• தீபாவளிக்கு மறுநாள் 13ம் திகதி மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் அன்றையதினம் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் இவ்விசேட விடுமுறைக்கான பதில் பாடசாலை 18 ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் எனவும் மாகாண கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.
• மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸாரினால், வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர். அல்வாய் கிழக்கை சேர்ந்த பழனிப்பிள்ளை தில்லைராணி (வயது 84) எனும் மூதாட்டி ஒக்டோபர் 5ஆம் திகதி வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். நெல்லியடி பொலிஸார் 32 மற்றும் 28 வயதுடைய தம்பதியினரையும், மூதாட்டியின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த 19 வயது யுவதியையும் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
• இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்து சடலமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வத்தளை வென்னப்புவவைச் சேர்ந்த சுஜித் பண்டாரவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு இஸ்ரேல் அரசாங்கம் வழங்கி வரும் அனைத்து இழப்பீடுகள் மற்றும் கொடுப்பனவுகளை சுஜித் அவர்களுக்கும் பெற்றுக் கொடுக்க பணியகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
• உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதில் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என அக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அதிகாரவர்க்க கட்டுப்பாட்டின் கீழ் மாகாண சபைகளை தொடர்ந்தும் நடத்துவது நாட்டின் ஜனநாயகத்துக்கு மரண அடி என்றும் அவர் கொழும்பில் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். ‘ஜனாதிபதித் தேர்தலை விரைவில் நடத்தவும் முடியாது, தாமதிக்கவும் முடியாது. 2024 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரையான காலப்பகுதிக்குள் நடத்தப்பட வேண்டும்.’ என்றார்.
• வீசா காலாவதியான சுமார் 100 இலங்கை இளைஞர்கள் ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இந்த இலங்கையர்களின் வீசா காலாவதியாகியுள்ள போதிலும், அவர்களை நாட்டுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது. உரிய நிறுவனம் தமது சம்பளத்தை வழங்காமல் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதனால் தாம் மீண்டும் இலங்கைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு பணிபுரியும் இலங்கையர்கள் பலர், இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
• இத்தாலியில் பதிவு செய்யப்பட்ட அதி சொகுசு கப்பல் ”AIDAbella’ இலங்கை வந்தடைந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த கப்பல் இன்று (10.11.2023) கொழும்பை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
• கிளிநொச்சி – பூநகரி, பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு திட்டத்திற்கு எதிராக அப்பிரதேச பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தை ஆரம்பித்து 100வது நாளான இன்று இவ் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது. பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவில் 1200 ஹெக்டேயர் பரப்பளவில் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ள டோக்கியோ நிறுவனம் செய்யும் முயற்சிகளுக்கு கிராஞ்சி, பொன்னாவெளி, வலைப்பாடு, வேரவில், பலாவி பகுதிகளின் அனைத்து மக்கள் ஒன்றியம் சார்பாக பொது மக்கள் இன்று நூறாவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.