உள்ளூராட்சி மன்றங்களுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள 8400 ஊழியர்களுக்கும் விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 180 நாட்களுக்கு மேல் பணிபுரியும் சாதாரண தொழிலாளர்கள் இதன் மூலம் உறுதி செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் துரித அபிவிருத்தி இலங்கையின் அபிவிருத்திக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டாவது உலக தெற்கின் குரல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியினால் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரிச்சுமை, வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் தேசிய வளங்களை விற்பனை செய்தல் மற்றும் அடக்குமுறை சட்டங்களை இயற்றுவதற்கு எதிராக அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தெல்கந்த சந்தியில் இருந்து பிற்பகல் 3 மணியளவில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகியிருந்தது.
சுகாதார அமைச்சின் செயலாளராக விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த ஓய்வுபெறவுள்ள நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக சில காலம் செயற்பட்டிருந்தார். பின்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் உயர் பதவிகளிலும் அவர் செயற்பட்டிருந்தார்.
நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் EXIM வங்கிக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை, Paris Club உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை மேற்கோள்காட்டி, Bloomberg செய்தி சேவை இதனை தெரிவித்துள்ளது. இதன் ஊடாக இந்த ஆண்டு இறுதிக்குள் கடன் வழங்குனர்கள் தங்கள் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த பெண் கடந்த 8ஆம் திகதி பிற்பகல் 1 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றதாகவும் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் காணாமல்போன பெண்ணின் கணவரினால் வவுனியா காவல்நிலையத்தில் நேற்று (16) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) மாலைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி மொஹமட் முய்ஸுவின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி மாலைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் என்பவற்றை இன்று முதல் முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு குறித்த ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 15ஆம் திகதி வரை அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினர் ஆகியோர் குறித்த ஆணைக்குழுவில் தமது யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வர்த்தமானி அறிவித்தல் அமுலாகின்றது. மன்னார் மற்றும் இந்தியா இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதே இதன் நோக்கமாகும்.