வடமாகாணத்தில் பொலித்தீன் பாவனைக்குத் தடை-

plasticவடமாகாணத்தில் 20 மைக்ரோனுக்கு குறைந்த பொலித்தீன் பாவனைக்குத் தடைவிதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. உலக சுற்றுச் சூழல் தினமான எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி முதல் இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். 20 மைக்ரோனுக்கு குறைந்த பொலித்தீன் பாவனையை தடைசெய்வது தொடர்பாக வட மாகாண விவசாய அமைச்சில் இன்று காலை 9.30 அளவில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. யாழ்.வணிகர் சங்கத்தினர் மத்திய சுற்றாடல் மற்றும் வடமாகணத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளுடன் மாகாண விவசாய அமைச்சர் இது தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சட்டங்களை மீறுவோரை கைதுசெய்ய நடவடிக்கை-

LK policeமேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் இறுதித் தினமான இன்று பேரணிகளை முன்னெடுக்க வேண்டாமென பொலிஸார் அறிவித்துள்ளனர். பேரணிகளில் ஈடுபடுகின்றவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பேரணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் கைப்பற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். வேட்புமனு தாக்கல்செய்த தினம் முதல், தேர்தல் முடிவடைந்து ஒருவாரம் வரை பேரணிகள், ஊர்வலங்கள் நடத்துவது தேர்தல் சட்டத்திற்கு அமைய தடை செய்யப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் நேற்று 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 06 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இரண்டு மாகாணங்களிலும் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளை தடுப்பதற்கு பொலிஸார் மட்டுமன்றி, சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

தேர்தல் முறைப்பாடுகள் 52ஆக பதிவு-

elections_secretariat_68மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய 52 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. அரச வாகனங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 6 சம்பவங்களும், அரச உத்தியோகத்தர்களை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய 3 சம்பவங்களும், இவற்றுள் அடங்குவதாக தேர்தல் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் விசேட பிரிவு கூறுகின்றது. அத்துடன், அரச உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டமை தொடர்பான 20  முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. கொழும்பு மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் செயலகம் தெரிவிக்கின்றது. களுத்துறை மாவட்டத்தில் 7 முறைப்பாடுகளும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தலா மூன்று முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் விசேட பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

80 நாடுகளுக்கு உடனடி இந்திய விசா, இலங்கைக்கு இல்லை-

indiaஇந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக விசா வழங்கும் முறையில் எளிமையான நடைமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி சீனா, பாகிஸ்தான், ஈரான், இலங்கை உள்பட 8 நாடுகளை தவிர மற்ற 180 நாடுகளைச் சேர்ந்தவர்கள் முன்கூட்டியே விசா வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  அந்தந்த நாட்டின் விமான நிலையங்களிலேயே விசாவை பெற்றுக் கொள்ளலாம என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா வரும் பின்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விமான நிலையங்களிலேயே விசா வழங்கும் வசதிகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின் தேர்தல் சட்ட மீறல்-கபே-

cafeதென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் சட்டங்களை மீறி வாகன பேரணிகள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டதாக கபே இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. களுத்துறை, மாத்தறை, காலி, கம்பஹா மாவட்டங்களில் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் இவ்வாறு வாகன பேரணிகள், ஊர்வலங்கள் சென்றதாக கபே இயக்கம் தனதறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பேருவளை, தெனியாய, அளுத்கம, அக்மீமன, வத்தளை, கடவத்த, அல்தெனிய ஆகிய பகுதிகளில் இவ்வாறு தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. இது குறித்து கபே இயக்கம் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கு ஐந்து முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக கபே இயக்க நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறியுள்ளார்.

கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூன்று பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு-

kamalendranவட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் (EPDP) கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அடுத்த வட மாகாண சபை அமர்வில் கந்தசாமி கமலேந்திரன் கலந்துகொள்வதற்கான அனுமதியையும் வழங்கினார். நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷசின் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இக் கொலை தொடர்பில் வட மாகாண சபை எதிர்கட்சி தலைவர் கமலேந்திரனை 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்ததுடன், றெக்ஷசினின் மனைவியும் மற்றுமொரு நபரும் ஊர்காவற்றுறைப் பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைகள் மீண்டும் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரனை உட்பட மூன்று பேரையும் எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்திரவிட்டுள்ளார்.

ஆதாரங்கள் அழிப்பு குறித்த ஆஸியின் குற்றச்சாட்டு நிராகரிப்பு-

fig-17யுத்தத்தின் இறுதி கட்டத்தின்போது ஒரு தடவையில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவதற்கு இருந்த ஆதாரங்களை இலங்கை ஆயுத படையினர் திட்டமிட்டு அழித்துவிட்டதாக கூறும் அண்மையில் வெளிவந்த அவுஸ்திரேலிய அறிக்கையை இலங்கை இராணுவம் நிராகரித்துள்ளது. இந்த அறிக்கை ஆதாரமற்றது என இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். நேரில் கண்ட சாட்சியத்தின் ஆவணங்களின் உண்மைத் தன்மை பற்றியும் இவ்வாறான கூட்டுப் புதைகுழி போன்ற யுத்தக் குற்ற ஆதாரங்களை இராணுவம் அகற்றியதாக கூறப்படுவது பற்றியும் அவர் தனது சந்தேகங்களை வெளியிட்டுள்ளார். மக்கள் குடியேறியுள்ள கிராமங்களிலுள்ள எலும்புக் கூட்டு எச்சங்களை தோண்டியெடுத்து அகற்ற எம்மால் முடிந்திருக்குமா என இராணுவப் பேச்சாளர் கேள்வி எழுப்பினார். வேண்டுமென்றே வைத்தியசாலைகள் மீது பீரங்கி தாக்குதல்கள், வல்லுறவு, சித்திரவதை, பாலியல் வன்முறை, சரணடைந்த தமிழ் புலி போராளிகளை கொலை செய்தமை போன்ற சாத்தியமான யுத்த குற்றங்கள் தொடர்பாக சாட்;சியங்கள் கூறியதை அவுஸ்திரேலியாவின் பொதுநல பரப்புரை மையம் என்ற தொண்டு நிறுனம் வெளியிட்ட அறிக்கையில் விபரித்திருந்தது. யுத்தக் குற்றம் நடந்ததாக கூறப்படுவதை விசாரிக்குமாறு கொழும்புக்கு புதிய அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டுவர திட்டமிட்டுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. இலங்கை இராணுவத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிறுவன ஒழுங்கமைப்பு தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பதனால் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் சிரேஷ்ட இராணுவ தளபதிகளும் இலங்கை அரசாங்க அதிகாரிகளும் குற்றவாளிகளாக காணப்படலாம் என இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான நபர் விடுதலை-

law helpபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு மே மாதம் கைதுசெய்யப்பட்ட யாழ். கைதடி தெற்கைச் சேர்ந்த கதிரவன் லோகேஸ்வரன் (37) என்பவர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரினால் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் இராணுவத்தினருக்கு எதிராகக் தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் மேற்படி நபர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஒமந்தைப்பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.  பூஸா முகாமில் வைத்து, அங்கிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் ஜனகனால் அளிக்கப்பட்ட குற்றஒப்புதல் வாக்குமூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது. வேறு சான்றுகள் இருக்கின்றனவா எனப் பார்ப்பதற்காக மேற்படி வழக்கு 2014 பெப்ரவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.  தொடர்ந்து மேற்படி வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த நபருக்கு எதிராக வேறு சான்றுகள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் குறித்த நபரை விடுதலை செய்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். குறித்த நபர் சார்பாக சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ், அரச சட்டத்தரணி நளினி கந்தசாமி ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்;.