1.கேள்வி : நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை எவ்வாறு பார்க்கின்றீகள்?

பதில் : நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மிகவும் குழப்பமாகவுள்ளது. கொரோனா தொற்று பரவல் மற்றும் அதன் தாக்கம் போன்றவற்றை அரசாங்கம் தனக்கு சாதகமாக்கி தனது அரசாட்சியை தக்கவைத்து கொண்டு செல்கின்றது.

இந்நிலைமையில் மக்கள் மத்தியில் குறிப்பாக அன்றாடம் உழைத்து ஜீவியம் நடத்துவோர் நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்லவதற்கு அல்லல்படுகின்றனர்.

இதேவேளை அசியல் ரீதியாக தமிழ் மக்களும் பலவீனமான பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவற்றை அறிந்தாலும் தமிழ் கட்சிகள் ஒன்றையொன்று குறைகூறி அரசியல் செய்வதில் காலத்தை கழித்து வருகின்றன.

இந்த நிலைமைமாறி ஆகக்குறைந்தது தமிழ்மக்களின் அடிப்படை விடயங்களையாவது ஒத்தகுரலில் பேசுகின்ற அதேவேளை செயலாற்றுகின்ற நிலைமை ஒன்று உருவாகவேண்டும்.

இதேவேளை ஒற்றுமை என கூறுகின்றபோது தேர்தலை முன்னிறுத்திய ஒற்றுமையாக இருக்கக்கூடாது. இதுவரை காலம் தமிழ்கட்சிகளிடம் இருந்த ஒற்றுமை தேர்தலை மையமாகக் கொண்டமைந்திருந்தது. இதனால்தான் தமிழ்கட்சிகள் தமிழ்மக்களின் விடயங்களில் ஒன்றுமையாக செயற்பட முடியாதிருக்கின்றது.

2.கேள்வி : தற்போது தமிழ்கட்சிகளிடையே ஒற்றுமையை எற்படுத்த மீண்டும் ஒரு முயற்சி இடம்பெறுகின்றமை குறித்து என்ன கருதுகின்றீர்கள்

பதில் : கடந்த வருடம் தமிழ்கட்சிகளை உள்ளிடக்கிய தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் ஒரு ஒற்றுமை முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அதில் முன்னேற்றமும் காணப்பட்டுவந்தது. இந்த ஒற்றுமை முயற்சி அரசாங்கம் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் அனைத்தையும் ஒடுக்குவதற்கான நடவடிக்கையை தடுத்துநிறுத்துவதற்கு அமைந்திருந்தது.

திலீபனின் நினைவுதினத்தை நடத்தவேண்டும் என்ற் அடிப்படையில இந்த ஒற்றுமை முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அந்த ஒற்றுமை முயற்சி, அனைத்து தமிழ்கட்சிகளிற்குள்ளும் நிரந்தர ஒற்றுமையை உருவாக்கவில்லை.

முக்கியமாக இந்த ஒற்றுமையை குலைப்பதற்கு தமிழரசுக்கட்சி காரணமாக இருந்ததென்ற குற்றச்சாட்டும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த ஒற்றுமையிலிருந்து விலகியதும் ஒற்றுமையின் குலைவுக்கு காரணமாக இருந்தது.

இன்று இந்த அரசாங்கம் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தமிழ்மக்கள் மத்தியில் ஒரு ஒற்றுமை வேண்டும் என்ற எண்ணப்பாட்டை கட்சிகள் மத்தியிலேயே வலுவாக உருவாக்கிவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப்.உம் கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடின. இதன்போது ஒத்தகருத்துடைய தமிழ்த்தேசிய தரப்பில் இருக்கக்கூடிய தமிழ்கட்சிகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் செயல்திட்டத்தை அமுல்படுத்தக்கூடிய வகையில் ஒரு ஒற்றுமை உருவாகவேண்டும் என கருதி அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

முதலில் ஒவ்வொரு தமிழ் கடசிகளுடனும் கலந்துரையாடி ஒரு கருத்து ஒற்றுமையை உருவாக்கிய பின்னர் கருத்தொருமித்த கட்சிகள் ஒன்றாக கூடி செயற்றிட்டத்தை உருவாக்கி செயற்படுவதே இலக்காகும்.

3.கேள்வி : மாகாண சபைகளின் அதிகாரங்களை ஒவ்வொன்றாக பறிப்பது குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தநிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அண்மையில் இந்தியத் தூதுவரைச் சந்தித்தது தொடர்பில் ……….

பதில் : கூட்டமைப்புடனான பேச்சுக்களில் இந்தியத் தூதுவர் மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கான அவசியத்தை வலியுறுத்திக் கூறினார். எம்மைப் பொறுத்தமட்டிலும் அந்த அவசியத்தை நாங்களும் மிகத்தெளிவாக உணர்ந்துள்ளோம்.

தமிழ் மக்களை பொறுத்தமட்டில் அரசியல் அமைப்பில் இருக்கக்கூடிய 13 ஆவது திருத்தம் முழுமையாக தமிழ்மக்களின் அபிலாசைகளை தீர்க்காவிட்டாலும் இருகக்கூடிய ஒரே ஒரு தீர்வாக 13 ஆவது திருத்தமும் மாகாண சபை முறையுமே உள்ளது.

இந்த மாகாண சபை முறைமைகளை இல்லாமல் செய்யவேண்டும் என்பதில் இப்போதுள்ள அரசாங்கத்தின் மிக முக்கியமான பலர் தீவிரமாகவுள்ளனர். ஆகவேதான் மாகாணசபைத் தேர்தல்களை தற்போதுள்ளவாறு மக்கள் பிரதிநிதிகள் இல்லாத ஒரு சபையை வைத்திருப்பதன் மூலம் சிறிது சிறிதாக மாகாண சபை முறைமை ஒன்று இருக்கின்றது என்பது மறக்கடிக்கப்பட்டு விடலாம் என்று இந்த அரசு சிந்திக்கின்றது.

அத்துடன் அரசாங்கம் இந்த மாகாண சபையின் கீழ் உள்ள பாடசாலைகள் வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டுசெல்வதன் மூலம் பெயரளவிலான கல்வி, சுகாதார அமைச்சுகள் இருக்கும் நிலையை மாகாண சபையில் உருவாக்குவதே இந்த அரசாங்கமத்தின் நோக்கமாகும்.

ஆகவேதான் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சபையை இயக்குவதன் மூலம் மாகாண சபையை இல்லாமல் செய்யும் அரசின் நோக்கத்தை முறியடிக்க முடியும்.

4.கேள்வி : தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எவ்வாறு கையாளப்போகின்றீர்கள்.

பதில் : பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் சர்வதேச ரீதியாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்தியம்பியும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றோம். தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.

நாங்கள் மட்டுமல்ல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சில இந்த முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. புலம்பெயர் அமைப்புக்கள் சில தாம் வாழும் நாடுகளில் உள்ள அரசுகளை தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு சாதகமான தீர்மானங்களை எடுப்பதற்கு தங்களால் ஆன ஆக்கபூர்வமான செயற்பாடுகளை எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழ் தேசிய பரப்பில் இருக்ககூடிய அனைவரும் ஒருமித்த கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் கொண்டு செல்வதன் மூலம் நாம் முகம் கொடுக்கின்ற பிரச்சனைகளிற்கு நல்ல தீர்வென்றை எடுக்க முடியும் என நான் நம்புகின்றேன்.

5.கேள்வி : ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பில்…

பதில் : ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் மீண்டும் தருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுடனான அல்லது ஜனாதிபதியுடனான உத்தியோகபூர்வ சந்திப்பை இரத்துச்செய்தமைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.

ஊகங்கள் பல கூறப்படுகின்றன. ஊகங்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது. யார் விரும்புகின்றோமோ இல்லையோ நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷதான். ஆகவே தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்க்க விரும்புகின்றோம் என்றால் அவருடன் தான் பேச வேண்டும். நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பாக அவருடன் பேசுவதற்கான முயற்சிகளை தொடந்து முன்னெடுப்போம்.

6.கேள்வி : வலி வடக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பாக……

பதில்: வலி வடக்கில் மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் 2924 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஏறக்குறைய 5000 ஏக்கர் காணி விடுவிக்க வேண்டியுள்ளது. இதில் 2000 ஏக்கர் காணி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு மற்றையவை 1980களில் இருந்து இராணுவ முகாங்கள் இருக்கும் காணிகளும் போக 3000 ஏக்கர் காணி விடுவிக்கபட வேண்டும்.

பலாலி வீதிக்கு கிழக்காக 2000 குடும்பங்களின் விவசாய காணிகளில் இராணுவம் விவசாயம் செய்கின்றது. அந்த மக்கள் தொழிலின்றி வருமானமின்றி மிகவும் வறிய நிலையில் அகதி முகாங்களில் வாழ்ந்து வருகின்றார்கள்.

அதே போல சுன்னாகம் ‘சபாபதி முகாம்’ மல்லாகம் ‘நீதவான் முகாம்’ ‘கோணாபுலம் முகாம்’ அத்துடன் பருத்தித்துறையில் உள்ள அகதி முகாங்களிலும் கடற்தொழில் ஈடுபட்ட பல குடும்பங்கள் உள்ளன. அவர்களும் தொழில் செய்ய வசதியற்று வாழ்கின்றார்கள்.

மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் அரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கொடுத்த கடும் அழுத்தம் காரணமாக மேற்குறிபிடப்பட்ட 2924 ஏக்கர் காணி வலி வடக்கில் விடுவிக்கப்பட்டது. அத்துடன் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் குடியேற இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

இன்றைய ஆட்சியில் நிலங்கள் எதுவுமே விடுவிக்கப்படவில்லை என்பது மாத்திரமல்லாமல் தொல்பொருட் திணைக்களகத்தினால் பல சைவ ஆலங்களின் நிலங்கள் மற்றும் தனிப்பட்டவர்களின் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.

இவைகள் அனைத்தையும் விடுவிப்பதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகின்றோம்.

(நன்றி: ரொஷான் 11.07.2021 தினக்குரல்)