யாழில் வைத்தியசாலைக்கு சென்றவரை காணவில்லை-
யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கடந்த 16ஆம் திகதி சென்ற குடும்பஸ்தர், இன்னமும் வீடு திரும்பவில்லையென அவரது உறவினர்களினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி, கல்வயல் பகுதியைச் சேர்ந்த இராமலிங்கம் செல்வரத்தினம் (வயது 68) என்பவரே காணாமற்போனவராவார். குறித்த நபர் மனநோய் சிகிச்சைக்காகவே வைத்தியசாலைக்குச் சென்றிருந்ததாக உறவினர்கள் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தென்னாபிரிக்காவை தடுத்து நிறுத்துமாறு தேசப்பற்றுள்ள இயக்கம் கோரிக்கை-
இனப்பிரச்சனைக்கான பேச்சுவார்த்தையில் தென் ஆபிரிகாவின் மத்தியஸ்தை நிராகரிக்குமாறு தேசிய இயக்கம் அரசாங்கத்திடம் கோரிக்பை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு உரையாற்றிய அந்த இயக்கத்தின் பொது செயலாளர் வசந்த பண்டார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு தென் ஆபிரிக்கா மத்தியஸ்தம் வகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது. அவ்வாறான சர்வதேச மத்தியஸ்தம் ஒன்று அவசியம் இல்லை எனவும் வசந்த பண்டார கூறியுள்ளார்.
சட்டவிரோத பயணம், 25 இலங்கையர்கள் திருப்பி அனுப்பிவைப்பு-
சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியா சென்ற 25பேர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அந்தமான் தீவுகளில் தங்கியிருந்த இவர்கள் நேற்றிரவு நாட்டை வந்தடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள், பயங்கரவாத தடுப்புப்பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளதுடன், விசாரணைகளை அடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளது.
யாழ். கச்சேரியின் முன்னாள் பதிவாளரின் வங்கிக் கணக்கு முடக்கம்-
யாழ். கச்சேரியின் முன்னாள் பதிவாளராது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் மரண மற்றும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை புலி உறுப்பினர்களுக்கு வழங்கியதாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் பதிவாளர் இதற்காக பணம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சந்தேகநபரின் வங்கிக் கணக்கில் 80 லட்சம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இந்த வங்கிக் கணக்கே முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். கச்சேரியின் முன்னாள் பதிவாளரான சின்னராசா சுபாராஜா என்பவரின் வங்கிக் கணக்கே முடக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இலங்கையர்கள் லிபியா செல்வதற்குத் தடை-
லிபியாவிற்கு தொழில் நிமித்தம் இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. லிபியாவின் தற்போதைய நிலைமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பணியகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, லிபியாவிற்கு தொழில் நிமித்தம் தொழில் முகவர் நிலையங்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் செல்வதற்கு மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத குடியேறிகள் கட்டுப்பாட்டில்-
ஆட்கடத்தல் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்தியான் மூலம் இலங்கையுடனான உறவு மேலும் வலுவடைந்துள்ளதாக அவுஸ்ரேலியாவின் குடிவரவு துறை அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேரிகளின் வருகை தற்போது முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம் சட்டரீதியாக இலங்கையர்களின் அவுஸ்ரேலியா நோக்கிய குடிபெயர்வு 74 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த வருடம் அவுஸ்ரேலியாவுக்கு சட்ட ரீதியான நுழைவு அனுமதியுடன் சென்ற 4 ஆயிரத்து 987 இலங்கையர்களில் 3ஆயிரத்து 456 பேர் அவுஸ்ரேலியாவில் தங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடமையை செய்யத் தவறிய மூன்று பொலிஸார் பணிநீக்கம்-
கடமையை செய்ய தவறிய மூன்று பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் சாலியவௌ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவத்தில் கடமையை செய்யத் தவறிய குற்றச்சாட்டில் இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் சாலியவௌ – வீரபுர பகுதியில் இருப்பதாக 21ம் திகதி தகவல் கிடைத்தது. அதன்பின் குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டு அன்றைய தினம் மாலையே தப்பிச் சென்றுள்ளார். இராணுவ வீரர் தப்பிச் சென்ற சமயத்தில் கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நாளை வாக்கெடுப்பு-
இந்தியக் குடியரசின் 16ஆவது மக்களவைத் தேர்தலின் தமிழகத்துக்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது. கட்டம் கட்டமாக நடைபெற்றுவரும் வாக்கெடுப்புப் பணிகள் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகின. இதனடிப்படையில் தமிழகத்தின் 39 தொகுதிகளுக்குமாக வாக்கெடுப்புகள் நாளையதினம் 60,817 வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளன. (பாண்டிச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகள் என கூறப்படுகிறது. ஆனால், பாண்டிச்சேரி தனி இராச்சியம் என்பது குறிப்பிடத்தக்கது). இலங்கை தமிழர்களின் பிரச்சினையை மையப்படுத்திய தேர்தல் விஞ்ஞாபனங்களுடன் களமிறங்கியிருக்கும் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகமும் தமிழக தேர்தலில் அதிக ஆசனங்களைக் குவிக்குமென கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.