பஸ்களில் அமர்ந்து பயணிக்கும் பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய திட்டம் பெரும்பாலும் இந்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என பஸ் போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச்செல்லும் விதி பல பஸ்களில் மீறப்படுவதாக கூறினார்.
இந்த விதிமீறல்கள் தொடர்பில் கடந்த வாரம் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அமுனுகம, தடையை மீறும் பஸ் நடத்துனர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
எனினும், கைது செய்யப்பட்டாலும், கிராமப்புறங்களில் அத்துமீறல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.
இந்த நடவடிக்கை நிறுத்தப்படாவிட்டால் இந்த வாரத்தில், ஆசனங்களில் அமராத பயணிகளுக்கான பஸ் கட்டணத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என இராஜாங்க அமைச்சர் எச்சரித்துள்ளார்.
தொற்றுநோய் காரணமாக பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைகளை தாங்கள் நிறைவேற்றியதாகவும், எனவே, அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை அவர்கள் கடைப்பிடிப்பது நியாயமானது என்றும் அமுனுகம சுட்டிக்காட்டினார்.
மேலும், கட்டுப்பாடுகள் தொடர்ந்து மீறப்படும் பட்சத்தில், அமராத பயணிகளுக்கும், அமர்ந்து பயணிக்கும் பயணிகளுக்கு என தனி பஸ் பயணக் கட்டணத்தை அதிகாரிகள் அறிமுகப்படுத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய நிலைமையை மதிப்பீடு செய்து இந்த வாரத்துக்குள் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் அமுனுகம மேலும் தெரிவித்தார்.