இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் போது தமது கடமைகள் தொடர்பான தரவுகளை அதிகாரிகள் வழங்க மாட்டார்கள் எனவும் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் S.போப்பிட்டிய தெரிவித்தார். போக்குவரத்து கொடுப்பனவை அதிகரிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர். மருதானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 21 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் பிரிவிற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்து பேரணியை ஆரம்பிக்க முயன்ற போது பொலிஸார் அதற்கு இடையூறு விளைவித்தனர்.

சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு மாணவர்கள் சிலருக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. எவ்வாறாயினும், மருதானை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுப்பட்டிருந்தவர்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.