மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக உள்ளிட்ட ஐவர் இன்று (24) பிற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர். மக்கள் போராட்ட இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம், கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பாலஸ்தீனத்திற்கு எதிராக முன்னெடுக்கும் ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நீதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். கடந்த 30 வருட யுத்த கால சூழ்நிலையின் போது, வடக்கில் எந்தவொரு இளைஞர் யுவதிகளுக்கும் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.