Header image alt text

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்-

1719856666tna3தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் தலைமையில் கொழும்பு, மாதிவெலயில் இன்றுமாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இக்கூட்டத்தில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், கருணாகரன், சுமந்திரன், சிவநேசன் பவன், ஆர். ராகவன், சர்வேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டதுடன், இந்திய தேர்தலின் பின்னர் பாரதீய ஜனதா கட்சி வெற்றிபெற்றிருக்கும் சூழ்நிலையில் இலங்கை தொடர்பான இந்திய அரசியல் நிலைப்பாடுகள் பற்றியும், இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. மற்றும் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை உள்வாங்கி அங்கு உறவுகளைப் பேணுவது குறித்தும் கூடுதல் கவனமெடுத்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையேற்றிருக்கின்ற பல பிரதேச சபைகளினுடைய நடைமுறைச் சிக்கல்கள் சம்பந்தமாகவும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது. இவற்றை சரிசெய்வதற்கு நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படல் வேண்டுமென ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்-

vada makana sabai mullivaaikal ninaivu (1) vada makana sabai mullivaaikal ninaivu (3) vada makana sabai mullivaaikal ninaivu (4)வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 9ஆவது அமர்வு கைதடியில் உள்ள சபை கட்டடத்தில் இன்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர்களால் சபையில் கறுப்புப்பட்டி அணிந்து தீபமேந்தி அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி உறுப்பினர் ரயீஸூம் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஆயினும் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா வெளிநடப்பு செய்திருந்தார். அவைத்தலைவர் இந்த செயற்பாட்டில் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் சபையின் அஞ்சலி உரையினை வடக்கு முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஜி.ரி லிங்கநாதன் உள்ளிட்ட சிலரும் உரையாற்றினர். இதன்போது இறந்தவர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்த வேண்டியது எமது பொறுப்பு என்றும் எந்த அடக்கு முறைக்குள்ளும் நாம் எமது உறவுகளை நினைவு கூருவோம் என்றும் உரையாற்றினர்.

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு கிடைக்கும்-மனித உரிமைப் பேரவை-

UNஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற யோசனைக்கு இணங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம், இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆகவே அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் செய்தி தொடர்பாளர், தெரிவிக்கையில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உட்பட இலங்கை அரச அதிகாரிகள் ஐ.நா சபை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு விடுக்கப்படும் அழைப்புக்களை தொடர்ந்து நிராகரித்தாலும், விசாரணையில் பங்கேற்பதில்லை என்ற முடிவை இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகப் பேச்சாளர் கூறியுள்ளார். ஆணையாளரின் செயற்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும் சாத்தியம் பற்றி நம்பிக்கையோடு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீன ஜனாதிபதி சந்திப்பு-

imagesஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்குடன் இரு தரப்பு உறவுகள் குறித்த இன்று உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார். ஆசியாவின் சர்வ செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான 4ஆவது மாநாடு சீனாவின் சங்காய் நகரில் இடம்பெற்று வருகின்றது. இதில் பங்கேற்க சென்றுள்ள ஜனாதிபதி, இன்றுகாலை சீனா ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார். நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஈரான் ஜனாதிபதி ஹசன் ரொஹானியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்த கலந்துரையாடியிருந்தார். அத்துடன் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி முனையும் ஜனாதிபதி சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிக்கு எதிராக ஞாயிறு ஆர்ப்பாட்டம்-

indiaஇந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள பதவிஏற்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மே 17 இயக்கமே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக சட்டசபையில் மகிந்த ராஜபக்;;ஷவை போர்க்குற்றவாளி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற நிலையில் அவரை பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பது ஏன்? என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் நலன் கருதியே ஜனாதிபதிக்கு அழைப்பு-பா.ஜ.க-

imagesஇலங்கைத் தமிழர் நலன் கருதியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார் என்று தமிழக பாரதீய ஜனதாக கட்சியின் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி, எதிர்வரும் 26ஆம் திகதி இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் பங்கேற்குமாறு இலங்கை, பாகிஸ்தான் உட்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை. இலங்கைத் தமிழர்களின் நலன் கருதியே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதேவேளை நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி புரிந்து கொள்ள வேண்டுமென தி.மு.க கூறியுள்ளது.

ஜனாதிபதி பங்கேற்பதால் தமிழக முதல்வர் புறக்கணிக்கும் நிலைமை-

tamilnaduஇந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதனால் மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கலந்துகொள்வதில் சந்தேகம் நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் புதிய பிரதமராக எதிர்வரும் 26ஆம் திகதி மாலை, நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இடம்பெற்றுள்ளார். இந்த தகவல்கள் வெளியானது முதல் தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் உருவாகி உள்ளன. இதனால் ஜனாதிபதி பங்கேற்கும் மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலிதா கலந்துகொள்வது சந்தேகமே என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நீதியான தேர்தலை நடத்த தற்போதுள்ள அதிகாரம் போதுமானது – தேர்தல் ஆணையாளர்-

mun koottiya vaakkaalar idaappuசுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள அதிகாரம் போதுமானது என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணையாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலதிக அதிகாரம் இருக்குமானால் நல்லது. எனினும் தற்போது நடைமுறையில் உள்ள அதிகாரமே போதுமானாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையுடன் இந்தியா இணைந்து செயற்பட வேண்டும்-சுப்ரமணியசுவாமி-

subramaniam swamyஇலங்கையுடன் இந்தியா இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர் சுப்ரமணியசுவாமி குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானுக்காக உளவு பார்க்கும் பொருட்டு செயற்பட்ட இலங்கையர் ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தீவிரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பாக இலங்கையுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இலங்கைக்கு தீவிரவாதத் தொடர்பில் நல்ல அனுபவம் இருக்கின்றது எனவும் சுப்பிரமணியசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் மீளிணைவு தொடர்பில் மேலும் ஒரு மூதாட்டி கைது-

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் மேலும் ஒரு மூதாட்டி யாழ்ப்பாணத்தில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். 64 வயதுடைய பத்மாவதி என்ற மூதாட்டியே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்போது அவர் பயங்கரவாதப் புலனாய்வு பிவிரினரால் வவுனியாவில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மீளிணைய முயற்சிக்கும் புலிகளின் எதிர்கால பயன்பாட்டிற்காக காணி ஒன்றை குறித்த மூதாட்டியின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாகவும் அக் காணிக்கான பணத்தை புலிகளே குறித்த மூதாட்டிக்கு வழங்கியிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்-

வங்காள விரிகுடாவில் இன்றுகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவின் ஐரோப்பிய மத்திய தரைக்கடலில் 30 கிலோமீற்றர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால், புதுடில்லி கொல்கத்தா, ராஞ்சி உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்கள் மற்றும் சென்னையிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சென்னையின் அடையாறு, திநகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சூளைமேடு, எக்மோர் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இராணுவ பேச்சாளர் உபய மெதவலவிற்கு புதிய பொறுப்பு-

வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாண (மேற்கு) வலயத்திற்குப் பொறுப்பான கட்டளையிடும் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் உபய மெதவல நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதியின் பரிந்துரையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முன்னர் இப்பதவியில் இருந்த மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா இராணுவ தலைமையக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். உபய மெதவல முன்னர் மத்திய பாதுகாப்பு படை கட்டளைத் தளபதியாக செயற்பட்டு வந்தார். அதன்படி, உபய மெவல எதிர்வரும் 26ம் திகதி பதவியேற்கவுள்ளார். உபய மெதவல இராணுவ ஊடகப் பேச்சாளராகவும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இணையதளங்கள்மீதான தடை குறித்து முறைப்பாடு-

இலங்கையில் எட்டு செய்தி இணையத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊடக அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளன. இணையத்தளங்களை தடை செய்வதன் மூலம் அரசாங்கம் அரசியல் யாப்பை மீறியுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பம்பலப்பிட்டி ஆசிரியர் மரணம்; தற்கொலை என்பது உறுதி-

கொழும்பு பம்பலபிட்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர் தற்கொலை செய்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின்போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியரின் மனைவி தெரிவித்திருந்தார்.