சிவனொளிபாதமலைக்கு ஹெலிகொப்டரில் பறந்தவாறு மலர் தூவினார்- ஜனாதிபதி
சிவனொளிபாதமலையில் பொருத்தப்பட்டுள்ள காண்டாமணி மற்றும் தூண்டாவிளக்கு ஆகியன பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டன. இவற்றைத் திறந்துவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஜனாதிபதி இந்த இந்நிகழ்வில் கலந்துகொள்ளாத நிலையில், சிவனொளிபாதமலைக்கு மேலாக ஹெலிகொப்டரில் பறந்தவாறு அதிலிருந்தவாரே மலர்களைத் தூவி வணக்கம் செலுத்தினார். சிவனொளிபாதமலையில் 8,613 கிலோ நிறையுள்ள துண்டாவிளக்கும் 9,000 கிலோ நிறையுள்ள காண்டாமணியும் பொருத்தப்பட்டுள்ளன. சிவனொளிபாதமலை விகாரையின் பொறுப்பாளர் தேரர் தலகஸ்கந்தே வஜிரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராணுவ தளபதி தயா ரத்னாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இரணைமடு நீர்த்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 பொம்மைகள்
கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுசெல்லும் திட்டத்திற்;கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இவ் விநியோகத்திட்டத்திற்கு கையொப்பமிட்ட சுப்பையா மனோகரன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டப்பணிப்பாளர் எ.குருஸ், இத்திட்டத்திற்கான நீர்ப்பாசன பொறியிலாளர் எஸ்.பாரதிதாசன், நீர்வழங்கல் வாடிகாலமைப்புச் சபையின் அதிகாரி எஸ்.சிவபாதம் ஆகியோரின நான்கு உருவப்பொம்மைகள் அமைக்கப்பட்டு அதில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டு கிளிநொச்சி பரந்தன் பிரதான பேரூந்து நிலையத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு 4 பேரின் உருவப் பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தாகவும் அதனை வியாழக்கிழமை காலை அகற்றியதாகவம் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் இராஜினாமா
மேல் மாகாண சபை தேர்தலில் தனது பாரியர் பெரோஸா முஸம்மில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி சந்தர்ப்பம் வழங்காததை அடுத்தே ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலிருந்து கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் இராஜினாமா செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய நிறைவேற்றுக் குழுவிலிருந்து பெரோஸா முஸம்மில் நேற்று இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் சிபாரிசின் அடிப்படையில் கொழும்பு மேயரின் இணைப்புச் செயலாளராக செயற்பட்ட எஸ்.எம்.எம்.இஸ்மத் நேற்று முதல் மேயர் முஸம்மிலினால் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிரட்டல்கள் மத்தியில் ஒலிம்பிக் குளிர்கால போட்டிகள் -ரஷ்யாவில்
ரஷ்யாவில் வட கௌக்கசஸ் முஸ்லீம்களின் மிரட்டல்கள் மத்தியிலான பீதியில், பல ஆயிரம் பொலிஸ் படையினர், விளையாட்டு அரங்குகளைச் சுற்றிக் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ன நிலையில். ஒலிம்பிக் குளிர்கால போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் ரஷ்ய நாட்டின் சொற்சி நகரில் இன்று ஆரம்பமாகிறது. விளயாட்டு வீரர்களை அச்சுறுத்தும் வகையில் கௌக்கசஸ் புரட்சியாளர்களால் மிரட்டல்கள் விடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பல பெரும் நகரங்கள் அதியுச்சப் பாதுகாப்பு வலையங்களாகப் பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் கடும் சோதனைகள் இடம் பெறுகின்றன. ஜேர்மன் தங்கள் விளையாட்டு வீர்ர்களையும், வீராங்கனைகளையும் பாதுகாக்கும் வகையில், தம் நாட்டுக் காவற்படையினரை அனுப்பி வைத்துள்ளனர். சொற்சி நகரில் வாழும் மூன்று லட்சத்து ஜம்பதாயிரம் மக்களைப் பாதுகாக்கும் முகமாக பல கண்காணிப்பு உபகரணங்களும், தரையிலிருந்து ஏவக் கூடிய ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு நகரம் போர்க் கோலம் பூண்டுள்ளது. பற்பசைக் குழாய்களுக்குள் பயங்கர விளைவைத் தரவல்ல குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுக் கடத்தப்படலாமென அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலரான ஜோன் கெரியையும், அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான சுசான் றைசையும், ரஷ்ய உளவுத்துறையுடன் நெருங்கிய தொடர்பிலிருக்குமாறு ஜனாதிபதி பராக் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்கா தன் இரு போர்கப்பல்களை தேவையேற்படின் ரஷ்யக் காவற்படைக்கு உதவவென ரஷ்யாவை அண்மித்த கடற்பரப்பில் நிறுத்தி வைத்துள்ளது.