தேர்தல் பாதுகாப்பிற்கு விசேட ஏற்பாடுகள்-

இன்று நடைபெறுகின்ற மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்பொருட்டு சுமார் 37 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். வாக்குச் சாவடிகளின் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் மேல் மற்றும் தென் மாகாணங்களில் விசேட வீதித் தடைகளும் போடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். பெண்களுக்கான வாக்ளிப்பு நிலையங்களிலும் பெண் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குச் சாவடிகளிலும், வாக்காளர்களிடம் வாக்குகளுக்காக மன்றாடுதல், வாக்காளர்களை வற்புறுத்தி வாகனங்களில் ஏற்றிச்செல்லல் என்வற்றை தடுக்க வாக்குச் சாவடிகளுக்கு அருகில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் சட்டங்களை மீறுவோர் கைது செய்யப்படுவதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான உரிய ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முறைப்பாட்டு மத்திய நிலையம் வாக்கு எண்ணும் வரை இயங்கும்-தேர்தல் ஆணையாளர்-

தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையம் தேர்தல் வாக்குகள் எண்ணி முடிவடையும்வரை இயங்கும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தின் கீழ் இந்த தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையம் இயங்குவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பு இன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் மாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளது. எனினும் தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையம் தேர்தல் வாக்குகள் எண்ணி முடிவடையும்வரை இயங்கும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

தேர்தல் முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்கள்-

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்காக தேர்தல்கள் செயலகம் விசேட தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 0112 877 631 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும். கம்பஹா மாவட்டத்தில் 0112 877 632 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக முறைப்பாடு செய்யலாம். களுத்துறை மாவட்டத்தில் 0112 877 633 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும். காலி மாவட்டத்தில் 0112 877 634;என்ற இலக்கத்தினூடாக அறிவிக்க முடியும். மாத்தறை மாவட்டத்தில் 0112 877 635 என்றஇலக்கத்திற்கும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 0112 877 636 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் முறைப்பாடு செய்ய முடியுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

தேர்தல் வன்முறை தொடர்பில் 1159 முறைப்பாடுகள் பதிவு-

மேல் மற்றும் தென்மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் இதுவரை 1159 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில்1106 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறை சம்பவம் தொடர்பில் 53 முறைப்பாடுகளும் இவ் அமைப்பிற்கு கிடைக்கப்ப பெற்றுள்ளது. மேல் மாகாணத்தில் ஆகக் கூடியதாக இது வரை 680 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் தென் மாகாணத்தில் 402 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 356 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பொலீஸ் பற்றாக்குறையே இராணுவ பிரசன்னத்துக்கு காரணம்-சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர்-

யாழ். குடாநாட்டில் உள்ள பொலிஸாரின் எண்ணிக்கை போதாமலுள்ளது. அவ்வாறே அவர்களுக்கான வாகன வசதியும் பற்றாக்குறையாகவுள்ளது. அதனாலேயே இங்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து இரவு ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர் என யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன.தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு நீதிபதிகள், அமைச்சர்கள் வருகை மற்றும் பல தேவைகள் காரணமாக பொலிஸாரைச் சகல இடங்களுக்கும் அனுப்ப வேண்டியுள்ளது. அதனாலும் பொலிஸாரின் எண்ணிக்கை இங்கு போதாமலுள்ளது. அதனாலேயே இங்கு இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுகின்றோம் என சிரேஸ்ட பொலிஸ் அத்;தியட்சகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நாவில் இந்தியா எடுத்த நிலைப்பாடு ஏமாற்றமளிக்கிறது – அமெரிக்கா-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மான வாக்களிப்பை இந்தியா தவிர்த்துக் கொண்டமை ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த இரு முறை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த இந்தியா இம்முறை தீர்மான வாக்களிப்பில் கலந்து கொள்ளாமை ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதி பேச்சாளர் மேரி ஹார்ப் தெரிவித்துள்ளார். ஐ.நாவில் இந்திய அதிகாரிகள் பேசிய விதம் தொடர்பில் பெரும் ஏமாற்றம் அடைந்து விட்டதாகவும் வாக்களித்த விதமும் திருப்தியளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை மீதான தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரவாகவும் 12 நாடுகள் எதிராகவும் 12 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜெனீவா தீர்மானம் இலங்கைக்கு எதிரானதல்ல – அமெரிக்கா-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு எதிரானதல்ல என அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்களின் நலன்களை கருத்திற் கொண்டே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐக்கியமானதும், சமாதானமானதுமான நாட்டில் கௌரவமாக அனைத்து இலங்கையர்களும் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டும். இந்த முனைப்புக்களுக்கு இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா ஆர்வம் காட்டுகின்றது என மிச்சல் ஜே. சிசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.