கௌரவ நிதி அமைச்சராக இருந்த டாக்டர் என்.எம் பெரேரா அவர்கள் 50 ரூபா ,100 ரூபா நோட்டை செல்லுபடியற்றனவாக்கி , ஒழித்து வைக்கப்பட்டிருந்த பணங்களை வெளியில் கொண்டு வர வேண்டும் என்ற காரணத்திற்காக பல நடவடிக்கைளை எடுத்து சரி செய்ய முயற்சித்தார். அது மாத்திரம் அல்ல,  விசுவமடு போன்ற பகுதிகளிலே எங்கள் இளைஞர்களுக்கு காணி கொடுத்து  அவர்கள் மிக செழிப்பான வாழ்க்கை ஒன்றை உருவாக்குவதற்கு உதவிகள் செய்திருந்தார். அந்த நேரத்தில் நாடு கட்டியெழுப்பப்பட்டது.

இன்றிருக்கிற நிலையிலே,  2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திலே ‘புதியதோர் எதிர்காலத்தினை நோக்கி’ என்ற கருப்பொருளிலே நிதி அமைச்சர்,கௌரவ ஜனாதிபதி அவர்கள் எங்களுக்கு வரவு செலவுத் திட்டத்தை அளித்திருக்கின்றார். அத் திட்டம்  எந்தவித ஆரவாரம் இன்றி ,சலுகைகள் இன்றி  வாசித்து முடிக்கப்பட்டது.

இன்றைய காலகட்டத்தில் மக்களும் பெரிதாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மிகப்பெரிய சலுகைகள் கிடைத்து விடாது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். பொருளாதார நிலைமை எப்படி இருக்கின்றது என்பது நன்றாக தெரிந்ததால் அவர்களும் வரவு செலவுத் திட்டத்தை கவனமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் பூர்த்தி செய்திருக்கின்றது. எந்தவித சலுகைகளும் சாதாரண மக்களுக்கோ அல்லது தொழிலாளர் வர்க்கத்தினருக்கோ கிடைக்கவில்லை.

இன்றிருக்கின்ற நிலையில் அரச உத்தியோகத்தர்களை எடுத்துக்கொண்டால் அவர்களும், அதேபோல தனியார் நிறுவனங்களின் ஊழியர்களும்  தான் இலங்கையின் நடுத்தர வர்க்கமாக கணிக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்கள் மாற்றமடையாத நிரந்தர மாதாந்த வருமானத்தினை பெற்றுக்கொண்டார்கள்.  தங்களுடைய குடும்பத்தினது வாழ்க்கையை ஓரளவிற்கு நடாத்திக்கொண்டிருந்தார்கள். இன்று அவர்களும் கூட வறுமைக்கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டிருக்கிறார்கள் . நான் பலருடன்  கதைத்தபோது அவர்கள் வெட்கத்தை விட்டு சொல்வதாக கூறுகிறார்கள்.  சில வேளை இரண்டு நேர உணவுடன் அல்லது குழந்தைகளுக்காக தாங்கள் பட்டினியாக இருந்துகொண்டு குழந்தைகளை சாப்பிட பண்ணுவது போன்ற  நிலைமைகள் எல்லாம் உருவகி இருக்கின்றது.

இதற்காக இந்த அரசாங்கத்தினை மட்டும் நான் குறை கூறவில்லை. இது தொடர்ந்து வந்த பிரச்சனை. அதனுடைய உச்சத்திலதான் நாங்கள் இன்று நிற்கின்றோம். அதனால் தான் இவ்வளவு மிகப்பெரிய வறுமை நிலையை, வங்குரோத்து  நிலையை அடைந்து நிற்கிறோம். இவ்வாறு  வங்குரோத்து  நிலையை அடைந்துள்ள  நேரத்தில்கூட  இந்த வரவு செலவுத் திடடத்திலே பாதுகாப்பு அமைச்சுக்கும் அதோடு இணைந்த  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கும்  ஒதுக்கப்பட்டிருக்கின்ற நிதி,  முக்கியமாக செயற்பட வேண்டும் என்றிருக்கிற நிலையில் உள்ள , அதனை ஊக்குவிக்கின்றதன்  மூலம்தான் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற நிலைப்பாட்டில்  இருக்கின்ற சுகாதாரம், கல்வி, விவசாயம் போன்ற அமைச்சுக்களைவிட மிக அதிகமாக  ஒதுக்கப்பட்டிருக்கிறது.

21 ம் ஆண்டினை விட 22 ற்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டு இருந்தது. 22 ஐ விட இன்று 23 ற்கு இன்னும் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.யுத்தம் முடிவடைந்து விட்டது .ஆகவே பாதுகாப்புக்கு அமைச்சுக்கு தொடர்ந்தும் ஏன் பெரிய நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டு வருகின்றது என்ற கேள்வி பலர் மத்தியில் இருக்கின்றது. எங்கள் மத்தியிலும் இருக்கின்றது. எங்களை பொறுத்தமட்டில் பார்க்கின்ற பொழுது ஒன்று தெரிகிறது. இந்த கூடுதல் நிதி எதுக்காக பாவிக்கப்படுகின்றது என்றால் எங்கள் பகுதிகளில் இருக்கின்ற காணிகளை அபகரிப்பதுக்கு, அந்தக் காணிகளை பிடித்து வைத்துக்கொண்டு அதை வெவ்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவது போன்ற தேவைகளுக்குத்தான் அந்த நிதிகள் பாவிக்கப்படுகின்றது.

உண்மையாகவே, அன்றைய காலகட்டத்தில்,  யுத்த காலத்தில் கூடுதலாக நிதித் தேவை இருந்தது. யுத்த காலங்களில் யுத்தம் புரிவதற்காக நீங்கள் வாங்கிய ஆயுதங்கள், தளவாடங்கள் சம்மந்தமாக அதனைப் பார்க்கலாம்.அவ்வாறான தேவைகள்  இன்று இல்லாத நேரத்தில் கூட இந்த நிதிகள் எதற்காக ஒதுக்கப்படுகின்றது? இன்றும் இந்த நாடு யுத்த மனப்பான்மையில் தான் இருக்கின்றதா? இதனை நாங்கள் மிகத்தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

பாதுகாப்புக்கு அமைச்சுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியை  நிச்சயமாக குறைத்துக்கொள்ள வேண்டும். அரைவாசியாக கூட வெட்டிக்கொள்ள முடியும். அதேபோல் இன்று  நாளாந்த வருமானத்தினை எதிர்பார்த்து வாழுகின்ற மக்கள் ,அந்த குடும்பங்கள் பட்டினியாக இருக்கின்ற நிலைமையை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. அவர்களுக்கான நிவாரணங்கள் சரியான முறையில் கொடுக்கப்பட வேண்டும். வை  சரியாக கவனிக்கப்பட வேண்டும். இந்த முறை அவற்றிற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.

இன்று இருக்கக்கூடிய பொருளாதார நிலையிலே, மக்களுடைய வறுமையை போக்குவதற்கு முயற்சி எடுப்பது மிக முக்கியமான இருந்தாலும் அதை  செய்வதற்கு கால தாமதம் ,அல்லது செய்யாது விடுகின்ற நிலைமையை எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இந்த நாட்டினை பொறுத்த மட்டில் ,பேராதனை பல்கலைக்கழகத்தால் ஆய்வு செய்யப்பட்டதன்படி நாட்டில்  ஏறக்குறைய 40 வீதமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் மிக பாதிப்பான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த முடிவற்ற பொருளாதார நெருக்கடியால் வறுமை நிலைக்கு கீழ் சென்றிருக்கிறார்கள் என்று சொல்லபப்டுகிறது. அதேவேளையில்,  உலக வங்கியின் 20-21 ஆண்டு அறிக்கையின்படி வறுமை நிலையில் ஏறக்குறைய 13.1 வீதமான மக்கள் இந்த நாட்டில் இருந்திருக்கிறார்கள். ஆனால் 22 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அது 25.6 ஆக உயர்ந்து நிற்கிறது. இவ்வாறு படிப்படியாக மக்கள் வறுமை நிலைக்கு சென்றிருக்கிறார்கள்.  அவர்களை மீட்டெடுப்பதற்காக,  முக்கியமாக வரவு செலவுத்திட்டத்தினை பொறுத்த மட்டில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது. ஆனால் இவைகள் செயற்படுத்தப்பட வேண்டும். இதற்கு நிதி எங்கிருந்து வரும்? ஏனென்றால் இந்த நாட்டின் மொத்த கடன் 51 பில்லியன் டொலருக்கு கூடுதலாகும்.இதில் இறையாண்மை வரி 35 பில்லியன்  டொலர் இருக்கிறது .ஆனால் இந்த வரவு செலவுத்திட்டம் முழுமையாக ஐ.எம்.எவ் தரக்கூடிய நிதியினை எதிர்பார்த்து போடப்பட்ட வரவு செலவுத்திட்டமாகவே பார்க்கப்படுகின்றது.

எதிர்பார்க்கின்ற நிதி 2.9 பில்லியன் டொலர். இதை பார்க்கின்ற போது எவ்வாறு சாத்தியமாகப்போகிற, நாட்டினை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்ற பல கேள்விகள் இருக்கின்றது. ஒரு விடயத்தினை மறந்து விட கூடாது.  ஜனாதிபதி அவர்கள் மீண்டும் மீண்டும் பல தடவைகள் சொல்லியிருக்கிறார.  கடந்த காலங்களிலே மக்களுக்கு பிரபல்யமான தீர்மானங்களை எடுத்தார்கள் .

சில கடுமையான தீர்மானங்களை எடுக்காமல் விட்டதால் தான் இந்த நாடு இப்படி போய் இருக்கின்றது என்று.  ஜனாதிபதி கூறிய கூற்று 100 வீதம் சரி.  அவர் ஒரு இடத்தில் ஒரு உதாரணம் கூறுகின்றார்.  முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் அவர்கள் கூறியிருக்கிறார்,  நான் கடுமையான தீர்மானங்களை எடுத்தேன் அனால் பண்டாரநாயக்க அவர்கள் பிரபல்யமான தீர்மானங்களை எடுத்தார்,

அதனால் தான் இலங்கை பின்னடைவுக்கு போய் இருக்கின்றது என்று கூறியிருக்கிறார். இவர் கூறிய விடயம் நிச்சயமாக இனப்பிரச்சனைக்குரிய விடயம் தான்.

ஏனெனில், என்ன சொல்லியிருக்கிறார் என்றால் இந்த 56ம் ஆண்டின் சிங்களம் மாத்திரம்  சட்டம் பற்றித்தான். அதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த இனப்பிரச்சனை என்பது. அதன் சரித்திரத்துக்கு போக வேண்டாம். அதனால் ஏற்பட்ட அழிவுகளோ பெரிது. அதனால் தான் படிப்படியாக ஒரு யுத்தம் உருவாகி யுத்தத்திற்காக அரசாங்கம்  கோடிக்கணக்கான பில்லியன் பணத்தினை செலவழித்து இந்த யுத்தத்தினை நடாத்தி அதற்காக கடனை பெற்று ஆதன் வட்டிக்காக கடனைப் பெற்று இந்த நாடும் அழிந்து பின்னடைவுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்தது.

இதனை கூறிய ஜனாதிபதி அவர்கள், அவர் ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும். அவரும், பிரசித்தமான அல்லது மக்களுக்கு பிரபல்யமான தீர்வை எடுக்க கூடாது . இன்று இருக்கின்ற நிலையில்,  நியாயமான அரசியல் தீர்வைத்தான் முழுமையான பிரச்சினைக்கும்  தீர்வாக சொல்லுவார்கள். ஏனென்றால் தேசிய இனப்பிரச்சனை இருக்கும்  வரை நல்லிணக்கத்தை அடைய முடியாது .

நாங்கள்  பேசுகின்றோம, நல்லிணக்கம் நல்லிணக்கம் என்று. அந்த நல்லிணக்கம் பேசப்பட வேண்டும் என்றால் ஒரு நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.  இந்த அரசியல் தீர்வை முன் வைப்பதற்கு கடந்த காலங்களில்  பல விடயங்கள் நடந்திருக்கின்றன. பல முயற்சிகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. எப்போது பார்த்தால் கூட பண்டார நாயக்க காலத்திலேயே செய்யப்படட பண்டா செல்வா ஒப்பந்தம் அதுவும் இல்லாமல் போயிருக்கின்றது . தீர்வு  முயற்சிகளுக்கு கோடிக்கணக்கான காசுகள் செலவழிக்கப்பட்டு இருக்கின்றன.

2020/2021 இல்  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இருந்த காலப்பகுதியில் ஒரு நிபுணர் குழுவை அமைத்திருந்தார். அதற்கு 158 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது. அதிலே இவர்கள் 21 மில்லியன் ரூபாவை செலவு செய்திருக்கிறார்கள் என்பது  கணக்காய்வாளர் நாயகம் அவர்களுடைய அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்ட  விடயம்.

இது போல கடந்த காலங்களில் பல ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு இவைகள் எல்லாம் கிடப்பிலே  போடப்பட் டது. எதுவுமே நடைபெறவில்லை. ஓரளவிற்கு  சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரணதுங்க  இருந்த காலப்பகுதியில் கொண்டு வரப்பட்ட  பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தீர்வு ஓரளவிற்கு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. ஜனாதிபதி அவர்கள் கூறுகின்றார, வருகின்ற சுதந்திர தினத்திற்கு முன்பு  அரசியல் தீர்வு ஒன்றை கொடுப்பேன் என்று. இது நல்ல விடயம், அதை நாங்களும் எதிர்பார்த்து இருகின்றோம். இனியும் இதற்காக ஒரு தெரிவு கூட்டங்களை  நடத்தி நிதிகளை செலவழிக்காமல், பண்டாரநாயக்க  குமாரணதுங்க அவர்களுடைய தீர்வை மீண்டும் எடுத்து  அமுல்படுத்துவத்திலே எந்த  கஷ்டமும்  இருக்காது.  இந்த நாட்டிலே ஒற்றுமை கொண்டுவரப்பட வேண்டும் என்றால் சில விடயங்களை விட்டு கொடுத்து அதனை அமுல்படுத்தலாம். அதுதான் எங்களுடைய கருத்து.

இன்று, வடக்கு கிழக்குக்கு ஒதுக்கப்படுகின்ற நிதிகளுக்கு என்ன நடக்கிறது என்பதற்கு சில உதாரணங்கள் சொல்ல விரும்புகின்றேன். உலக வங்கி  நிதியில் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசத்துக்கென,  ஏறக்குறைய 7077 குடும்பங்களுக்கென  குடிநீர் வழங்க திட்டம் போடப்பட்டது .1000 மில்லியன் ரூபாய் மதிப்புடைய இந்த திட்டம் மாற்றப்பட்டு   தெற்கின் வேறு மாவட்டங்களுக்கு கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு நிச்சயமாக  தமிழர்களை ஏமாற்றமடையச் செய்கிறது.

இன்றும் கூட, நாட்டிலே பொருளாதார பிரச்ச்சினை இருந்து கொண்டு இருக்கின்ற காலத்திலும் கூட,  இவ்வாறான விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. இது போன்ற விடயங்களை இந்த அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.

திருக்கோணேஸ்வர பிரச்சினை தொடர்பில் அமைச்சர் சென்று பார்த்திருக்கின்றார்.  ஆனாலும் இது சரியான முறையில் தீர்த்து வைக்கப்பட வேண்டும். கல்முனை பிரதேச செயலக விடயம் நீண்ட காலமாக இழுபறியில் உள்ளது. இதே போல பல பிரச்சினைகளுக்கு நாங்கள் முகம கொடுக்கின்றோம்.

அந்த பிரச்ச்சினைக்ளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும்.  ஏனென்றால் இது தான் ஒரு நல்ல சந்தர்ப்பமாக நாங்கள் பார்க்கின்றோம்.  இது எமக்காக அல்ல,  இந்த நாட்டிற்காக.  இந்த நாட்டினைப்  பொறுத்த வரைக்கும் நாடு  பின்னடைவில் இருக்கின்ற போது,  மக்கள்  அனைவரும் ஒற்றுமையாக தேசிய இனப் பிரச்ச்னைக்கு தீர்வு காண்பதன் மூலம், நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை தமிழர்கள்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் அனைவரும் உருவாக்க வேண்டும். இன்று இதை செய்ய தவறுவோமாக இருந்தால்  இந்த நாட்டின் பின்னடைவை எவருமே தடுக்க  முடியாது. இதை விட மோசமாக போகும்.

ஒன்றை நாங்கள் பார்க்க வேண்டும்,  இன்று இருக்கின்ற நிலையிலே பல வைத்தியர்கள் பொறியியலாளர்கள் பலர் நாட்டை விட்டு ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.

இது நாங்கள் அறிந்த விடயங்கள். இந்த நாட்டிலே வாழ முடியாது என்பதற்காக தற்காலிகமாக சென்றாலும், அவர்கள் அங்கு தம்மை  ஸ்திரப்படுத்திவிட்டால் நிச்சயமாக திரும்பி வர மாட்டார்கள். வைத்திய நிபுணர்கள் பலர் சென்றிருக்கின்றார்கள்.  இந்த நாட்டிற்கு இது மிக பெரிய பிரச்சினையாக உள்ளது. அவர்களுடைய காரணம்,  வைத்திய தொழிலை சரியாக செய்ய முடியாமல் இருக்கிறது.  உபகரணங்கள் இல்லை, வைத்திய சாலைகளில் மருந்து இல்லை, இவைகளையாவது அரசாங்கம் தராத பட்சத்தில் இங்கு இருந்து நாங்கள் என்ன செய்வது என்ற எண்ணத்தில் விட்டு சென்றிருக்கின்றார்கள்.

இப்படியாக மக்கள் அனைவருமே ஒரு குழப்ப நிலையில் இருக்கின்றார்கள். இந்த குழப்பங்கள் தீர்க்கப்பட வேண்டும். குழப்பங்கள் தீர்ப்பதென்றால் ஒன்று பொருளாதார ரீதியாக இந்த நாடு முன்னேற வேண்டும். இந்த தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு நியாயமான தீர்வு காண வேண்டும்.  பிராந்தியங்களின் ஒன்றியமோ ,சமஸ்டி முறையிலோ மக்களை திருப்திக்கொள்ள கூடிய விதத்தில்,  நியாயமான முறையில் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு இங்குள்ள 225 பேரும் ஒத்துழைக்க வேண்டும். இதனை நீண்ட காலமாக விட்டுக்கொண்டு போக முடியாது . சுதந்திரம் கிடைக்கப்பெற்ற காலத்தில் இருந்தே ஆரம்பிக்கப்பட்ட்து.

பாகிஸ்தானிய இந்திய குடியுரிமை சட்ட்த்தின் கீழ் 10 இலடசம்  மக்கள் உரிமையற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள் . தொடர்ந்து,  இன்று கூட இந்த வரவு செலவுத்திட்டத்திலே மிகப் பின் தங்கிய நிலையில் இருக்கக்கூடிய இந்த மலையக தமிழர்களுக்கு  ஒரு நிவாரணத்தினை குறிப்பிட்டிருக்கலாம்.  அப்படி  ஒரு இனம் இருக்கிறது என்று கூட வரவு செலவுத் திட்டத்தில் இல்லை. மிகவும் கஷடப்பட்ட இனம்.  எப்படி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் துன்பப்படுகிறார்களோ அதேயளவு துன்பம் அவர்களுக்கும் இருக்கிறது .இவற்றினை நிவர்த்தி செய்வதற்கு அரசு கட்டாயமாக முயற்சி எடுக்க வேண்டும்.