்துள்ளதுடன், புஹாரி சியாம் (வயது26) என்பவர் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும் தலைக்கவசம் அணியாமையும் அதிக வேகமுமே இம் மரணத்திற்கான காரணம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

நாமல் ராஜபக்சமீது வழக்குத் தாக்கல், ஜோன்ஸ்டனுக்கு பிணை-

namal (2)இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அவமதித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக அந்த ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விசாரணை ஒன்றிக்கு வாக்குமூலம் பெறுவதற்காக வருகை தருமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்த போதிலும் அவர் அதனை புறக்கணித்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சதொச ஊழியர்களை அரசியல் வேலைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சதொசவின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்ணாந்தோ மற்றும் செயற்பாட்டு பணிப்பாளர் மொஹமட் சாபிரு ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 05 வழக்குகளில் ஒரு வழக்கிற்காக, 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 50 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் அவர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மல்லாவியிலும் மாணவிமீது துஷ்பிரயோகம்-

abuse (5)முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்று வருகின்ற மாணவியை, அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததாக குறித்த மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி மாணவியை அச்சுறுத்தி கடந்த 04 மாதங்களாக ஆசிரியர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ளார். இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (26) மாணவிக்கு துன்புறுத்தல் கொடுத்த நிலையில், மாணவி எழுத்து மூலம் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஊடாக அதிபரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதிபர் இந்த விடயத்தை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்ததையடுத்து, வலயக் கல்விப் பணிமனையால் புதன்கிழமை (29) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆசிரியரை பாடசாலை வளாகத்தில் இயங்குகின்ற கோட்டக்கல்வி அலுவலகத்தில் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் யாழ்ப்பாணத்தின் இரண்டு பாடசாலைகளில் மாணவிகள், அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களால் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த நிலையில், தற்போது, முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

முறிகண்டி விபத்தில் 4 பேர் காயம்-

accidentமுறிகண்டி பகுதியில் இடம்பெற்ற இரு வேறு வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த ஒருவரும் லொறி சாரதியும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த விபத்து இடம்பெற்ற இடத்தை துப்பரவு செய்து கொண்டிருந்த நபர்மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியுள்ளது. விபத்தில் துப்பரவு நடவடிக்கையில் ஈடுபட்ட நபரும் மோட்டார் சைக்கிள் சாரதியும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

23 உள்ளூராட்சி மன்றங்களின் காலவரையறை நிறைவு-

sri lanka23 உள்ளூரராட்சி மன்றங்களின் கால வரையறை இன்றுடன் நிறைவடைகின்றது. கடந்த காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் காலம் நீடிக்கப்பட்டிருந்ததாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்றுடன் உள்ளுராட்சி மன்றங்களின் காலம் நிறைவடைகின்றது. இதேவேளை இன்று முதல் நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதாக கமல் பத்மசிறி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்-

dsfdfபிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். சிறிகொத்தவில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், கட்சியின் உறுப்புரிமையை அவர் பெற்றுக் கொண்டுள்ளார். சரத் பொன்சேகாவுடன், அவரது ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளனர். இதேவேளை இந்நிகழ்வின்போது இனிமேல் எனது அரசியல் தலைவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என்று அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தான் இனிமேல் ஜனநாயக கட்சியின் தலைவர் அல்ல என்றும், எனினும் அந்தக் கட்சி கலைக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார். Read more

அமரர் விக்டர் அலோசியஸ் மரியதாஸ் அவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றிய அறிவித்தல்-

alsiusநேற்றையதினம் (25.06.2016) சனிக்கிழமை பூநகரியில் இடம்பெற்ற விபத்தில் அகால மரணமான புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்களின் பித்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை மற்றும் வவுனியாவை வாழ்விடங்களாகவும் கொண்ட அமரர் விக்டர் அலோசியஸ் மரியதாஸ் அவர்களின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் (29.06.2016) புதன்கிழமை யாழ். கந்தரோடை சுன்னாகத்தில் இடம்பெறவுள்ளது.

அன்னாரின் பூதவுடல் இல:40, புனித அந்தோனியார் வீதி, கந்தரோடை சுன்னாகம் என்ற முகவரியில் அமைந்துள்ள இல்லத்தில் இன்றுமாலை முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இறுதிக் கிரியைகள் எதிர்வரும் (29.06.2016) புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் சுன்னாகம் கொட்டியாவத்தை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
தொடர்புகட்கு: 0776107801, 0774185169

பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கும் வகையில் விசாரணை பொறிமுறை அமையவேண்டும்-ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்-

al hussainயுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது பல அறிக்கைகளில் புதிய ஆதராங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான பக்கசார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது வாய்மூல அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். பலாத்கார கைதுகள் சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், இராணுவ கண்காணிப்பு போன்றன தொடர்பில் தொடரும் குற்றச்சாட்டுகள் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும். நீதி விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணயாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு தொடர்பில் மிக முக்கியமான கேள்வி இன்னும் நிலுவையில் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

சுழிபுரம் நாவலர் முன்பள்ளியின் 2016 ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டு விழா-

werer (2)யாழ். சுழிபுரம் நாவலர் முன்பள்ளியின் 2016 ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டு விழா 26.06.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு தலைவர் தா.நாகநாதன் அவர்களது தலைமையில் ஆரம்பமானது. இவ் விழாவுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் பா.கஐதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்,

சிறப்பு விருந்தினர்களாக திரு த.உலகநாதன் அவர்களுடன் திரு அ.நித்தியானந்தமனுநீதி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள், கௌரவ விருந்தினர்களாக செல்வி நா.நிரஞ்சனா (வலி-மேற்கு முன்பள்ளி இணைப்பாளர்) அவர்களுடன், செல்வி து.அனுஷா (வலி_மேற்கு முன்பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவி) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் சனசமூக நிலைய செயலாளர் அ.கௌதமன் அவர்கள் உள்ளிட்ட நிர்வாகத்தினரும் பங்கேற்றிருந்தனர்.

Read more

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உலர் உணவு பொருட்கள் வழங்கபட்டன-

j2வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் புதுக்காட்டு குடியிருப்பு மாவடியம்மன் வட்டக்கட்சி கிளிநொச்சியை சேர்ந்த 16 குடும்பங்களுக்கு 32096 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் வழங்கபட்டுள்ளன. மேற்படி மக்களால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு அமைவாக எமது புலம்பெயர் உறவான அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திரு. ஜெகன் அவர்களால் தனது தாயாரின் 31ம் நாள் நினைவு தினத்தையோட்டி இக் கிராமத்தில் உள்ள 16 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தனூடாக வழங்கிவைத்துள்ளார். இம்மக்கள் தமது குடியிருப்பு பகுதியில் கிணறு மற்றும் மலசலகூட வசதிகள் கூட இல்லை. தாம் தமது காலை கடன்களை காட்டுப்பகுதியிலேயே செய்து வருகின்றோம். இங்கு உள்ளவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்யும் கூலிதொழிலாளர்கள். நாங்கள் தற்காலிக குடிசைகளிலேயே எமது வாழ்கையை ஓட்டிவருகின்றோம். Read more

வெடிபொருட்கள் அகற்றப்படாமையால் மீள்குடியேற முடியாத நிலை-

mineகிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை பகுதியில் வெடிபொருட்கள் முழுமையாக அகற்றப்படாமையினால் 257 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினாலேயே இவர்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வெடிபொருள் ஆபத்தான பகுதியாக காணப்படும் குறித்த பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு அதிகமாக வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் வெடிபொருள் அகற்றும் பணிகள் நிறைவு பெறாமையினாலும் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினாலும், இத்தாவில், முகமாலை, வடக்கு மற்றும் மேற்கு, வேம்பொடுகேணி ஆகிய பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு விண்ணப்பித்துள்ள 257 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மீள்குடியேற்றத்திற்காக விண்ணப்பித்துள்ள 257 குடும்பங்கள் வெளிமாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இராணுவ உயரதிகாரிகளை பிரதிவாதிகளாக பெயரிட எதிர்ப்பு-

prageeth ekneligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கில், இராணுவத் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை, நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடக் கோரி, அவரது மனைவியால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, இராணுவத் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஆகியோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியே இவ்வாறு எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். விடயங்களை ஆராய்ந்த நீதவான் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதன்படி குறித்த விசாரணையை ஒக்டோபர் 12ம் திகதி மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 293 இலங்கையர்கள் தடுப்பு-

jailகுடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 293 இலங்கையர்கள் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா வீசாவினூடாக சென்று வெளிநாடுகளில் தொழில் புரிந்தமை மற்றும் அங்கு சென்றதன் பின்னர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின்கீழ் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சுற்றுலா வீசாவில் எவரும் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என அமைச்சர் தலதா அத்துகோரள கூறியுள்ளார். இவ்வாறான செயல்கள் பாரிய அளவில் குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறும் செயற்பாடு எனவும் அவர் கூறியுள்ளார். போலி வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களூடாக சட்டங்கள் மீறப்பட்டு சுற்றுலா வீசாவை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும், இதனால் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 2016 ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உபமுகவர் நிலையங்களை இரத்து செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு கோரி பேரணி-

jljவவுனியா தாண்டிக்குளத்தில் அமைக்கப்படவுள்ள வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு வலியுறுத்தி எதிர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா காமினி வித்தியாலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி மாவட்ட செயலகத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதா மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்கும் பட்சத்தில் அனைத்து பிரதேச மக்களுக்கும் நன்மை ஏற்படக்கூடும் என பேரணியில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வவுனியா மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி தொடர்பான மகஜரும் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்-

fwrewrerதமது மீள்குடியேற்றதை துரிதப்படுத்த வலியுறுத்தி, யாழ் நல்லூர் கோயில் முன்றலில் வலி வடக்கு மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். 15.06.1990ம் ஆண்டில் இருந்து இடம்பெயர்ந்துள்ள குறித்த மக்களின் இன்னல்களை நேரில் கண்டறிந்த ஐனாதிபதி, “06 மாதங்களுக்குள் உங்களை மீளக்குடியேற்றுவேன்..” என வாக்குறுதியளித்த நிலையில், அது இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 8அம்ச கோரிக்கைகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஐனநாய கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள், சிவில் சமூக அமைப்பினர் எனப் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் இது குறித்த மகஐர் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிகள் வடமாகாண ஆளுனருக்கும், மாகாண முதலமைச்சர் மற்றும் மனித உரிமைகள் காரியாலத்திலும் மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திலும் கையளிக்கப்பட்டன.

ஜனாதிபதி ஆணைக்குழு மஹிந்தானந்தவுக்கு அழைப்பு-

mahindananthaமுன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கம பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று காலை அழைக்கப்பட்டிருந்தார். எனினும் அவசர வேலைகள் நிமிர்த்தம் அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாதுள்ளதாக அவர் சட்டத்தரணி ஊடாக தெரியப்படுத்தியுள்ளார். இதன்படி, அவர் நாளை காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில், ரயில் திணைக்களத்தில் இடம்பெற்ற அரச சொத்து துஸ்பிரயோகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் பொருட்டு வாக்கு மூலம் வழங்குவதற்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

யாழில் திருமண வீட்டிற்குள் புகுந்து கொள்ளை-

robberyயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பகுதியில் திருமண வீடொன்றில் இருந்து 7 இலட்சம் ரூபா பணம் மற்றும் 35 பவுண் நகை ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள வீட்டில் கடந்த சனிக்கிழமை திருமணம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த வீடு மணப்பெண்ணுடைய வீடாகும். இந்நிலையில் அன்று இரவு வீட்டில் இருந்தவர்கள் சம்பிரதாயங்களின்படி மாப்பிள்ளை வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டில் ஒரு சிலரே தங்கியிருந்தனர். இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவ் வீட்டினுள் நூழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது வீட்டில் இருந்த 35 பவுண் நகை, 7இலட்சம் ரூபா பணம் மற்றும் திருமண வீட்டிற்கு வந்தவர்கள் மணமக்களுக்கு வழங்கிய அன்பளிப்பு பணம் என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக வீட்டில் இருந்தவர்கள் காலையே அறிந்துள்ளதுடன் வீட்டின் பின்புறமான கதவு வழியாகவே கொள்ளையர்கள் உள் நூழைந்துள்ளமையை கண்டறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

நீதிபதிகளை அவதூறு செய்யும் இணையத்தளங்கள்மீது சட்ட நடவடிக்கை-

websitesநீதிபதிகள் தொடர்பில் பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்ளும் இணையத்தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென சட்டத்தரணிகள் சங்கத்தைத் தெளிவுபடுத்தியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நீதிபதிகள் தொடர்பிலும் மிகவும் தகாத முறையில் அவர்களது கௌரவத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில இணையத்தளங்கள் செயற்பட்டு வருகின்றன. அண்மையில் திலின கமகேவுக்கு பிணை வழங்கிய நீதிபதி தொடர்பில் தகாத முறையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதில் அவர் மலேசியாவிற்கு சென்றிருந்ததாகவும் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் ஒரு முறையேனும் மலேஷியாவுக்குச் சென்றிருக்கவில்லை என்பதே உண்மையாகும். நீதிபதிகளை அச்சுறுத்தி தமக்கு சாதகமாக தீர்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முனையும் ஒரு சாரார் செயற்படுவதால் நாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கத்தை தெளிவுபடுத்தினோம். இவற்றைப் பெற்றுக்கொண்டு நாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளோம்” என்றார்.

மட்டக்களப்பு தீ விபத்தில் வாகனங்கள் எரிந்து நாசம்-

fireமட்டக்களப்பு பிள்ளையாரடியில் வாகனம் திருத்தும் நிலையம் ஒன்று, இன்று தீப்பிடித்து எரிந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று நண்பகல் 12.00 மணியளவில் அந்த இடத்தில் வைத்து வேன் ஒன்றை திருத்திக் கொண்டிருந்தபோது, அது தீப் பிடித்துள்ளது. இதனையடுத்து அங்கு திரண்ட பொதுமக்களும் அங்கு வேலை செய்தவர்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். இதனால் குறித்த வாகனம் திருத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வேன் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு வாகன இயந்திரங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. மேலும், இதனால் சுமார் 35 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில், குறித்த கடையின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சஜின்வாஸ் குணவர்தன கைதாகி பிணையில் விடுவிப்பு-

sachin vassஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்தன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். வர்த்தகர் ஒருவரின் நிதியை பலவந்தமாக தன்னகத்தே வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சஜின்வாஸ் குணவர்த்தன நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் 5ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவிட்டுள்ளார். நிதி மோசடி சட்டத்தின் கீழ், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தனியார் நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரை அச்சுறுத்தி 60 கோடி ரூபாய் பணத்தை காசோலை மூலம், சஜின்வாஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறினர். எனினும் பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த குற்றச்சாட்டை நிராகரித்தார். விடயங்களை ஆராய்ந்த நீதவான் அடுத்த வழக்கு விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பணிப்பாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை பார்வையிட்ட ஜப்பானிய குழு-

fdfகிளிநொச்சி முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் சென்று ஜப்பானிய குழுவினர் பார்வையிட்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட குழுவினர், ஜப்பானிய நிதியுதவியுடன் ‘டாஸ்’ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டனர். குறித்த பகுதியில் மீட்கப்பட்ட கண்ணிவெடிகள் தொடர்பில் விளக்கமளிக்கபட்டதை அடுத்து, கண்ணிவெடி அகற்றம் முறை தொடர்பில் குறித்த குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கண்ணி வெடி அகற்றப்படும் பகுதியை நேரில் சென்று ஜப்பானிய குழுவினர் பார்வையிட்டமை இங்கு குறிப்பிடதக்கது.

போதைப் பாவனைக்கு எதிராக மன்னாரில் ஊர்வலம்-

sdffdsfdபோதைப்பொருளற்ற சமூதாயத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் மன்னாரில் விழிப்புணர்வு பேரணி இன்றுஇடம்பெற்றுள்ளது. சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மன்னார் திருப்புமுனை மையத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது. மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை, புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மற்றும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவர்கள் ஒன்றினைந்து குறித்த விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர். மாணவர்கள் பதாதைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியவாறும் பிரதான வீதி ஊடாக, மன்னார் நகர மத்திய பகுதியில் ஒன்றுதிரண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த பேரணியில் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் செலின் சுகந்தி செபஸ்தியான், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ, மன்னார் திருப்புமுனை புதுவாழ்வு மைய இயக்குநர் அருட்தந்தை கியுபட் அடிகளார், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ. அந்தோனி மார்க் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் உண்ணாவிரதம்-

27-6-2016 13.6.45 1 (1)வவுனியாவில் அமையவுள்ள பொருளாதார மையத்திய நிலையத்தினை வட மாகாணசபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அமைக்குமாறு கோரி வவுனியா மாவட்ட உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் இன்றுகாலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனை சந்தைக்கு முன்பாக இடம்பெற்றுவரும் இந்த உண்ணாவிர போராட்டத்தில், உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர்கள், விவசாயிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி. சிவமோகன், கே. கே. மஸ்தான், வட மாகாணசபை உறுப்பினரான ஏ. ஜெயதிலக, சிறிடெலோ கட்சியின் செயலாளர் நாயகம் கா.உதயராசா உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் கலந்துகொண்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பதற்கான இடத்தினை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது.