காணாமல் போனோரின் குடும்ப ஒன்றிய ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்-

erererereவெள்ளை வான் கடத்தல்கள், முறையற்ற கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனக்கோரி அம்பாறை நகரில் இன்று கவன ஈர்ப்பு போராட்மொன்று நடைபெற்றது. காணாமல் போனவர்களின் குடும்பங்களின் ஓன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நல்லிணக்கத்தை முறியடிக்கும் வெள்ளை வான் கடத்தலை நிறுத்து என்ற பதாதைகளையும் வாசக அட்டைகளையும் ஏந்தியவாறு காணப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, காந்தி பூங்காவுக்கு முன்பாக ஆரம்பமாகி மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கிருந்து மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் மகஜர்கள் காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தால் கையளிக்கப்பட்டன. அந்த மகஜரிலே, வெள்ளை வேன் கலாசாரத்தை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மீண்டும் அந்தக் கலாசாரம் ஆரம்பமாகியுள்ளமை எம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியை தோற்கடிக்கும் நோக்கில் அல்லது அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்காக மக்களை அச்சம் கொள்ளச் செய்யும் இந்த வெள்ளை வேன் கலாசாரம், எதிர்காலத்தில் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. இச் சட்டவிரோத கடத்தல் குறித்து விசாரணை செய்து இதற்கு பொறுப்பானவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது தடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளிடையிலான அதிகாரப்பகிர்வு விவகார உபகுழுவின் தலைவராக தர்மலிங்கம் சித்தார்த்தன் நியமனம்-

D.Sithadthan M.P,.பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டதன் பின்னர் அரசியலமைப்புச் சபையின் ஆறு உபகுழுக்களுக்கான பிரதிநிதிகள் நேற்று நியமிக்கப்பட்டிருந்தனர். அப்பிரதிநிதிகளுக்கு பேரவை ஏகமனதாக அங்கிகாரமளித்துள்ளது. அரசியலமைப்புப் பேரவையின் இரண்டாவது கூட்டம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் நேற்றுக் காலை 9.30க்குக் கூடியது. பேரவையின் முதலாவது கூட்டம், மே மாதம் 2ஆம் திகதி கூடியது. அப்போது, 21 பேரடங்கிய வழிப்படுத்தல் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் கூட்டம், சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே கூடியது. மொத்தம் 66 பேரடங்கிய இந்தக் குழுக்களில் சிறுபான்மைப் பிரதிநிதிகள் 22 பேர் அங்கம் வகிக்கின்றனர். அடிப்படை உரிமை, நீதித்துறை, நிதி, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுச் சேவைகள், மத்திய மற்றும் மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையிலான அதிகாரப்பகிர்வு விவகார குழு ஆகிய ஆறு குழுக்களுக்கான பிரதிநிதிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்களை சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, பிரேரிக்க பேரவை அங்கிகாரமளித்துள்ளது. இதிலே மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையிலான அதிகாரப்பகிர்வு விவகார உபகுழுவின் தலைவராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு காலமானார்-

Manawaduதலையில் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்த மேஜர்ஜெனரல் சுமித் மானவடு இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளார். ராணுவப் படைப்பிரிவொன்றின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, நுகேகொடையிலுள்ள அவரது வீட்டின் கூரையில் இருந்த மரத்தடி ஒன்று உடைந்து அவரது தலையில் வீழ்ந்து காயம் ஏற்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது. இதற்காக அவரது தலைப்பகுதியில் இரண்டு சத்திர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும் தீவிர சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் இன்று அதிகாலை மேஜர் ஜெனரல் சுமித் மானவடு உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் அறிவித்துள்ளன. கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்த ராணுவப் பிரிவிற்குத் தலைமை தாங்கியவர் சுமித் மானவடு ஆவார். அவர் மலேஷியாவின் உதவி உயர்ஸ்தானிகராகவும் சில காலம் பணியாற்றியவர்.

புகையிரத திணைக்களம் மூலம் புதிய சேவைகள்-

trainவருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் பயணிகள் போக்குவரத்துக்கு மேலதிகமாக நிலக்கரி மற்றும் பொருட்களையும் புகையிரதத்தில் கொண்டு செல்வதற்கு புகையிர திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி புகையிரதத்தின் ஊடாக பொருட்களை கொண்டு செல்வதற்கு தற்சமயம் 10 தனியார் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது. இந்த திட்டத்தினூடாக திருகோணமலை சீன துறைமுகத்தில் இருந்து பலாவி வரை நிலக்கரி எடுத்துச் செல்வதற்கு ஒரு நிறுவனம் புகையிரத திணைக்களத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலாவது நிலக்கரி எடுத்துச் செல்லும் உத்தியோகபூர்வ நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் நாளை திருகோணமலை சீன துறைமுகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பொது வீதிச் சூழல்கள் மாசடைவதை தடுத்தல், டிப்பர் ரக வாகனங்களினால் ஏற்படும் வாகன நெரிசல்களை குறைத்தல் மற்றும் வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கும் முடியும் என்று புகையிரத திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

படகில் ஆஸி. சென்றவர்கள் விமானத்தில் திருப்பி அனுப்பிவைப்பு-

australiaசட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலிவிற்கு சென்றிருந்த 12 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு விஷேட விமானம் மூலம் அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் பெண் ஒருவரும் இரண்டு சிறுவர்களும் 9 ஆண்களும் அடங்குகின்றனர். இவர்களுள் பெண் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் கணவரும் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்கெனவே சென்று திருப்பி அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர்கள் மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்ததாக கூறப்பட்டுள்ளது. குறித்த குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர

பொலிஸ் அதிகாரிகள் 59பேருக்கு பதவி உயர்வு-

police ...உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 59பேர் பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பெண் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளன.

அதன்படி நேற்றையதினம் முதல் அமுலாகும் வகையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர மேலும் மூன்று உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதுடன், அவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.